ஜனநாயகம் என்பது என்ன? - தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

ஜனநாயகம் என்பது என்ன? - தந்தை பெரியார்

நமது நாட்டில் இப்பொழுது நடைபெற்று வரும் சர்க்கார் - தங்களை மக்கள் சர்க்கார் என்றும், மக்களுக் காகவே தாங்கள் பதவியிலிருப்பதாகவும் கூறிவரு கிறார்கள். சொல் மிக அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், செயலைப் பார்க்கும்போது ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப் பதாகவே மக்கள் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஜனநாயகம் என்று சொன்னால் 1.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் 2.அரசாங்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துதல் 3. அரசாங்கத்தின் பிற்போக்கான செய்கைகளை வெளிப்படையாகக் குறை கூறுவது போன்ற உரிமைகள் பொதுமக்களுக்கு உண்டு என்றுதான் அர்த்தம். அவ்வாறில்லாமல் ஒரு கட்சி பதவிக்கு வந்து விட்டால் அந்தக் கட்சி பதவியில் அப்படியே நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவே, பதவியில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி எதிர்த்துப் பேசக் கூடாது என்பது அல்ல.

தேர்தல் காலங்களில் மட்டும்தான் கட்சி ரீதியில் வேலை செய்து அவரவர்கள் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று பாடுபடவேண்டும். அதன் பிறகு கட்சி அனுதாபத்தையோ அல்லது கட்சி நலன்களையோ சிறிதும் கருதாமல் நாம் மேலே குறிப்பிட்ட பொக்கிஷம் போன்ற மூன்று உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் ஆதர வில்லாமல் சர்க்கார் கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதென்பதை எடுத் துக்காட்டவும், அதிகார வர்க்க சட்டதிட்டங்களையும், முக்கியமாக ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக் கூடிய போக்கையும் கண்டிப்பதற்காகவும், சாதாரணப் பாமர பிரஜைக்குக் கூட சுதந்திரம் இருக்கவேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தொழிலாளர்கள் ஏதாவது கூறினால் இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் தூண்டுதல் - கம்யூனிஸ்டுகள் இப்போதுள்ள சர்க்காரைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்கள் என்ற பழி போட்டுத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன.

பதவியிலிருக்கும் சர்க்கார் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகமா? அதை மாற் றுவது (கவிழ்ப்பது) குற்றமென்று சொல்லப்படுமானால், பிரகாசம் மந்திரிசபையை கவிழ்த்தவர்களெல்லாம் யார்? இப்போதுள்ள ஓமந்தூரார் மந்திரி சபையைக் கவிழ்க்கச் சில மாதங்களுக்கு முன்னர் முயற்சி செய்த வர்கள் யார்? ஏன் - எப்பொழுதும் ஓமந்தூரார் மந்திரி சபைக்கு என்னென்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அவ்வளவையும் உள்ளுக்குள்ளிருந்து கொண்டே செய்துகொண்டு வருகிறவர்கள் யார்? இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தால் இப் போதைய சர்க்காரைக் கவிழ்க்கவோ, சர்க்காருக்குத் தொல்லை கொடுக்கவோ விரும்பும் ஒன்றாம் நம்பர் அயோக்கியர்கள் யார் என்பது தெரியாமல் போகாது.

உண்மையில் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தலைவர் பெரியார் அவர்கள் பல தடவை எடுத்துக் கூறிய பிறகும், திராவிடர் கழகத்தாருக்குச் சர்க்காரைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவோ, ஏதோ ஒரு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்ப தாகவோ யாராவது கூறுவார்களானால், ஒன்று, அவர்கள் அரசியலே தெரியாத அப்பாவிகளாக இருக்கவேண்டும்; இல்லையேல், எல்லாம் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே கோய பல்ஸ் பிரச்சாரம் செய்கிற அயோக்கியர்களாய் இருக்க வேண்டும். சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையிலும் இன்றைக்கு ஒரு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த தோழர் சிவசண்முகம் சட்டசபைத் தலைவராக இருக்க மற்றவர்கள் சம்மதிப்பதற்கும், எவ்வளவு முயற்சி செய்தாலும், ஓமந்தூராரைக் கவிழ்த்தாலும், மற்றொரு சுப்பராயனைத்தான் பிரதமராகக் கொண்டு வர முடியும் என்று மற்றவர்கள் நினைப்பதற்கும், யாருடைய சேவை காரணம் என்பதை தேசியத் தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். அப்படியிருந்தும் ஏன் இப் போதைய மந்திரிகளையும், கவர்னர் - ஜெனரல் வரு கையையும் எதிர்க்கிறீர்கள்? அதற்கு அடையாளமாகக் கருப்புக்கொடி ஆட்ட விரும்புகிறீர்கள்? என்று கேட்டீர் களானால், அதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறோம்.

திராவிடர் கழகத்தாருடைய ஆசையெல்லாம் திராவிடர்கள் அதாவது தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி, அவினாசிலிங்கம், பக்தவச்சலம் போன்றவர்கள் மந்திரிகளானால், மட்டும் போதாது, வந்துள்ள நமது மந்திரிகளுக்குச் சுதந்திரம் வேண்டும்; அவ்வாறில்லாமல், அவர்கள் முதுகுப்புறம் கயிற்றைக்கட்டி அதை வட நாட்டான் கையில் வைத்துக் கொண்டு ஆட்டுகிறபடி யெல்லாம் ஆடவேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது என்பதேயாகும்.

இதை வேறு பாஷையில் சொல்லவேண்டுமானால், இப்போதுள்ள மந்திரிமார்கள் இவர்களை மந்திரி களாக்கிய மக்களின் விருப்பப்படி நடவாமல் தொட்டது தொண்ணூறுக்கும் “அனுமான்” (சென்னை சர்க்கார் விமானம்) மூலம் டில்லிக்குப் பறந்து சென்று அங்கு கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ ராமபிரானை (சமீபத்தில் அன்பர் ஆச்சாரியார் கவர்னர் ஜெனரல் தான் அல்ல வென்றும், ஸ்ரீ ராமர்தான் என்றும் சொல்லியிருக்கிறார்) லட்சுமணரையும் கேட்டு அவர்கள் உத்தரவுப்படியே இங்கு காரியங்கள் செய்து வருகிறார்களே அந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் - ஒழியும் வரை இவர்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் - அதுவும் சாத்வீகமாக ஜனநாயக உரிமைப்படி நமது எதிர்ப்பைக் கறுப்புக்கொடி ஆட்டுவதன் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கருதி, அந்த முறையில் நாம் நடந்து வருகிறோம். ஆளுகிறவர்கள் நேர்மையுள்ளவர்களானால் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்; “அதெல்லாம் முடியாது நான் தொட்டுக் கொண்டு கூட தின்பேன். நீ என்ன கேட்பது?” என்ற தோரணையில் நடப்பதானால்கூட ஜனநாயக உரிமைப்படி திராவிடர் கழகத்தாரின் எதிர்ப்புக்கு வசதியளிக்க வேண்டும். அவ்வளவு தாராள புத்தியில்லை என்றால், தைரியமாக “எங்களை எதிர்த்து யாரும் கருப்புக்கொடி ஆட்டக் கூடாது. எங்கள் ஜனநாயக அகராதி அப்படித்தான். மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி ஆட்டுவதைத் தடை செய்யும் மசோதா சட்டம் ஆக்கிவிட்டோம்” என்றாவது சொல்லி விடவேண்டும். அவ்வாறில்லாமல் மற்ற நாட்டாருக்கு இங்கு நடப்பது ஜனநாயகம் என்று காட்டிக் கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் இங்கு பழைய காட்டுராஜா கால ஆட்சி நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு கருப்புக் கொடி காட்ட விரும்புகிறவர்கள் மீது “பொதுஜன அமைதியைக் குலைப்பவர்கள்” என்ற பழிபோட்டுச் சிறையில் வைப்பதென்றால், இதை என்ன ஆட்சி என்று சொல்வது என்பதே நமக்குப் புரியவில்லை. ஆனால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆளுகிறவர்கள் யாருமே தங்கள் நடவடிக்கைகளை எதிர்க்கிறவர்கள் மீது எதையோ ஒரு பழி சுமத்தித்தான் அடக்கப் பார்ப்பார்கள் இதை நாம் எதிர்பார்க்காத விஷயமல்ல.

ஆகவே, திராவிடர் கழகத் தோழர்கள் எதற்கும் அஞ்சாது - ஆனால், பெரியாரவர்கள் கட்டளைக்கு இணங்க - ஒரு எழுத்தும் பிசகாமல் அன்றாடம் அவரவர்கள் ஊர்களில் ஊர்வலங்களும், அடிக்கடி பொதுக்கூட்டங்களும் நடத்தி நமது போராட்டத்தில் வெற்றிபெறும்வரை சலியாது உழைக்க வேண்டுகிறோம். எந்த எந்த ஊர்களுக்கு மந்திரிமார்கள் வருவதாகத் தெரிகிறதோ அங்கு எல்லாம் தோழர்கள், கருப்புக் கொடி (மத்தியில் சிவப்பு இல்லாமல்) காட்ட வேண்டு கிறோம். உலகிலுள்ள எல்லா ஜனநாயக நாடுகளிலும் கருப்புக்கொடி பிடித்தல் அனுமதிக்கப்பட்டே வந்தி ருக்கிறது. அப்படியிருக்க, நமது மந்திரிமார்கள் கருப்புக் கொடி காட்டுதலைச் சகிக்காமல் முன்னதாகவே தடுத்து சிறைப்படுத்திவிட்டுத்தான் ஊர்களில் பிரவேசிப்ப தென்ற முறையில் நடந்து வருவார்களானால், அதாவது, சமீபத்தில் பிரதமர் ரெட்டியார் அவர்கள் நாகர்கோவிலில் நடந்து கொண்டது போலவும், திண்டுக்கல்லில் இதல இதாபன மந்திரி தோழர் சந்திர மவுளி அவர்கள் நடந்து கொண்டது போலவும், இவர்களை யெல்லாம்விட நமது மதிப்பிற்குரிய கவர்னர் - ஜெனரல் அவர்கள் அவரது ஆத்மநண்பரான நமது பெரியார் அவர்களையும், நம் தளபதிகளையும், தோழர்களையும் சிறையில் வைத்துவிட்ட பின்னர் சென்னை நகரில் பவனி வந்ததைப் போலவுமே இனியும் நமது மந்திரிமார்கள் நடப்பார்களானால், அவைகளை நல்லதொரு வாய்ப்பாகவே கருதி ஏராளமான பேர்கள் கருப்புக் கொடி காட்ட முன்வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

கடைசியாக நமது தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது தலைவர் பெரியார், தளபதி மற்றும் பல முக்கியத் தோழர்கள் அனைவரையும் சர்க்கார் கைது செய்து விட்டார்கள். இந்தச் சமயத்தில் வெளியிலுள்ள நமக்குப் பொறுப்பு அதிகம். தலைவர்கள் வெளியில் இருந்த காலத்தில் நடந்து கொண்டதைவிடப் பலமடங்கு நாம் பொறுமையாகவும், அடக்கமாகவும், போலீசாருக்கு அவர்களது கடமைகளை செய்வதில் எவ்வித இடையூறு இல்லாத வகையிலும் நடந்து காண்பிப்பதன் மூலம் சர்க்கார் வெட்கித்துப்போய், தலைவர்களைக் கைது செய்து விடுவதால் பயன் ஒன்றும் இல்லை என்று உணர்ந்து கைது செய்தவர்களை யெல்லாம் விடுதலை செய்துவிட வேண்டிய நிலை மையை உண்டாக்க வேண்டும். 

ஆகவே, தோழர்களே! நம் தலைவர்களின் விடுதலை நம் கையில் இருக்கிறது; நம் செயலில் இருக்கிறது என்பதை உணருங்கள்! ஆவன அயராது செய்யுங்கள்! என்று வேண்டிக் கொள்கிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 28.08.1948 


No comments:

Post a Comment