உளுந்தூர்பேட்டை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

உளுந்தூர்பேட்டை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை

 நாட்டிற்கு தீயணைப்புத் துறை - காவல்துறை எப்படி பொதுவானதோ அதுபோல -

சமூகப் பாதுகாப்பிற்கு கருப்புச் சட்டைப் படையாக இருப்பது திராவிடர் கழகம்! 

‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்''

உளுந்தூர்பேட்டை, ஜூன் 25 எப்படி தீயணைப்புத் துறை பொதுவானதோ - தேவையானதோ - எப்படி காவல் துறை தேவையானதோ - அதேபோன்று இந்த நாட்டிற்கு, சமூகத்திற்கு, பாதுகாப்பிற்குக் கருப்புச் சட்டைப் படையாக திராவிடர் கழகம் தேவையானது;   மக்களை ஆயத்தப்படுத்துகின்ற பணியை செய்வதுதான் கருப்புச் சட்டைக்காரர்களுடைய வேலை. ‘‘கருப்புச் சட்டைக் காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்''என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

10 மாவட்டங்களின் கலந்துரையாடல்

கடந்த 18.6.2023 அன்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 10 மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

வீடுகளில், வாகனங்களில் 

நமது கழகக் கொடி பறக்கட்டும்!

அது நமக்கு பெரிய பாதுகாப்பு. இதைவிட பெரிய பாதுகாப்பு நமக்கு வேறு ஏது? யாராவது வந்து வீட்டின் மேல் ஏற்றியிருக்கும் கொடியைப் பார்த்தால், ‘‘ஓகோ, இது திராவிடர் கழகத்துக்காரர் வீடு - எல்லாம் சரியாகத்தான் இருக்கும்'' என்று போய் விடுவார்கள்.

இரண்டாவதாக, சாலையில் போகும்பொழுது நம்மு டைய வாகனத்தில் கொடி இருந்தது என்றால், என்னு டைய அனுபவத்தை நான் சொல்கிறேன்; மருத்துவமனை போன்ற இடங்களுக்குச் செல்லும்பொழுது, கார் ஓட்டுநரிடம் கழகக் கொடியை எடுத்துவிடுங்கள் என்று சொல்வேன்; பரவாயில்லீங்க இருக்கட்டும் என்பார்.

காரில் கொடி ஏற்றிவிட்டுச் செல்லும்பொழுது, மக்கள் காட்டுகின்ற அன்பு இருக்கிறதே, அது தனி அலாதியானது. ஆகவேதான், அது நமக்கும் பாதுகாப்பு - எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு.

இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிக்காதீர்!

இரண்டு சக்கர வாகனங்கள் வைத்துக் கொண் டிருப்பவர்கள் இல்லாதவர்களே இல்லை. ஆனால், ஒரே ஒரு அன்பு வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இயக்கக் கொடி கட்டிக் கொண்டு போகிறீர்களோ இல்லையோ - அதைவிட மிக முக்கியமானது என்னவென்றால், நம்முடைய தோழர் நீலமேகத்திடம் நான் அடிக்கடி சொல்வேன் - தலைக்கவசம் அணியாமல் செல்லாதீர்கள் என்பதுதான். 

இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் தோழர் கள் கொடி கட்டிக்கொண்டு சென்றால், மகிழ்ச்சி. ஆனால், அதை ஓட்டுகின்றவர்கள் யாராக இருந்தாலும், ஹெல்மெட் என்கிற தலைக்கவசம் அணியாமல் செல்லக்கூடாது.

நீலமேகம் இப்பொழுது தலைக்கவசம் அணிந்துதான் இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை; நான் கண்டிப்புடன் சொன்னதால், இப்பொழுது தலைக்கவசம் அணிகிறார்.

துக்கம், துயரம் இன்னமும் 

என்னை விட்டு அகலவில்லை!

ஏனென்று கேட்டால் நண்பர்களே, தலைக்கவசம் அணியாமல் சென்றதால், நிறைய தோழர்களை நாம் இழந்துள்ளோம். அந்தத் துக்கம், துயரம் இன்னமும் என்னை விட்டு அகலவில்லை.

ஆகவே, தோழர்களே, இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து நடந்தாலும், தலைக்கவசம் அணிந்திருந்தால், ஏற்படக்கூடிய இழப்பைத் தடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும்.

அதற்கடுத்து நண்பர்களே!

கொடி - கூட்டம் நடத்தும்பொழுது ஒரு கொடியை ஏற்றவேண்டும். இன்றைக்குக்கூட தோழர் கலைமணி வீட்டில் ஒரு கொடியை ஏற்றினோம்.

அதற்கடுத்து மிக முக்கியமாக அதற்கருகிலேயே ஒரு செடி. ஏனென்றால், இன்றைக்கு சுற்றுச்சூழலுக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்தச் சுற்றுச்சூழலைக் காப்பாற்றவேண்டியது நம்மைப் போன்றவர்களின் பொறுப்பாகும்.

இதுபோன்ற வெப்பத்தில் நாம் அவதிப்பட்டதே கிடையாது. காலச் சூழல் மாறிப்போனதின் காரணமாகத் தான் இதுபோன்ற நிலை.

ஆகவே, சுற்றுச்சூழலை நம்முடைய இயக்கம் பாது காக்கவேண்டும். நம்முடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் (நிகர்நிலை) இருக்கின்ற சிறப்பே என்னவென்றால், அங்கே வருகின்ற அத்துணை பேரும் செடி நடவேண்டும் என்று சொல்லி, அதுபோன்றே செய்தோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆச்சரியப்பட்டார்!

பல்கலைக் கழகம் தொடங்குவதற்கு முன்பாக, பெண்களுக்கான பொறியியல் கல்லூரியைத் தொடங்கினோம், 1989 ஆம் ஆண்டு. அப்பொழுது கலைஞர் அங்கே வந்தார்.  அவருடைய துணை வியார் ராஜாத்தி அம்மையாரும், அவரும் சேர்ந்து மாஞ்செடி நட்டார்கள். அந்தச் செடியைப் பாது காத்து மரமாகி, கனி காய்க்கத் தொடங்கியவுடன், அந்த மாம்பழங்களைக் கொண்டு போய் கலைஞரிடம் கொடுத்ததும், அவர் ஆச்சரியப்பட்டு, ‘‘பல இடங்களில் நான் செடி நட்டு வைத்துவிட்டு வருவேன்; ஆனால், யாரும் இப்படி மாங்கனி களைக் கொண்டு வந்து கொடுத்தது கிடையாது; இதுதான் திராவிடர் கழகத்திற்கும், மற்றவர்களுக் கும் உள்ள வித்தியாசமாகும்'' என்று சொன்னார்.

ஆகவே, கட்டாயமாக  கொடி - செடி. மூன்றாவதாக ஒன்று உள்ளது. அதையும் இங்கே வலியுறுத்தினார்கள்.

படி என்பதுதான் அது. படி என்று சொன்னால், பள்ளிக்கூடத்திற்குப் போய்தான் படிக்கவேண்டும் என்பதல்ல; ‘விடுதலை'யைப் படிக்கவேண்டும். படிப் பகம் என்பதில், முதல் இரண்டு எழுத்து படி!

கொடி - செடி -  படி!

மேற்கண்ட மூன்றையும் செய்தால், நம்முடைய இயக்க வளர்ச்சிக்காக தனியே நாம் முயற்சி செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

70 ஆண்டுகளுக்கு முன்பு 

மண்ணை வாரி இறைத்தனர்!

நான் இங்கே வந்து கடந்த முறைகூட இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன்; உங்கள் ஊருக்கு முதன் முதலாக நான் மாணவப் பருவத்தில் இருக்கும்பொழுது திராவிடமணி அவர்களோடு வந்தபொழுது, மணி கூண்டுக்கு அருகில், மண்ணை வாரி இறைத்து, கல் கொண்டு எறிந்து கூட்டத்தை நடக்கவிடாமல் செய்தனர். இது நடந்தது 70 ஆண்டுகளுக்கு முன்பு. மேஜைமீது ஏறி நின்று பேசிய 11 வயது சிறுவனாக இருந்த காலகட்டத்தில்.

அந்த உளுந்தூர்பேட்டையில், நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்துகொள்ளக்கூடிய ஓர் அற்புதமான 10 மாவட்டக் கமிட்டியை நாம் இன்றைக்கு நடத்துகின்றோம். திருமண நிகழ்ச்சிகள் - கடந்த ஆண்டு பொதுக்கூட்டம் சேந்தநாட்டில். இன்றைக்கு அதே ஊரில் திருமணம் ஒரு மாநாடு போன்று நடந்தது. எல்லாக் கட்சித் தோழர்களும் நம்மை வரவேற்கக்கூடிய உணர்வுகள் இருக்கின்றன.

திராவிடர் கழகத்தினுடைய தனித்தன்மை!

நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இரட்டை வேடம் போடாதவர்கள்; திராவிடர் கழகத்தினு டைய தனித்தன்மை, பெரியார் தொண்டர்களுடைய தனித்தன்மை அதுதான். உள்ளத்தில் என்ன நினைக்கின்றோமோ, அதுதான் உதட்டு வழியாக வார்த்தையாகவும் வெளிவரும்.

ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்; இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது; வயதான தோழர் களுக்கு, நினைவாற்றல் இருக்கக்கூடிய தோழர் களுக்கு நான் சொல்லக்கூடிய நிகழ்வுபற்றி தெரியும்.

அய்யாவின் வேன் பழுது; லாரியில் 

பயணம் செய்தார் தந்தை பெரியார்!

சேலத்தில் மிக முக்கியமானவர் சேலம் ரத்தினசாமி பிள்ளை என்று சொல்லக்கூடியவர், நகராட்சித் தலை வராக இருந்தவர் - நீதிக்கட்சி காலத்திலிருந்து - அய்யாவிற்கு மிகவும் வேண்டியவர்.

அவரின் இறப்புச் செய்தி அறிந்து அங்கே சென்றுவிட்டு, அடுத்த நாள் காலையில் சென்னை மயிலாப்பூரில் தோழர் அழகேசன் அவர்களுடைய இல்லத்து நாட்டிய அரங்கேற்ற விழா. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் பெரியார் அய்யா ஒப்புக்கொண்டார்.

பெரியார் அய்யா எவ்வளவுதான் உடல்நலக் குறை வாக இருந்தாலும், ஒப்புக்கொண்ட நிகழ்விற்குச் செல் லாமல் இருக்கமாட்டார். ஏனென்றால், நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக்கூடாது.

‘‘ஒப்புக்கொண்டேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்குக் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்'' என்று கழகப் பேச்சாளர்களிடமும், தலைவர் களிடமும் சொல்வார்.

இப்படிப்பட்ட சூழலில், சேலம் நிகழ்வுக்காக சென்னையிலிருந்து இரவு புறப்பட்டோம்; புலவர் இமயவரம்பனும், நானும் அய்யாவுடன் சென்றோம். உளுந்தூர்பேட்டை அருகில் வேன் பழுதாகி (ரிப்பேர்) விட்டது. மெக்கானிக்கும் வந்து பார்த்துவிட்டு,  நீண்ட நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டார். 

எனது அண்ணன் கடலூர் தண்டபாணி அவர்கள் பியட் கார் வைத்திருந்தார். தபால் நிலையத்திற்குச் சென்று கால் புக் செய்து, அவரை தொடர்பு கொண்டு பேசினேன். ‘‘அய்யாவின் வேன் பழுதாகிவிட்டது; அய்யா வேனிலே இருக்கிறார்; அவருக்கு காய்ச்சலாக இருக்கிறது.  உங்கள் காரை அனுப்புங்கள்'' என்றேன்.

அய்யா அவர்கள் எழுந்தார்; என்னப்பா, சரி செய்தாகிவிட்டதா? என்று கேட்கிறார்.

மெக்கானிக்கும், இன்னும் அரை மணிநேரத்தில் முடிந்துவிடும்; இதோ அதோ என்று சொல்கிறார்.

அப்பொழுது, விடியற்காலை 3 மணி இருக்கும்.  அந்த வழியாக ஒரு பெரிய லாரி, சேலத்திலிருந்து சென்னைக்குச் செல்கிறது. அய்யா வேன் நிற்பதைப் பார்த்த அந்த லாரி ஓட்டுநர், ‘‘அய்யா என்னங்க ஆச்சு? என்ன செய்யவேண்டும்?'' என்று ஓட்டுநர் இறங்கி வந்து கேட்கிறார்.

யார் நீங்கள்? என்று அய்யா கேட்கிறார்.

நான் லாரி ஓட்டுர் அய்யா, சென்னைக்குச் செல்கிறேன் என்கிறார்.

உங்கள் லாரியில் இடம் இருக்கிறதா? என்று அய்யா கேட்டார்.

லாரி ஓட்டுநர் வெலவெலத்துப் போய், ‘‘அய்யா எனக்குப் பக்கத்தில் இடம் இருக்கிறது; ஆனால், மிகவும் உயரமாச்சே அய்யா'' என்றார்.

‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை; உங்களுக்கு ஆட் சேபனை இல்லை அல்லவா! என்னை அழைத்துக் கொண்டுபோங்கள்; ஒருவர் பின்பக்கம் ஏறிக்கொள் ளட்டும்'' என்று சொன்னார்.

‘‘இமயவரம்பன், பின்னால் ஏறிக்கொள்'' என்றார் அய்யா.

லாரி எவ்வளவு உயரம் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அய்யா அவர்கள் ஏறி, லாரி ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்துகொண்டார்.

‘விடுதலை'யில் இந்தச் செய்தியை பெட்டிச் செய்தி யாகப் பதிவு செய்திருக்கின்றோம்.

அய்யா அவர்கள் சால்வையைப் போர்வை போன்று போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ஓட்டுநர் பயந்துகொண்டே லாரி ஓட்டுகிறார்.

‘‘நீங்கள் போங்கள், பரவாயில்லை! நல்லா இருக்கு, நல்லா இருக்கு''  என்று அய்யா சொல்கிறார்.

அய்யா, கடலூரிலிருந்து கார் வரச் சொல்லியிருக் கிறேன் என்று சொன்னவுடன், வேண்டாம், கார் வந்து சேருவதற்குத் தாமதமாகும்; லாரியிலேயே செல்லுகிறேன் என்று சொன்னார்.

வேனை சரி செய்து எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் உளுந்தூர்பேட்டையிலேயே இருந்தேன்.

அய்யா சென்ற லாரி, விழுப்புரம் அருகே சென்று கொண்டிருக்கிறது. லாரியின் பின்பக்கம் புலவர் இமய வரம்பன் மட்டும்தான் நின்று கொண்டு சென்றார்.

ஒரு மணிநேரத்திற்குள் வேனை சரி செய்துவிட்டார் மெக்கானிக்.

நான், வேன் ஓட்டுநரிடம், வேகமாக வண்டியை செலுத்துங்கள்; அய்யா செல்லும் லாரியை நிறுத்தி, அய்யாவை வேனில் ஏற்றிக்கொள்ளவேண்டும். பாது காப்பாகவும் செல் என்று சொன்னேன்.

கெட்டிக்கார ஓட்டுநர் அவர்; மதுராந்தகம் அருகே அந்த லாரியைப் பிடித்தோம். லாரி ஓட்டுநர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு, லாரியை ஓரங்கட்டி நிறுத்தினார். நாங்களும் வேனை நிறுத்தினோம்.

‘‘என்ன?'' என்று கேட்டார் அய்யா.

அய்யா, வேனை சரி செய்து எடுத்து வந்துவிட்டோம்; நீங்கள் வேனிலேயே வரலாம்'' என்றேன்.

லாரி ஓட்டுநரின் மகிழ்ச்சி!

லாரி ஓட்டுநர் அய்யாவிடம், ‘‘என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பெருமை கிடைக்காது; நான் என்ன பாக்கியம் செய்தேனோ, என்று தெரியவில்லை'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

அய்யா, இறங்குங்கள், போகலாம் என்கிறேன்.

தந்தை பெரியாரின் மனிதநேயம்!

ஏம்பா, எனக்கு நெருக்கடி இருந்தது; அந்த நெருக்கடியான நேரத்தில், இந்த லாரி ஓட்டுநர், என்னைப் பார்த்து, லாரியை நிறுத்தி, வாருங்கள் என்று சொல்லி என்னை எவ்வளவு ஆசையாக அழைத்தார். நான் பொட்டுன்னு கீழே இறங்கி விட்டால், அவர் மனசு பொட்டுன்னு போயிடாதா? அதனால், நான் லாரியிலேயே வருகிறேன்'' என்று சொன்னார்.

அய்யாவினுடைய மனிதநேயத்தைப் பாருங்கள்; அவருடைய கஷ்டத்தைப்பற்றியோ, பாதுகாப்பைப் பற்றியோ நினைக்கவில்லை. அவருக்குப் பணிகள் நடக்கவேண்டும்; அது லாரியா, பேருந்தா, கட்டை வண்டியா என்பதுபற்றி கவலையில்லை.

உடனே லாரி ஓட்டுநர், ‘‘நீங்கள் வேனில் போவதுதான் உங்கள் உடல்நலத்திற்கு நல்லது; நீங்கள் என் லாரியில் வந்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது'' என்று கைகளைக் கூப்பிச் சொல்கிறார்.

பொழுது விடிய ஆரம்பிக்கும் நேரம் என்பதால், கூட்டமும் சேர ஆரம்பித்தது.

பிறகு, அய்யாவைப் பிடித்து இறக்கிவுடன், வேனில் ஏறி பயணம் செய்தார்.

எடுத்துக்கொண்ட காரியத்தில், 

அதை சாதிக்காமல் 

பெரியார் இருந்ததே கிடையாது!

லாரியில் பயணம் செய்துவிட்டு கீழே இறங்கும் பொழுது என்ன சொன்னார் என்பதை நன்றாக நீங்கள் கவனிக்கவேண்டும்.

‘‘நமக்கு ஆபத்தான, இக்கட்டான நேரத்தில், நமக்கு இடம் கொடுத்து அழைத்து வந்தார் பாருங்கள்; அவரோடு கடைசி வரை நாம் சென்றால்தானே, அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நான் பாதியிலேயே இறங்கிவிட்டால், அவருடைய மனது பொட்டுன்னு போயிடும் அல்லவா'' என்றார்.

இந்த நிகழ்விலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், எடுத்துக்கொண்ட காரியத்தில், அதை சாதிக்காமல் பெரியார் இருந்ததே கிடையாது.

அதேநேரத்தில், அய்யாவின் மனிதாபிமானத்தை நினைத்துப் பாருங்கள். உதவி செய்தவர்களின் மனம் நோகக்கூடாது என்பதைப்பற்றி கவலைப்படுவது.

லாரியிலிருந்து இறங்கிய அய்யா அவர்கள், அவரு டைய பையிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தார். அந்த லாரி ஓட்டுநர் வாங்க மறுத்து, ‘‘அய்யா, உங்களை என்னுடைய லாரியில் ஏற்றிக்கொண்டுவந்தே எனக்குப் பெருமை'' என்றார்.

உளுந்தூர்பேட்டை நிகழ்வு நமக்கு உதாரணம்!

எதற்காக அந்த நிகழ்வை சொல்கிறேன் என்றால் நண்பர்களே, நம்முடைய பயணங்களில், வேன், ரிப்பேர் ஆனது போன்று எத்தனையோ தடங்கல்கள் வரலாம். அப்படி தடங்கல்கள் வந்தாலும், நம்முடைய பயணம் நிற்காது. லாரியில் ஏறி பெரியார் சென்றதுபோல வரும்.  ஆனால், எடுத்துக்கொண்ட காரியத்தை நாம் சாதித்தே காட்டுவோம் என்பதற்கு இதே உளுந்தூர்பேட்டை நிகழ்வு நமக்கு உதாரணமாக இருக்கும்.

ஆகவே, அதை நன்றாகத் தெளிவாக நீங்கள் நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு பொறுப்பாளரும், மற்ற இளைஞர்களை அணுகுங்கள்; மகளிர் அணியைக் கட்டுங்கள்; மாணவர்களைத் தட்டிக் கொடுங்கள்; பயிற்சி வகுப்புகளை நடத்துங்கள்; ‘விடுதலை'யைப் பரப்புங்கள்; தெருமுனைக் கூட்டங்களை நடத்துங்கள்; திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள்; பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

எல்லா ஊர்களிலும் 

ஆட்கள் இருக்கிறார்கள்; 

நமக்குத் தொடர்புதான் இல்லை!

‘‘அய்யா, நமக்கு அந்த ஊரில் ஆளில்லையே'' என்று சொல்லாதீர்கள்; எல்லா ஊர்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்; நமக்குத் தொடர்புதான் இல்லை. ஆளில்லாமல் இருப்பது வேறு; தொடர்பு இல்லாமல் இருப்பது என்பது வேறு.

அடுத்ததாக, அந்த ஊரில் நமக்கு எதிர்ப்பு வருகிறது என்று நினைத்தீர்களேயானால், எங்கே எதிர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் நாம் பிரச் சாரத்தை செய்யவேண்டும். காரணம் என்ன வென்றால், எதிர்ப்புதான் நமக்கு உரமாகும்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோன்று, நான் திராவிடமணி அவர்களோடு வந்தபொழுது, மண்ணை வாரி தூற்றினார்கள்; கல்லெறிந்தார்கள். மண்ணை வாரி தூற்றியவர், அடுத்த ஆண்டே எனக்கு மாலை அணிவித்தார்.

திராவிடர் கழகத்தை ஏன் வளர்க்கவேண்டும்?

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், நல்ல காலகட்டத்தில் இருக்கிறது. இப்பொழுது ஏன் இயக் கத்தை வளர்க்கவேண்டும் என்றால், அது நமக்காக அல்ல; நாட்டிற்காக - சமூகத்திற்காக -  நம்முடைய தலைவர்கள் நீதிக்கட்சி காலத்திலிருந்து திராவிடர் கழகமாக மாறி, அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகமாகப் பிரிந்து, அண்ணா அவர்கள் ஆட்சியைப் பிடித்தவுடன், ‘‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை'' என்றாக்கி,  சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்து - பிறகு அண்ணா அவர்கள் மறைந்த பிற்பாடு முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இப்படி ‘திராவிட மாடல்' இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவில்  நல்ல சூழல் உருவாகி இருக்கிறது.

நூறாண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய ஓர் இயக்கம் இது. நீதிக்கட்சியில், தியாகராயர், நடேசனார், டாக்டர் நாயர், பன்னீர்செல்வம், பனகல் அரசர், பொப்பிலி அரசர் போன்றவர்கள் செய்த காரியங்கள் - விதை போட்டு, விதை போட்டு இன்றைக்குப் பெரிய அளவிற்கு வந்தவுடன், அதை அழிக்கவேண்டும் என்பதற்காக - இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறி நோய் உள்ளே வருகிறது.

நாம் என்ன செய்யவேண்டும்?

இங்கே சொன்னார்களே, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் - ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவும் ஒன்றாக வருகின்ற இந்தக் காலகட்டத்தில் நாம் என்ன செய்யவேண்டும்? நம்முடைய இயக்கத்தை மேலும் வளர்த்து வலுப்படுத்த வேண்டும்.

இது வரப் போகின்ற தேர்தலுக்காகவோ - அரசியலுக் காகவோ அல்ல. அரசியலுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

அதைவிட சமூகப் போராட்டம் - தேவாசுரப் போராட்டம் - இனப் போராட்டமாகும்.

சமூகநீதிப் பாதுகாப்பிற்கும், சுயமரியாதை உணர்வு களின் பாதுகாப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எதிராக இருக்கக்கூடிய ஓர் அமைப்பு வளர்ந்தால் - பார்த்தீனியம் செடி வளர்ந்தது போன்றதாகும்.

கல்வியில் கை வைத்துவிட்டார்கள்; உத்தியோகத்தில் கை வைத்துவிட்டார்கள்!

ஆகவேதான், திராவிடர் கழகம் வளர்ந்த வேகமே நம்மவர்கள் படிப்பதற்குக் காரணமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு ‘நீட்' தேர்வு, ‘நெக்ஸ்ட்' தேர்வு என்கிறார்கள். கல்வியில் கை வைத்துவிட்டார்கள்; உத்தியோகத்தில் கை வைத்துவிட்டார்கள்.

நாம் பாடுபட்டு உருவாக்கிய மண்டல் கமிசனுடைய 27 சதவிகிதத்திற்காக எவ்வளவு போராட்டம்?  69 சத விகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது; நாளைக்கே வேறொரு ஆட்சி வந்தது என்றால், இந்த இட ஒதுக்கீடு இருக்காது.

நம்முடைய பிள்ளைகளுக்குப் படிப்பு, உத்தியோகம், வகுப்புரிமை எதுவும் கிடைக்காமல் போய்விடும். இருப்பதைப் பாதுகாக்கவேண்டும் என்றால், நாம் புதிதாக எதுவும் செய்யவேண்டாம் - நம் தலைவர்கள் பாடுபட்டு நமக்குச் சம்பாதித்து கொடுத்தார்கள் பாருங் கள் - அந்தக் கொள்கைச் சொத்தை காப்பாற்றவேண்டுமா, இல்லையா?

அதற்கு நாம் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டுமா? இல்லையா? அதற்காகத்தான் நம்முடைய இயக்கத்தை வளர்க்கவேண்டும்.

இன்னொன்று, அரசியலுக்குப் போனவர்கள், அரசி யல் காரியங்கள் செய்வார்கள்; அவர்களை செய்ய வைப்போம்; அந்த சக்தி நமக்கு இருக்கிறது.

ஆனால், வெளியில் மக்களைப் பார்த்து, மக்களைத் தயார்படுத்துகின்ற வேலையை நாம்தான் முன்னின்று செய்யவேண்டும். அதுதான் அண்மையில் கோயம் புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.

மக்களை சந்திப்பது - சட்டப் போராட்டம் - நீதி மன்றம் போன்றவற்றை ஆட்சியாளர்கள், அரசியல் வாதிகள் செய்யவேண்டும்.

மக்களை ஆயத்தப்படுத்துகின்ற பணியை 

நாம் செய்கிறோம்!

ஆனால், துணிந்து மக்களை ஆயத்தப்படுத்துகின்ற பணி இருக்கிறதே - அதை செய்வதுதான் கருப்புச் சட்டைக்காரர்களுடைய வேலை. ‘‘கருப்புச்சட்டைக் காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்'' என்று அந்தப் பணியைச் செய்யவேண்டும்.

எனவேதான், நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்தைக் கருதி, நம்முடைய சந்ததிகளுடைய பாதுகாப்பினைக் கருதி, நம்முடைய திராவிட இயக்கத் தலைவர்கள், சுயமரியாதை இயக்கமாக இருந்து, நீதிக்கட்சியும், சுயமரியாதைக் கட்சியும் இணைந்து, திராவிடர் கழகமாகி, அது நூறாண்டு காலத்தைத் தாண்டக் கூடிய அளவிற்குவந்து, இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு - ‘‘திராவிடம், திராவிடம், திராவிடம்'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்குத் ‘திராவிட மாடல்' இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஓர் ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கின்றோம் என்றால், நம்முடைய கொள்கை மகுடம் ஏற்பதை எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆரியத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சனாதன சங்கீதம் பாடுகிறார்கள்.

எனவேதான், நம்முடைய பணி என்பது பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!!

போராட்டம் - பிரச்சாரம்!

நாம்தான் எல்லாவற்றிற்கும் 

வழிகாட்டக் கூடியவர்கள்!

கடிகாரத்தினுடைய முள் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் செல்வதுபோன்று - போராட்டம் - பிரச்சாரம்! நாம்தான் எல்லாவற்றிற்கும் வழி காட்டக் கூடியவர்கள்.

ஆகவே, அதை நாம் செய்தாகவேண்டும். நாம் பெறவேண்டிய வெற்றிகள் பிறகு; நாம் பெற்ற வெற்றிகளும், கொள்கைகளும் நிலைத்து காப் பாற்றப்பட வேண்டும். அந்தக் காப்பாற்றக் கூடிய சக்தி யாருக்கு இருக்கிறது என்றால், நம்மிடம்தான்.

இப்பொழுது இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியாகும். இவர்களுக்குப் பாதுகாப்பு யார்? ராணுவம்தான்.

வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து உள்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு இராணுவம் இருக்கிறது.

உள்நாட்டில் கலவரம் ஏற்பட்டால், அவற்றிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பது இராணுவம்.

உள்ளூரில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக இருப்பது காவல்துறை. காவல்துறை என்பது பொதுவானது.

திராவிடர் கழகம் கருப்புச் சட்டைப் படை!

எப்படி தீயணைப்புத் துறை பொதுவானதோ - தேவையானதோ - எப்படி காவல்துறை தேவையானதோ - அதேபோன்று இந்த நாட்டிற்கு, சமூகத்திற்கு, பாதுகாப்பிற்குக் கருப்புச் சட்டைப் படையாக திராவிடர் கழகம் தேவையானது.

நான் அடிக்கடி சொல்லுகின்ற கருத்தை மக்களிடம் பரப்புங்கள்.

ஒரு கோவிலோ, சர்ச்சோ, மசூதியோ கட்டினால், அது யாருக்குப் பயன்படுகிறது?

மதத்தால் பிரிக்கப்பட்ட மக்கள் -  கோவில் கட்டினால், அங்கே யார் போவார்கள்? ஹிந்து பக்தன், சனாதன வாதிகள் போவார்கள்.

அதேபோன்று நண்பர்களே, சர்ச் கட்டினால், கிறித்துவர்கள், சிலுவை அணிந்தவர்கள் போவார்கள்.

அதேபோன்று, மசூதி கட்டினால், இஸ்லாமிய நண்பர்கள் தொழுகைக்குப் போவார்கள்.

ஒரு ஊரில் கோவிலே, சர்ச்சோ, மசூதியோ கட்டினால் குறிப்பிட்டவர்கள் மட்டும்தான் போவார்கள்.

ஆனால், ஒரு பள்ளிக்கூடம் கட்டினால், இஸ்லாமிய பிள்ளைகளும் போவார்கள்; கிறிஸ்துவப் பிள்ளைகளும் போவார்கள்; ஹிந்து என்று சொல்கிறவர்களின் பிள்ளைகளும் போவார்கள்; ஹிந்து மதத்தை ஏற்காத நம்மைப் போன்றவர்களின் பிள்ளைகளும் படிக்கப் போவார்கள்.

அனைவரும் செல்வது எங்கு?

பள்ளிக்கூடம்.

தீயணைப்பு நிலையம் அனைவருக்கும்!

மருத்துவமனை கட்டினால் அனைவருக்கும்!

அதேபோன்றதுதான் காவல்துறையும் அனை வருக்கும்!

திராவிடர் கழகம் அந்தப் பணியை செய்யக்கூடிய இயக்கம்!

எனவே, நாம்தான் மருத்துவர்கள்; நாம்தான் தீயணைப்பு நிலையத்தவர்கள்; நாம்தான் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் - அறிவை சொல்லிக் கொடுக்கிறவர்கள். நாம்தான் மருத்துவமனையில் இருந்துகொண்டு, மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கிறவர்கள்.

யாரும் நமக்கு விரோதிகள் அல்ல!

எனவே, இந்த இயக்கம் ஒரு பொது இயக்கம் - எல்லோருக்கும் பாதுகாப்பு. யாரும் நமக்கு விரோதிகள் அல்ல. நம்மை, விரோதிகள் என்று மற்றவர்கள் கருதலாம் நண்பர்களே! ஆனால், நமக்கு அத்துணை பேரும் மனிதநேயப்படி ஒருமித்தவர்கள் என்பது முக்கியம்!

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி!

ஊருக்குச் சென்றவுடன் நீங்கள் மறக்காமல் சொல்ல வேண்டியது, செய்யவேண்டியது என்னவென்றால், ‘‘கொடி - செடி - படி!'' தான்!

ஏற்பாடு செய்த தோழர்கள், குறிப்பாக நம்முடைய உளுந்தூர்பேட்டைத் தோழர்களுக்கும், இந்த மாவட்டத் தோழர்கள் அத்துணை பேருக்கும் நன்றி!

ஈரோடுப் பொதுக்குழு முடிந்தவுடன் ஆறு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அங்கே இவ்வளவு பெரிய வாய்ப்பு இல்லை.

எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி- இது என் சொந்த மாவட்டம். மகிழ்ச்சியோடு நான் திரும்புகிறேன். எழுச்சியோடு நடத்துங்கள்! திருப்பத்தை உருவாக்குங்கள்! இந்தப் படை போதும்!

ஆயுதம் - அறிவாயுதம் - 

போராயுதம் - பேராயுதம்!

எனவே, ‘விடுதலை' என்பது வெறும் காகிதம் அல்ல; அது தந்தை பெரியார் கொடுத்த ஆயுதம் - அறிவாயுதம் - போராயுதம் - பேராயுதம் என்பதை மறவாதீர்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்..


No comments:

Post a Comment