‘விடுதலை' 89 ஆம் ஆண்டு விழாவில் எழுச்சித்
தமிழர் தொல்.திருமாவளவன் இனமான உரை
சென்னை, ஜூன் 4 வணிக நோக்கமின்றி இயங்கக்கூடிய ‘விடுதலை' 89 ஆம் ஆண்டு காண்கிறது என்பது எளிதான ஒன்றல்ல - ‘விடுதலை'மூலம் திரிபுவாதங்களை வீழ்த்தக் கூடிய பேராற்றல் மிக்கவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள். பெரியாரைப்பற்றிப் பேசாமல் இனி யாராலும் இயங்க முடியாது என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.
‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா - ‘விடுதலை’ நாளேட்டின் 89 ஆம் ஆண்டு விழா!
கடந்த 1.6.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா - ‘விடுதலை' நாளேட்டின் 89 ஆம் ஆண்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி. அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழாவை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தம்பி பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
அறிமுக உரை வழங்கியிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இந்த முதல் தொகுதியை வெளியிட்டு இந்நிகழ்வை சிறப்பித்திருக்கின்ற கவிஞர் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களே, இப்புத்தகம் குறித்து ஆய்வுரை வழங்கவிருக்கின்ற ஊடகவியலாளர் எழுத்தாளர் பா.திருமாவேலன் அவர்களே,
வாழ்த்துரை வழங்கவிருக்கின்ற திராவிட முன்னேற் றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் மேனாள் மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கின்ற வடசென்னை மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை தலைவர் மானமிகு மரகதமணி அவர்களே மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற மானமிகு தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘விடுதலை’ களஞ்சியம் என்னும்
அறிவுப் பெட்டகம்
‘விடுதலை' களஞ்சியம் என்னும் இந்த அறிவுப் பெட்டகம் 1936 ஆம் ஆண்டிலிருந்து முக்கியமான தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரை கள், செய்திகள், துணுக்குகள் ஆகியவற்றை மட்டும் தேர்வு செய்து இளந்தலைமுறையினருக்கு அருட் கொடையாக வழங்கக்கூடிய வகையில், இதனை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார்.
இந்த அரிய நிகழ்வில் பங்கேற்று இதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக தமிழர் தலைவர் அவர்களுக்கு முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
இதே நேரத்தில் இன்னொரு திருமண நிகழ்விலும் இருக்கவேண்டும் என்கின்ற நெருக்கடியால், தமிழர் தலைவரின் அனுமதியைப் பெற்று நான் சற்று முன்ன தாகவே விடைபெறக் கூடிய நிலையில் நிற்கிறேன். இடையிலேயே விடைபெறுவதற்காகவும் வருந்து கிறேன். இதுபோன்ற பணிகளை நம்முடைய தமிழர் தலைவர் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும். நான் மேடையில் அமர்ந்து அதைத்தான் வியந்து வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பெரும் உந்துதலைத் தருகிறது;
ஊக்கத்தைத் தருகிறது!
எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவது, நேர்த்தியாக அவற்றை செய்து முடிப்பது; தொலைநோக்குப் பார் வையோடு அடுத்த தலைமுறையினருக்கு இத்தகைய அறிவுக் களஞ்சியத்தை ஒப்படைப்பது என்கின்ற இந்த மகத்தான பணிகளை நாமே வியக்கக் கூடிய அளவிற்கு, அதாவது அவரைவிட 30, 40 வயது இளையவர்களாக இருக்கின்ற நம்மைப் போன்றவர்களே வியக்கக் கூடிய அளவிற்கு - இந்த வயதிலும் மிகுந்த துடிப்போடு, பொறுப்போடு, முனைப்போடு தமிழர் தலைவர் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதுதான் நம்மை மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது; பெரும் உந்துதலைத் தருகிறது; ஊக்கத்தைத் தருகிறது.
பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி - வணிக நோக்கம் இல்லாமல் இதழ்களை நடத்துவது கடினம்!
ஓர் இதழைத் தொடங்கி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நாமறிவோம். பல பத்தாண்டுகளாக வெற்றிகரமாக இதழ் நடத்துவது என்பது சாதனையிலும் சாதனை! பகுத்தறிவுக் கருத்து களைத் தாங்கிய இதழ்களை நடத்துவது; வணிக நோக்கம் இல்லாமல் இதழ்களை நடத்துவது.
ஜனரஞ்சகம் என்கிற பெயரில், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றையெல்லாம் பதிப்பிக்காமல், ஒரு புதிய இளைய தலைமுறையினரை அறிவியல் கண்ணோட்டத் தோடு வளர்த்தெடுக்கக் கூடிய வகையிலே, பொறுப் புணர்வோடு ஓர் இதழை நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய அந்தப் பணியை இன்றைக்கும் மிக வீரியத்தோடு, தற்காலத்து அறிவியல் வளர்ச்சியோடு, தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைத்து முன்னெ டுத்துச் செல்லுவது. எல்லாவற்றிலும் அப்டேட்டாக இருக்கவேண்டும் என்கிற அந்த முனைப்பு இருக்கிறதே, பழைமைவாதத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடக்காமல், புதிய தொழில்நுட்பத்தோடு இணைய முடியாமல், வளர்ச்சியடைந்திருக்கிற அறிவியலோடு இணைத்துக் கொள்ள இயலாமல் தனிமைப்பட்டு போவோர் உண்டு.
இளந்தலைமுறையினருக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையிலே இயங்குவது என்பது பேராற்றல்!
எங்களுக்கென்று ஒரு நடை இருக்கிறது; எங்களுக்கு என்று ஒரு முறை இருக்கிறது - அதிலிருந்து எங்களால் மாற முடியாது, மீற முடியாது என்றெல்லாம் வாதிடாமல், அல்லது அதற்குள்ளேயே முடங்கிப் போகாமல், தேங்கிப் போகாமல் இன்றைய சூழலுக்கு ஏற்ப அறி வியல் எவ்வாறு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ச்சியடைந்திருக்கிறதோ அதற்கேற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு இயங் குவது என்பது ஆற்றலிலும் பெரிது - அது பேராற்றல். இந்தக் காலத்து இளந்தலைமுறையினருக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையிலே இயங்குவது என்பது பேராற்றல். அத்தகைய பேராற்றலை தமிழர் தலை வரிடத்திலே நாம் பார்க்கிறோம்.
தமிழர் தலைவர் அவர்கள் இன்றும் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் நமக்குள்ள ஒரு பெரிய பாதுகாப்பு
அதன் ஒரு சான்றுதான் இந்த அரிய பணியை மேற்கொண்டிருப்பது அளப்பரிய பணி. கால ஒட்டத்தில் எவ்வளவோ உண்மைகள் திரித்துப் பொய்யாக்கப்படுகின்றன. வதந்திகள் அவதூறு களாக வளர்த்தெடுக்கப்படுகின்றன. திராவிட அரசியலுக்கு எதிராக, திராவிட இயக்கத்திற்கு எதிராக இன்றைக்கு எவ்வளவு மோசமான திரிபு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். நல்வாய்ப்பாக தமிழர் தலைவர் அவர்கள் இன்றும் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் நமக்குள்ள ஒரு பெரிய பாதுகாப்பு - மிகப்பெரிய பாதுகாப்பு - பெரிய நல்வாய்ப்பு!
திரிபுவாதங்களை வீழ்த்தக் கூடிய பேராற்றலைக் கொண்ட மாமனிதர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர்!
அந்த அவதூறுகளையெல்லாம், திரிபுவாதங்களை யெல்லாம் உடனுக்குடன் சூடு தணியாத வகையிலே அவர்களுக்குப் பதிலடி கொடுக்கக் கூடிய அளவில், சுடச் சுட பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், உட னுக்குடன் பதிலடிக் கொடுக்கக் கூடிய வகையில், பொய்களை அம்பலப்படுத்தக் கூடிய வகையில், திரிபு வாதங்களை வீழ்த்தக் கூடிய வகையில், இயங்கக்கூடிய ஒரு பேராற்றலைக் கொண்ட மாமனிதராக நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் விளங் குகிறார்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் தமிழ்நாட்டைப் பின்பற்றக் கூடிய அளவிற்கு, பெரியாரின் அரசியலைப் பின்பற்றக் கூடிய அளவிற்கு, ஒரு புதிய திசை வழியிலே பயணிக்கத் தொடங்கியருக்கின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.
பெரியார் காலத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தொடங்கி வைத்த பல அரசியல் கருத்தியல் போராட் டங்களை இப்பொழுதுதான் தென்னிந்திய மாநிலங் களில்கூட கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில்கூட பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்றைக்குப் பெரியாரை பேசாமல் இயங்க முடியாது என்கிற அளவிற்கு
ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது!
பெரியாரை இன்றைக்கு அவர்கள் வலுவாக, அழுத்த மாக உச்சரிக்கின்றார்கள். பெரியார் படங்களைப் போட்டு இன்றைக்குக் கருத்தியல் பரப்புரைகளை மேற்கொள் கிறார்கள். வட இந்திய பகுதிகளில் குறிப்பாக தென் னிந்திய கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங் களில், இன்றைக்குப் பெரியாரை பேசாமல் இயங்க முடியாது என்கிற அளவிற்கு ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது. நான் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் செல்கி றேன்; நிறைய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெறுகிறேன். அந்தப் பகுதி களிலே அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை நம்மால் காண முடிகிறது.
பெரியார் அரசியலை இந்த அளவிற்கு, இத்தனை பத்தாண்டுகளாக அடைகாத்து, அடுத்தடுத்து வருகின்ற தலைமுறையினரிடம் ஒப்படைக்கக்கூடிய ஒரு மாபெரும் பணியை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் மேற்கொண்டு செயலாற்றி வருகிறார்.
இன்றைக்கு உலக நாடுகள் முழுவதும் பெரியாரி யத்தை பேசக்கூடிய அளவிற்கு அதைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.
‘லாங் லிவ் பெரியார்’ என்று முழக்கம்!
இன்றைக்குக்கூட வெளிவந்த ‘விடுதலை' இதழில், லண்டனில் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மாணவர், ‘லாங் லிவ் பெரியார்' என்று முழக்கமிட்டதை செய்தி யாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இன்றைக்கு சனாதனத்தை வீழ்த்துவதற்கு நம் கைகளில் இருக்கின்ற ஒரு பேராயுதம்தான் ‘விடுதலை’ களஞ்சியம் - ‘விடுதலை' நாளேடு.
திராவிடர் கழகம் என்கிற இந்தப் பேரியக்கம் கருத் தியல் அடிப்படையிலே மக்களை அரசியல்படுத்தி வருகின்ற ஒரு மகத்தான இயக்கம்.
புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்; குப்புற வீழ்ந்து கிடக்கிறார்கள்!
பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் அடை யாளமே இல்லாமல் அழித்தொழிக்க வேண்டுமென்று புறப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்குப் புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்; குப்புற வீழ்ந்து கிடக் கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.
அவர்களால் வீழ்த்த முடியாது என்பதை வரலாறு அவ்வப்பொழுது பதிவு செய்துகொண்டே வருகிறது.
பெரியாரை எதிர்ப்பதாகத்தான் பொருள்!
தி.மு.க.வை எதிர்க்கிறார்கள் என்றால், அது பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றுதான் பொருள்.
திராவிடத்தை எதிர்க்கிறோம் என்று அவர்கள் சொன்னால், அது பெரியாரை எதிர்ப்பதாகத்தான் பொருள்.
கட்சி அரசியல் வேறு; கருத்தியல் களம் என்பது வேறு. தி.மு.க. என்கிற கட்சி அரசியலோடு பலருக்கு முரண்பாடு இருக்கலாம்; ஆனால், திராவிட அரசியல் என்பது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
அவர்கள் வெறுமனே தி.மு.க.வை எதிர்க்கின்றோம் என்கிற பெயரில், விமர்சனங்களை வைக்கவில்லை; அவதூறுகளைப் பரப்பவில்லை. அது பெரியாருக்கு எதிரான அவதூறு, பெரியாருக்கு எதிரான விமர்சனம் என்றுதான் நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை.
தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு இயங்கிக் கொண்டிருக்கிறது!
இதனை எதிர்கொள்ளக்கூடிய வலிமைமிக்க ஒரு பேராயுதமாக இன்றைக்கு ‘விடுதலை' நாளேடு இயங்கிக் கொண்டிருக்கிறது; தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு இயங்கிக் கொண்டிருக்கிறது.
89 ஆம் ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கின்ற ‘விடுதலை' நாளேட்டில், 61 ஆண்டுகள் பணிபுரிந்தி ருக்கிறார்; இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலேயே ஒரு சாதனை என்பதை நம்முடைய கவிஞர் அவர்கள் இங்கே பதிவு செய்தார்.
இதற்காகவே நான் தனியாக தமிழர் தலைவர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தவேண்டும். எப்படி இது சாத்தியமாகிறது என்பதுபற்றி ஒரு பெரிய ஆய்வரங்கத்தை நடத்தவேண்டும்.
திராவிட அரசியல் என்கிற சனாதன எதிர்ப்பு அரசியலைப் பாதுகாத்து வருகிறார் தமிழர் தலைவர்!
அன்றைக்குப் பெரியார் இந்தக் கருத்தியல் களத்திற்கு பெரிய உயிர்க் காற்றாக இருந்தார் என்றால், இன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்கள் அப்படிப்பட்ட உயிர்க் காற்றாக, உயிர் மூச்சாக இருந்து, இந்தத் திராவிட அரசியல் என்கிற சனா தன எதிர்ப்பு அரசியலைப் பாதுகாத்து வருகிறார்.
தோழர்களே, எதையும் செய்வோம் என்கிற அளவிற்கு, எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யக்கூடிய அளவிற்கு சனாதனிகள் துணிந்து விட்டார்கள்.
எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அல்லது சனாதன பாசிசம் இங்கு எவ்வளவு ஆணவத்தோடு இயங்குகிறது என்றால், குடியரசுத் தலைவராக இருந்தாலும் நாங்கள் புறக்கணிப்போம், அவ மதிப்போம் என்கிற அளவிற்கு அவர்களின் ஆணவம் உச்சந்தலை ஏறியிருக்கிறது.
சனாதன ஆணவத்தின் உச்சம்!
ஒரு புரோட்டோக்கால் - நாடாளுமன்றப் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெறுகிறது என்றால், குடியரசுத் தலைவரை வைத்து திறக்கவேண்டும் என்பது ஒரு புரோட்டோக்கால். சட்டப்பூர்வமான ஒரு நடை முறை அது. ஆனால், துணிந்து குடியரசுத் தலைவரை புறந்தள்ளுகிறார்கள்.
என்ன விமர்சனம் வந்தாலும், அதைப்பற்றி எங் களுக்குக் கவலையில்லை. அடிக்கல் நாட்டும்பொழுதும் குடியரசுத் தலைவரின் பெயர் பொறிக்கப்படாது; திறப்பு விழா நடக்கிறபொழுதும் குடியரசுத் தலைவரின் பெயர் பொறிக்கப்படாது; அதைத் திட்டமிட்டே தவிர்ப்போம் என்றால் இது சனாதன ஆணவத்தின் உச்சம். இது தனிநபர் மோடியின் விருப்பம் என்று மட்டும் கருதிவிடக் கூடாது.
சட்டப்பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றுவது பொறுப்புள்ள இடத்தில் இருப்பவர்களின் கடமை
குடியரசுத் தலைவர் என்பதற்காகவே அவர் அதை திறந்து வைக்கவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த வில்லை. ஆனால், சட்டப்பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றுவது பொறுப்புள்ள இடத்தில் இருப்பவர்களின் கடமை.
ஒரு பிரதமர், குடியரசுத் தலைவர் எத்தகைய மதிப்பிற்குரியவர் என்பதை அறிந்திருக்கவேண்டும். ஆனால், அவர் துச்சமாக மதிக்கிறார் என்று சொன்னால், சனாதனம் எந்த அளவிற்கு வெளிப்படையாக, ஆண வத்தோடு இயங்குகிறது என்பதை நாம் இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
அவர்கள், 888 இருக்கைகளைக் கொண்ட புதிய நாடாளுமன்றத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி அந்த நாடாளுமன்றம் இப்போதைக் குத் தேவையில்லை.
மறுவரையறைகள் செய்யப்பட்டால், 888 பேர் தேர்ந் தெடுக்கப்படுகிற சூழல் வந்தால், அதை செய்யலாம். முன்கூட்டியே அப்படியொரு திட்டமிருக்கிறது; செய்யப்போகிறோம் என்கிற அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால், கட்டி முடித்துவிட்டார்கள்.
என்ன வரையறையைக்
கையாளப் போகிறார்கள் அவர்கள்?
ஆக, நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யப் போகிறார்கள்; உறுப்பினர்களின் எண்ணிக் கையை உயர்த்தப் போகிறார்கள். இதில் என்ன வரை யறையைக் கையாளப் போகிறார்கள் என்பது குறித்து நாம் தீர, ஆழமாக யோசிக்கவேண்டும்; கலந்தாய்வு செய்யவேண்டும். வெறும் மக்கள் தொகை அடிப்படை மட்டுமே இதற்கான ஒரே அளவுகோலாக இருந்தால், அதில் கடுமையாக நாம் வஞ்சிக்கப்படுவோம்; அவர் களின் ஹிந்துராஷ்டிர கனவு நிறைவேறிவிடும்.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறபொழுது, மக்கள் தொகையை மட்டுமே ஓர் அளவுகோலாகக் கொள்ளுகிற நடைமுறையை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழர் தலைவர் அவர்கள் இதுகுறித்து தீவிரமாக அறிவார்ந்த சக்திகளோடு ஆராயவேண்டும்; கலந்தாய்வு செய்ய வேண்டும். இதை நாம் ஓர் அரசியல் போராட்டமாக முன்னெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே என்று கணக்கெடுத்தால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு, கேரளா பாதிக்கப்படும் என்கிற கருத்து நிலவுகிறது.
வட இந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும்; தொகுதிகளும் உயரும்!
அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாத வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது; அதனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகளும் உயரும். அப்படி சென்ட்ரல் பிராவின்ஸ் என்று சொல்லக்கூடிய, ஹிந்தி பெல்ட் என்று சொல்லப்படக் கூடிய ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது; அந்தப் பகுதிகளில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினால் போதும், ஹிந்துராஷ்டிரத்தை அமைத்துவிட முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி வரையறைகளை செய்வது கூடாது என்கிற அடிப்படையில் நாம் கலந்தாய்வு செய்யவேண்டிய ஓர் இக்கட்டான நேரத்தில், காலத்தில் இருக்கிறோம்.
புதிய நாடாளுமன்றம் என்பது
நமக்கான ஓர் எச்சரிக்கை!
நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் எல்லா வற்றிலும் முன்னோக்குக் கூடியவர்; தொலைநோக்குப் பார்வையோடு உணரக் கூடியவர்; வழிகாட்டக் கூடிய வர்; முன்னெச்சரிக்கையாக நம்மைப் போன்றவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கக் கூடியவர்; இந்த 888 என்பது நமக்கான ஓர் எச்சரிக்கை! புதிய நாடாளுமன்றம் என்பது நமக்கான ஓர் எச்சரிக்கை!
அவர்கள் புதிதாக அமைக்கப் போகிற ஹிந்துராஷ்டிர கனவை நினைவாக்குவதற்கான கால்கோள் விழாவை நடத்தியிருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்தி யிருக்கிறார்கள். அதனால்தான் தொடக்கத்திலேயே குடியரசுத் தலைவரை வெளியேற்றிவிட்டு, மடாதிபதி களை உள்ளே அமர வைத்திருக்கிறார்கள்.
அந்தத் திறப்பு விழாவிலே யாகங்களை நடத்தி யிருக்கிறார்கள். மதச்சார்பற்ற அரசு என்று நாம் சொல் கிறோம்; ஆனால், நாங்கள் மதம் சார்ந்துதான் இயங்கு வோம்; திறப்பு விழாவையே அப்படித்தான் நடத்துவோம் - இவையெல்லாம் அவர்களின் ஆணவத்தை, அகந்தையை வெளிப்படுத்துகிறது.
அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் மதிக்கமாட்டோம் என்பதுதான் அதில் அவர்கள் சொல்ல விரும்புகிற செய்தி.
மக்களாட்சி காலத்தில்
செங்கோலுக்கு ஏது தேவை?
மன்னராட்சி காலத்திலே செங்கோல் இருந்தது; அது நேர்மைக்கான, நீதிக்கான அடையாளமாக இருந்திருக் கலாம், அது வேறு.
மக்களாட்சி காலத்தில் கோலுக்கு ஏது தேவை? என்ன தேவை? அது கொடுங்கோலா, செங்கோலா அதுபற்றியே பேச்சே இல்லை. செங்கோல் இருந்த இடத்திலே அல்லது கொடுங்கோல் இருந்த இடத்திலே இன்றைக்கு ஜனநாயகம் வைக்கப்பட்டு இருக்கிறது. ஜனநாயகத்தின் வடிவமாக அரசமைப்புச் சட்டம் இருக் கிறது. அரசமைப்புச் சட்டத்தைத்தான் வைக்கவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் பிரியாம்பிள் வைக்கப்படவேண்டும்!
எப்படி மத நம்பிக்கையாளர்கள் தங்களின் வழி பாட்டுத் தலங்களிலே குரானை பெரிதாக வைக்கிறார்கள்; ஆதிக்கிரந்தத்தை வைக்கிறார்களோ அல்லது பைபிளை வைக்கிறார்களோ - மெகா சைஸ் செய்து - அப்படி நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர், மாநிலங் களவைத் தலைவருக்குப் பக்கத்திலே அரசமைப்புச் சட்டத்தின் பிரியாம்பிள் வைக்கப்படவேண்டும். அதுதான் முக்கியமானது.
ஒட்டுமொத்த புத்தகத்தைக்கூட வைக்கவேண்டாம்; அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப்புரையை பெரிய அளவிலே வடிவமைப்புச் செய்து, எப்பொழுதும் மக்களவைத் தலைவர் அதைப் படித்துப் பார்க்கவேண் டும்; மாநிலங்களவைத் தலைவர் அதைப் படித்துப் பார்க்கவேண்டும்.
இது ஒரு மதச்சார்பற்ற அரசு - இந்த அரசு Sovereign Socialist Secular Democratic Republic அதுதான் இந்த அரசாங்கத்தினுடைய Definition. இதை ஒவ்வொரு முறையும் மக்களவை உறுப்பினர்களும், மக்களவைத் தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலங் களவைத் தலைவரும் படித்துப் படித்துப் பார்க்க வேண்டும்.
ஆகவே, செங்கோல் வைக்கவேண்டிய இடத்தில் எதை வைக்கவேண்டும் என்றால், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வைக்கவேண்டும்.
நாடக அரசியலை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால், அவர்கள் செங்கோலை வைக்கிறோம் என்கிற பெயரால், சைவ ஆதீனங்களை அழைத்துக் கொண்டு போய் சிறப்பு செய்கிறோம் என்கிற பெயரால், நாடக அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதீனங்களை அழைத்துக் கொண்டு போனது மகிழ்ச்சி; அதை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், அவர்களின் நோக்கம் வேறு; தமிழ்நாட்டைக் குறி வைத்திருக்கிறார்கள்; தமிழ்நாட்டைப் பாதுகாப்ப தற்குத் தமிழர் தலைவர் இருக்கிறார்; அண்ணன் தளபதி இருக்கிறார்; ஜனநாயக சக்திகள் இங்கே வலுவாக இருக்கிறோம் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்!
2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகின்ற நாடாளு மன்றப் பொதுத் தேர்தலிலே அவர்களை நிச்சயமாக நாம் குப்புற வீழ்த்துவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்.
இந்த மண்ணிலே அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதை நிலை நிறுத்துவோம். அதுதான் நம்முன்னால் இருக்கின்ற முதன்மையான சவால்.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா வையும் பாதுகாத்தாகவேண்டும்; ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் பாதுகாத்தாக வேண்டும்.
பெரியாரியம் இந்தியா முழுவதும்
பரவவேண்டிய தேவை!
இந்த சனாதனக் கும்பலிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு-
சனாதன கும்பலிடமிருந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு -
மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கு -
பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கு -
கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கு -
சகோதரத்துவத்தைப் பாதுகாப்பதற்கு -
சமூகநீதியைப் பாதுகாப்பதற்கு -
பெரியாரியம் இந்தியா முழுவதும் பரவவேண்டிய தேவை இருக்கிறது.
பெரியார் அரசியல்தான் திராவிட அரசியல் - அது பார்ப்பன எதிர்ப்பு அரசியல். அது வெறும் நிலப்பரப் போடு தொடர்புடைய அரசியல் அல்ல.
ஹிந்துராஷ்டிரா அல்ல
பிராமணராஷ்டிரா!
திராவிட அரசியல் என்பது தென்னிந்திய நிலப்பரப்போடு தொடர்புடைய அரசியல் அல்ல.
திராவிட அரசியல் என்பது பிராமணராஷ்டிராவிற்கு எதிர்ப்பான அரசியல்.
அது ஹிந்துராஷ்டிரா அல்ல பிராமணராஷ்டிரா - அது ஆர்.எஸ்.எஸ். அல்ல - பிராமணர் சங்கம் - பார்ப் பனர் சங்கம் - பார்ப்பன ராஷ்டிரா - அதற்கெதிரான அரசியல் திராவிட அரசியல் என்பது.
திராவிட அரசியலை பெரியாரை மய்யப்படுத்தி அல்லது கொச்சைப்படுத்தி விமர்சிப்பவர்கள் - பார்ப்பன சக்திகளுக்குத் துணை போகிறார்கள்; கைக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்த சமகாலத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழர் தலைவர் அவர்கள் முன்னெடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும்...
அந்தத் தளத்திலே, தமிழர் தலைவர் அவர்கள் முன்னெடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் எப் பொழுதும் போல் - அவர் எங்களை அன்போடு சொல்வதைப்போல, மூன்றாவது குழலாக இருந்து - திராவிட முன்னேற்றக் கழகத்தோடு - திராவிடர் கழகத்தோடு - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மூன்றா வது குழலாக இருந்து இந்தத் தளத்தில் போராடும், போராடும் என்று சொல்லி, இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக தமிழர் தலைவர் அவர் களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி, விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment