கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை
‘‘தமிழ் இனத்துக்குள்ளே இருந்த பொறாமை உணர்ச்சிதான் இந்த இனம் அடிமைப்படக் காரணமாக இருந்தது. தமிழன் என்ற இன உணர்ச்சியை மங்காது - மழுங்காது காத்துவருவது நமது கடமை'' என்று கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு அடிகளார் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னை அண்ணா சாலையில் 21.9.1975 அன்று நடந்த கலைஞர் சிலைத்திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரையாற்றினார். அவருடைய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கலைஞர் உருவச்சிலையைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையின் முற்பகுதி ஏற்கெனவே வெளி வந்துள்ளது. பிற்பகுதி இங்கே தரப்படுகிறது.
உலக இனத்தில் தமிழனைப் போல மிக நன்றாகச் சிந்தித்த இனம் - அவனைவிட வரலாற்றுச் சாதனை களைச் செய்த இனம் உலகத்தில் வேறு இருக்க முடியாது
அடிமைப்பட்டது ஏன்?
இவ்வளவு புகழ்பூத்த ஒரு இனம், ஏன் தன்னுடைய எழுச்சியை இழந்தது. இடைக்காலத்தில் - எப்படி இது கொத்தடிமைப்பட்டது என்று கேட்டால் ஒரே ஒரு காரணம்; ஆயிரம் சிறப்புகள் அவனுக்குண்டு - அதற் குள்ளே ஒரே ஒரு இழிகுணமுண்டு - ஒரு தமிழன் வாழ, இன்னொரு தமிழன் பொறுத்துக் கொள்ள மாட்டான்!
ஆகவே, இன வழிப்பட்ட பகைமை இருக்கிறதே, அது தமிழனுக்கு மிக மிக அதிகம்.
எனவேதான் தமிழிலக்கியச் சுவடிகளைப் புரட்டி னால் அய்யா அவர்களுக்குக் கூடக்கோபம் வரும். சேரனை பாண்டியன் அடித்தான் - பாண்டியனை சோழன் அடித் தான், இதுதானே என்று பேசுவார்.
தமிழினத்தின் ஒருமைப்பாட்டை நாம் கட்டிக்காக்கத் தவறியதால் தான் நாடாண்ட தமிழினம், கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழினம், அந்த நாடு களிலெல்லாம் தனது கலையை - கொற்றத்தை - வாழ்க்கை நெறிகளைப் பரப்பிய தமிழினம் வீழ்ந்து பட்டது என்று சொன்னால் அறிவினுடைய ஆற்றல் குறைவினால் அல்ல; ஆளுமைத்திறன் இல்லாத தினாலும் அல்ல, அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பகை இருக்கிறதே, அது தான் காரணம்!
அதனால்தான் உலகப் பொதுமை பேசிய திருவள் ளுவர் கூட, ‘குடிசெயல்' என்று அதிகாரம் வைத்தார். ‘நீ பிறந்த குடியை ஆளாக்கு - நீ பிறந்த குடியை வளர்த்துவிடு - நீ பிறந்த குடிக்கு இடையூறாக நிற்காதே' என்றார்.
அப்படிச் சொல்கிறபோது சொன்னார், மூன்று கடமை களை பின்பற்றினால் தமிழினம் வளரும் என்று சொன்னார்.
பஞ்சாங்கத்திற்கு அடிமையானால்...
முதல் கடமையாகச் சொன்னார்-எந்தக் கடமையைச் செய்யவும் நாள் பார்க்காதே, பருவம் பார்க்காதே என் றார். பஞ்சாங்கங்களுக்கு நாம் அடிமையாக இருக்கிற வரை நிச்சயமாக நமது முயற்சிகள் தடைபடும். நம் முடைய நாட்டிலிருக்கிற வேடிக்கை - முற்போக்குப் பத்திரிகை என்று தலையிலே போடுவார்கள் - கீழே ராசி பலனையும் போடுவார்கள். இதிலே எது முற்போக்கு என்று தெரிய வில்லை.
அடுத்து ‘மடி செய்யாதே, சோம்பலை செய்யாதே, நாளை செய்யலாம் என்று ஒத்திப் போடாதே இன்றே செய்' என்றார்.
மூன்றாவதாக - ‘மானம் பார்க்காதே! நீ - தமிழ னோடு வாழும் போது உன்னுடைய தமிழனிடம் நீ மானம்பார்க்காதே - அவனிடத்திலே தோல்வி அடை யாதே - பெருமையாக இரு' என்றார்.
இந்தக் குறளைக் கூட எனக்கு எடுத்துச் சொன்ன ஆசிரியர் யார் என்று சொன்னால் - ஒரு தடவை நானும், அய்யாவும் திருநெல்வேலிக்குச் செல்ல திருப்பரங்குன்றத் திலிருந்து ஒரே காரில் பயணம் சென்றோம்.
கொஞ்சதூரம் போனதும் தன்னுடைய பையிலிருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து இந்த திருக்குறளைக் காட்டி, படித்தீர்களா என்று கேட்டார்.
நான் படித்துப்பார்த்தேன். அய்யா சொன்னார்கள் - ‘மானம் பார்க்காதே' என்று போட்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?... நான் தமிழர்கள் என்று சொன்னால் தமிழன் வசை செய்தாலும் பரவாயில்லை. அவன் தமிழனாக இருந்து வசை செய்து கொண்டு போகட்டும் என்று சொல்லுவது எனக்கு வழக்கம்' என்று சொன்னார்.
தமிழன் தமிழனிடத்தில் பெருமை - சிறுமை பாராட் டாதீர்கள் என்று திருவள்ளுவர் சொன்னார்.
இந்த அடிப்படைப் பண்பைத் தமிழினம் என் றைக்குப் பெறுகிறதோ அன்றைக்குத்தான் நம்முடைய இனம் மீண்டும் வளர்ச்சி அடைய முடியும்.
தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்
பெறுகின்ற எழுச்சி தொடர்ந்து அப்படியே பாது காக்கப்படும் என்று நம்பாதீர்கள்,
ஏற்றிய அடுப்பை அணையாமல் ஊதி வளர்த்துக் கொண்டே இருப்பது போல இன உணர்ச்சியைத் தொடர்ந்து பாதுகாத்தால் தான் அது நம்மிடத்திலே ஒழுங்காக இருக்கும், இல்லையானால் நாலிரண்டு எலும்புத் துண்டுகள் வந்து விழுந்தால் நம்மவர்களிலே கூட சில பேர் நிலைகலங்குவார்கள், அதற்குப் பிறகு இலட்சியக் கோட்டைகள் தளர்ந்து விழும் நிலை வந்துவிடும்,
எனவே, அண்ணா அவர்கள் ஒரு கற்பனை சொன்னார்கள்.
அண்ணா - அய்யா அவர்களைப் பிரிந்த காலம்-மற்றவர்களுக்கு அது எவ் வளவு சவுகரியமாக இருக்கு மென்று கருதுகிறீர்கள்!
இரண்டு பேருக்கிடையே இலேசாக மன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது, என்று சொன்னால் அதை மிக அகலமாக்குகின்ற நிபுணர்கள் நம்முடைய நாட்டிலே உண்டு!
அண்ணா அவர்கள் எழுதினார்; "கொய்யாப்பழம் பறிக்கப் போகும் போது கருநாகம் காலைக் கடிக்க வருகிறது, நம்முடைய நோக்கம் கொய்யாப்பழத்தைப் பறிப்பது. அதற்காக நாம் ஏறுகிறோம். காலிலே கருநாகம் சுற்றிக் கொள்கிறது. கடிக்க வருகிறது. நான் கொய்யாப் பழத்தைப் பறிப்பதா - கருநாகம்கடித்துச் சாவதா?" என்று கேட்டுவிட்டு, "கொய்யாப்பழம், திராவிடர்கழகம், அதைப் பறிக்க நமக்கு ஆசை தான், ஆனால் காலைச் சுற்றிக் கடிக்க வருகிறது இந்நாட்டு மேட்டுக்குடி ஜாதி ஆதிக்கம் என்ற கருநாகம். ஆகவே, கொய்யாப்பழத்தை நான் இழந்தாலும் இழப்பேன் இந்தப் பாம்பு கடித்துச் சாகமாட்டேன்" என்று எழுதினார்.
அண்ணாவுடன் முதல் சந்திப்பு
அதனால் நாடே வியக்கின்ற அளவுக்கு எவ்வளவு இழிவாகப் பேசினாலும் அதைத் தாங்கிக் கொள்கிற வர்கள் இருக்கிறார்களே அவர்கள் துறவிகளை விடப் பெரிய வர்கள் என்று வள்ளுவர் சொன்னார்.
நம்முடைய நாட்டுத்துறவிகள் வரலாற்றைப் படித் தால் பெரிய சாபங்கள் இட்ட வரலாறுகள் அதிகம், அவர்களுக்கு கோபம் வந்தால் சபித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் மகரிஷிகள் என்று பெயர் என்று புராணங்கள் சொல்லுகின்றன.
அண்ணா அவர்கள் இழித்துப் பழித்துப் பேசிய போதும் கூட அதைத் தாங்கிக் கொண்டு மறுவார்த்தை பேசாமல் இருந்தார் என்றால் ஒரே ஒரு காரணம் - இனமானம்!
காரைக்குடி விழாவில் கலந்து கொள்ள அண்ணா அவர்கள் வந்தார்கள். அதற்கு முன்பு நான் அவரை எழுத்தில், பேச்சில்தான் சந்தித்தேன். சில சமயங்களில் தொலைப்பேசியில் பேசியிருக்கிறேன்.
அவர் விழாவிற்கு வருகிறார் என்றதும் மடத்துக்கு வருமாறு அழைத்தேன். இரவு உணவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டார். அப்போது நானும், அய்யாவும் வேறு ஒரு பேராயக் கட்சியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
அண்ணா அவர்கள் வந்ததும் அமைதியாக நான் கேட்டேன், - "நீங்கள் யாருடனோ கூட்டு வைத்திருக் கிறீர்கள். அது எந்த அளவுக்குப் பலனளிக்கும், அவர் களோடு கூட்டு சேர்ந்து எவரும் வெற்றி பெற்றதாக வரலாறில்லை. அவர்கள் வழியில் தான் அழைத்துச் செல்வார்களே தவிர நம்முடைய வழியில் வரமாட் டார்களே" என்று சொன்னேன்.
நாம் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடாதா?
உடனே அண்ணா "எப்போதும் போல இரண்டே வரியில் சொன்னார்கள் - அவர்கள் நம்மை உபயோகப் படுத்திக் கொள்வது போல நம்மால் அவர்களை உப யோகப்படுத்திக் கொள்ள முடியாது என்று நம்பு கிறீர்களா?" என்று கேட்டார் அவ்வளவு பெரிய தலைவர் முன்பு அதற்கு மேல் என்ன பேசுவது?
1967இல் அவர், அவர்களை உபயோகப்படுத்திக் கொண்டு, அதற்குப் பிறகு யாரிடம் சேர வேண்டுமோ சேர்ந்தார்கள்,
காரணம் தமிழனென்ற ஒரே காரணத்துக்காக இன ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அந்த வழியில் தாம் இன்றைக்கு இந்த எழுச்சியைப் பெற்றிருக்கிறோம். பல்வேறு சாதனைகளை பெற்றிருக்கிறோம்.
நமது குறிக்கோள்!
நம்முடைய நாட்டில் ஒவ்வொரு அடியையும் நாம் வைத்துச் செல்ல வேண்டுமென்று சொன்னால் இன்னும் வலிமையான பிரச்சார சாதனம் நமக்கு இல்லை.
இந்த உணவு நல்ல உணவா? என்று தேடி உண்ணுகிற தமிழன் இருக்கிறான். ஆனால் இந்தக் கருத்து, இந்தப் பத்திரிகை, இந்த செய்தி நல்லனவா என்று தேடிப் பார்க்கும் உணர்வு நமக்கு வரவில்லை. அதனால்தான் பெரியார், பத்திரிகையையும் சேர்த்து ‘சாபம்' கொடுத்தார்.
நமது குறிக்கோள் - ஜாதிகளை ஒழிப்பது - நமது குறிக் கோள் தமிழர்களை உயர்த்துவது - நமது குறிக் கோள் - தமிழனின் பண்பாட்டை உலக அளவில் உயர்த்துவது, நமது குறிக்கோள் - தமிழனுடைய செய்திகளை உலகுக்கு கொண்டு சென்று கொடுப்பது - உலகத்தில் வேறு எந்த இனத்தையும் விட தமிழன் பெருமைக்குரியவன் என்பதை உலகுக்கு அறிவித்தல், இதற்கு எந்த வகையிலும் மதம் தடையாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நன்றி - கடப்பாடு பெரியாரின்பழக்கத்தினாலே எனக்கும் உண்டு!
அண்ணா அவர்களும் இந்த அடிப்படையிலேதான் நடந்தார்.
- இவ்வாறு தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசுகையில் குறிப்பிட்டார்.
(‘விடுதலை', 24.9.1975)
No comments:
Post a Comment