சபாஷ் சரியான தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

சபாஷ் சரியான தீர்ப்பு

சிறப்புத் திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் கேரளா உயர்நீதிமன்றம் ஆணை

திருவனந்தபுரம்,மே19 - சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்தநிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன்.

ஆனால் கரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக வெளிநாட்டில் உள்ள எனது காதலனால் உடனடியாக ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்றுக் கொண்ட திருவனந்தபுரம் நீதிமன்றம், தன்யா மார்ட்டினின் திருமணத்தை காணொலி மூலம் நடத்த பதிவாளருக்கு உத்தரவிட்டது. 

இந்தநிலையில் வேறு சிலரும் இதேபோல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள சில நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்க மறுத்த நீதிமன்றங்கள் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.

2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று டிவிஷன்பெஞ்ச் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டது. ஆனால் சாட்சிகள் நேரடியாக பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் மேலும் குறிப்பிட்டு உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில்  

2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

புதுடில்லி, மே 19 உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப் பட்டுள்ள 2 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக குறைந்துள்ளது. மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்றதை  அடுத்து, இது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பலத்தை 34 ஆக உயர்த்தும். உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment