தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!

*   தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக!  8 ஒப்பந்த தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருக!

* பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது  முதல் தலைமுறையில் படிக்கும் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாதிப்பே!

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்திடுக!

இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்திலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக!

தாம்பரம், மே 20 தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக என்பது உள்பட புதிதாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்பது உள்பட, தாம்பரத்தில் இன்று (20.5.2023) நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

தமிழ்நாடு முதலமைச்சருக்கு 

நெஞ்சம் நிறைந்த நன்றி!

தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தி லிருந்து 12 மணி நேரமாக தொழிலாளர்கள் விரும்பினால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தலாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 21.4.2023 அன்று சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து திராவிடர் கழகம் உட்பட தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் குரல் கொடுத்தன; இதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 100ஆம் ஆண்டு மே தினத்தையொட்டி, முக்கிய கட்சிகள், தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று, முற் றிலுமாக ரத்து செய்ததை இம்மாநாடு வரவேற்று அளவில்லா நன்றிப் பெருக்கை ‘திராவிட மாடல்’  அரசுக்கும், முதலமைச்சருக்கும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக!

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களைப் பங்காளி யாக்க வேண்டும் என்று 1944இல் சேலத்தில் நடைபெற்ற - நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்த- மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த முன்வரவேண்டும் என்று மாநில, ஒன்றிய அரசுகளை இம்மநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3:

திண்டுக்கல் மாவட்டம் பழனி, பொருந்தலாறு உள்ளிட்ட நீர்த்திட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!

திண்டுக்கல் மாவட்டம் பழனி - பொருந்தலாறு, பாலாறு கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றில் 2010ஆம் ஆண்டு முதல் பணி புரிந்துவரும் தற்காலிகப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல் தோராயமாக ரூ.4,000, ரூ.5000 என வழங் கப்படுவதுடன் பணிநிரந்தரம் தொடர்பான திண்டுக்கல் தொழிலாளர் நீதிமன்ற வழக்கிலும் நிருவாகம் முட்டுக்கட்டையாக இருந்து வருவதைக் கைவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021 தேர்தல் அறிக் கையில் கூறியபடி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், பணிப் பாதுகாப்புக்கு ணிஷிமி, றிதி போன்ற உத்தரவாதமும், பணி மற்றும் பணிநேர வரன்முறையை உருவாக்கி பணியில் இறந்தவர்களுக்கு வாரிசு வேலையும், பணியில் விபத்துக்குள்ளாகி ஊன முற்றவர்களுக்கு பணிநிரந்தரமும் செய்திட வேண்டு மெனவும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

 ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாட்களையும் ஊதியத்தையும் உயர்த்திடுக!

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து உத்தரவிட்டுள்ள மய்ய அரசை இம்மாநாடு கண்டிப்ப தோடு, 100 நாள் என்பதை 150 நாட்களாக உயர்த்திடவும் அப்பணியாளர்கள் பயன் பெறும் வகையில் மேலும் வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

விவசாயத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் ஆண் - பெண் சமமாக ஊதியம் வழங்க வேண்டுமெனவும், 60 வயதுக்கு மேற்பட் டோருக்கு ஓய்வூதியம் வழங்கிடவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 5:

ESI மூலம் மருத்துவ வசதியில் மாற்றம் தேவை

ESI மூலம் மருத்துவ வசதி பெறும் தொழிலாளர் களுக்கு சம்பள நிர்ணயம் ரூ.20,000 என்று இருப்பதால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மருத்துவ வசதி பெற இயலவில்லை. எனவே, ரூ.20,000 என்பதை உயர்த்தி நிர்ணயம் செய்திட இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழிவந்த ‘திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாட்டில் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கிடைத்திட சட்டம் இயற்றிட இம்மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 7:

வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்புப் பணிகளுக்கு முறையாக உரிமம் பெற்றவர்களை அமர்த்திடுக!

தமிழ்நாட்டில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்புப் பணிகள் செய்திட  உரிமம் பெற்றோர் ஏராளமாக வேலையின்றி இருக்கும் நிலையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணி-புரியும் ஊழியர்களே சொந்தமாக ஆள்வைத்து மேற்கண்ட பணிகளைச் செய்வதைத் தடுத்து, தகுந்த உரிமம் பெற்றோர் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வழிவகை செய்திட தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள் வதோடு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகக் கட்டடங் களுக்கான இணைப்புகளை மீண்டும் வழங்கிட ஆவன செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள இம் மாநாடு  தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

தனியார்த் துறை ஊழியர்களுக்கு 

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய நிர்ணயம் செய்திடுக!

தனியார்த் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய நிர்ணயம்  செய்திடும் வகையில் சட்டம் இயற்றி தனியார்த்துறை ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிட தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 9:

“பெல்’ தொழிலாளர்களும் - அவர்களின் பிரச்சினைகளும்!

BHEL (‘பெல்’) முதன்மை வேலை அளிப்பவர் (Principal Employer) ஒப்பந்த தொழிலாளர் பணிகளை ஒப்பந்ததாரரிடம் வழங்குகிறார்.  ஒப்பந்ததாரர்கள் ஆண்டுதோறும் உரிமத்தைப் புதுப்பித்து வேலை செய்கிறார்கள். ஆனால், அரசு, ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 (CLR & Act 1970) அய் நடைமுறைப்படுத்துவதில்லை. முதன்மை வேலை அளிப்பவர் தொடர்ச்சியாக எல்லா வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கு கிறார்கள். இம்முறையை மாற்றியமைத்திட வேண்டு மெனவும், தொடர்ச்சி அல்லாத வேலைகளை மட்டும் ஒப்பந்ததாரருக்கு வழங்கி அரசு இயற்றியுள்ள சட்டம் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் மாற்றியமைக்க ஆவன செய்திட வேண்டுமெனவும், முதன்மை வேலையளிப்பவர் ஒப் பந்தம் வழங்கும்போது ஏற்கனவே அந்தப் பணிகளைச் செய்து வந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணிகள் மறுக்கப்படுவதைக் கண்டிப்பதோடு, ஏற்கெனவே பணி புரிந்த தொழிலாளர்ளைப் பாதிக்காதவாறு ஒப்பந் தங்களை மாற்றியமைக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

அமைப்பு சாராப் பணியாளர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேவை!

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு மற்ற அரசுத் துறை ஊழியர்களுக்கு இருப்பது போல எளிமையான காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்திட தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 11:

குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் மாநகர, பேரூர், ஊராட்சி குடிநீர் வழங்கல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 12:

கட்டுமானம், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுக!

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களில் தோட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கு மழைக்கோட், தொப்பி, களையெடுக்கும் எந்திரம் போன்றவை வழங்க ஆவன செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 13:

சேலம், காரிப்பட்டி அக்ரோ புராடக்ட்ஸ் பணியாளர்களுக்குச் சட்டப்படியான உதவிகள் தேவை!

சேலம் காரிபட்டி ஹட்சன் ஆக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களைப் பணியமர்த்தி அவர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய ESI, PF போன்றவற்றை வழங்காமல், மேற்படி தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதை இம்மாநாடு கண்டிப்பதுடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தொழிலாளர் பணித்துறையும், ஆய்வு செய்து ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிடுக!

போக்குவரத்துக் கழகங்களில் 30.06.2015க்குப்பின் ஓய்வு பெறுவோருக்கு 30.06.2015 அன்று பெற்ற 11.9 சதவிகிதம் அடிப்படையிலேயே இன்றுவரை அக விலைப்படி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. நீதிமன்றம் உடனடியாக  வழங்கிட உத்தரவிட்டும், போக்குவரத்துக் கழக நிருவாகம் மேல்முறையீடு செய்துள்ளதால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற் பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வுபெற்ற தொழி லாளர் குடும்பத்தினரின் இன்னல் நீங்கிட நடப்பு தேதி வரை நிலுவையிலுள்ள அகவிலைப்படியை ஊதிய ஒப்பந்தங்களின் திரண்ட பயன்களுடன் உயர்த்தி வழங்குவதோடு நிலுவைத் தொகையினையும் உடன டியாக வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதோடு, போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சீராக இயங்கிட பணியாளர் பற்றாக் குறையைக் களையும் வகையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மற்ற அரசுத் துறைகளில் உள்ளதுபோல போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கும் வேறு துறைகளிலும் பணியமர்த்தி அக்குடும்பங்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்வதோடு, மற்ற அரசுத்துறை ஓய்வூதியர்களைப் போல போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டுமாய் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 15:

போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி!

14ஆவது ஊதிய ஒப்பந்தம் (12/3) பெரும்பான்மை சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாக ஊதிய உயர்வு வழங்கிய திராவிட மாடல் தி.மு.க. அரசுக்கு நமது நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் சிறப்பாக முடிந்தாலும் போக்குவரத்துக் கழகங்களில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிறைவேற்றப் பட வேண்டும். அதேபோல் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர், ஆசிரியர், மின் வாரியம் போல் ஓய்வு காலப் பணப்பலன்கள் அனைத் தும் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வு காலப் பணப் பலன்களை வழங்கிடுக! 

கடந்த 1.11.2022 முதல் ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இறந்த போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கு அவர்களின் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. அவை உடனே வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 17:

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்திடுக!

குறிப்பிட்ட கால அளவில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும்! அடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர் முறையையே அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மாநில, ஒன்றிய அரசுகளை வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 18:

Diploma, B.E.,படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பணியில் 

முன்னுரிமை வழங்குக!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்காக (NLC) வீடு நிலங்களை விட்டுக் கொடுத்தவர்களுக்கும், ITI தொழிற் பழகுநர் பயிற்சி முடிந்தவர்களுக்கும் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரப்பணி வழங்கிட ஆவன செய்திட வேண்டுமெனவும் அதிகாரிகள்  தேர்வில் GATE தேர்வு என்கிற பெயரில் வடமாநில மாணவர் களுக்கு GET பணிவழங்குவதைக் கண்டிப்பதோடு, கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் Diploma, B.E., படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஊதிய உயர்வுக்கான நிர்ணயக் காலம் 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகள் எனக் குறைக்க வேண்டும். அதேபோல பொதுத்துறை ஊழியர்களுக்கென தனியாக ஊதிய நிர்ணயம் செய்திட ஆவன செய்ய வேண்டும்.

தீர்மானம் எண் 19:

மீனவத் தொழிலாளிகளின் 

இன்னல்களைக் களைந்திடுக!

தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளிக்கும் மீனவத் தொழிலாளிகள் அரசுக்கு வைத்த கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் சீர்தூக்கிச் செயல்படுத்துமாறு மாநில, ஒன்றிய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடியும், கைது செய்தும் - சிறையில் அடைத்தும், வலைகளையும், படகுகளையும் பறிமுதல் செய்தும் வரும் இலங்கை அரசின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 20:

பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் தேவை!

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு, குழந்தைப்பருவம் முதல் நல்லறிவு, கட்டுப்பாடு, நேரந்தவறாமை, இவை சார்ந்த ஒழுக்கங்களைக் கற்பிக்க வேண்டும் என்றும், கோயில் குளங்களிலும் சுற்றுலா செல்லும் இடங்களிலும் நீரில் மூழ்கி இருபால் சிறுவர் சிறுமிகள் மரணம் அடையும் கொடுமை அதிகரித்து வருவதையும் எண்ணி இம்மாநாடு மிகுந்த கவலைகொள்கிறது. பிள்ளைகள்மீது கண்காணிப்புடன் கவனம் செலுத்தி வளர்க்க வேண்டும் என்றும், நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டு ஆர்வங்களையும், கல்வி அக்கறையோடு சேர்த்துக் கவனிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களையும், ஆசிரியர் பெருமக்களையும், தன்னார்வலர்களையும், கழகத் தோழர்களையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 21(அ):

தொழிலாளர்களும் - இட ஒதுக்கீடும்!

அடிப்படையில் ஒடுக்கப்பட்டு காலம் காலமாக உரிமையற்றவர்களாக வாழ்ந்து தீர்த்த அடி மட்ட தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்து முதல் தலைமுறையாகக் கல்வி உரிமை பெற்று, மருத்துவம் போன்ற படிப்புக்குள் செல்ல ஆர்வம் காட்டும்  இந்தக் காலகட்டத்தில், அந்த முயற்சியின் குதிகால் எலும்பை முறிக்கும் வகையில் ‘நீட்’ தேர்வைத் திணித்திருப்பது திட்டமிடப்பட்ட, ஏற்கெனவே ஆதிக்கம் பெற்ற உயர் ஜாதி அரசியலின் திட்டமிட்ட சூழ்ச்சி என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

ஒன்றிய அரசு உடனடியாக நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 21(ஆ):

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு 

இடஒதுக்கீட்டின் தந்திரம்!

ஏற்கெனவே கல்வி ரீதியிலும், சமூக ரீதியிலும் மேல்நிலை ஆதிக்கத்தில் உள்ள உயர்ஜாதியினருக்கு மேலும் வசதியையும் வாய்ப்பையும் அகலத் திறந்து விடும் வகையில் உயர்ஜாதியில் உள்ள - பொருளா தாரத்தில் நலிந்தவர்கள் (EWS) என்ற பெயரால் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக 103ஆவது சட்டத் திருத்தமாக கொண்டுவந்து திணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசின் சமூக அநீதியை இம்மாநாடு கண்டிக்கிறது; இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. கட்சிகளை மறந்து தொழிலாளர் வர்க்கம் போராட முன்வரவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 22:

அனைத்து தொழிற்சாலைகளிலும், NAPS (National Apprenticeship Promotion Scheme) பயிற்சித் தொழி லாளர்களுக்கு பயிற்சி முடிந்த பின் வேலை வழங்கு வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திஜிணி (FTE (Fixed Term Employment) அடிப்படையில் நியமிக்கப் படும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க செய்ய ஆவன செய்ய வேண்டும்.

தீர்மானம் எண் 23:

விவசாயிகளின் நலனைப் பாதிக்க கூடிய இந்திய அரசின் வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல் படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது போன்று, தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கக் கூடிய இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதிலிருந்து விலக்களிக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


No comments:

Post a Comment