பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே! வருந்திய டி.எம்.எஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே! வருந்திய டி.எம்.எஸ்

நூற்றாண்டு விழா காணும் மறைந்த திரையிசைப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (மறைவு: 25.05.2013). ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ்.சின் குரல் கோலோச்சியது. டி.எம்.எஸ். பற்றிய ஆவணப்படம் தயாரித்த திரைக் கலைஞர் விஜயராஜ், அந்த ஆவணப் படத்துக்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை 2007 மார்ச் 8ஆம் தேதி நேர்காணல் செய்த நினைவு களைப் பகிர்ந்துகொண்டார். 

"ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் பேட்டி எடுக்க வேண்டும் என்று ஆலோசித்த போது, முதலில், "பெரியார் திடலுக்கு வந்தால் நெற்றியில் இருக்கும் திருநீற்றை அழிக்க வேண்டுமா?" என்று விஜயராஜிடம் கேட்டிருக்கிறார் டி.எம்.சவுந்தரராஜன். ‘மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க் கின்ற இடம் அது. ஆகவே நீங்கள் உங்கள் விருப்பப்படி வரலாம்’ என்று சொன்ன பிறகு வந்து ஆசிரியரைச் சந்தித்து மகிழ்ச்சி யடைந்தார் டி.எம்.எஸ்.

ஆசிரியரிடமிருந்து டி.எம்.எஸ்.சுக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்து, “இவ்வளவு நாளும் இங்கு வராமல் இருந்து விட்டேனே” என்று வருந்தினார்." அந்தப் பேட்டியில் ஆசிரியர், டி.எம்.எஸ். அவர்களைப் பற்றி சிறப்பாக பேசிட, அதனை விஜயராஜ் ஆவணப் படத்துக் காகப் பதிவு செய் திருக்கிறார். 

அப்போது, “டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள் மட்டும் பாடவில்லை. திரையிசையில் பகுத்தறிவுப் பாடல்களையும் பாடியிருக்கிறார் என்று பெரிதும் அறியப் படாத பல பாடல் களை ஆசிரியர் அவர்களுக்கு எடுத்துக் காட்டினோம். ‘பணக்காரப் பெண்’ என்ற படத்தில் புலமைப்பித்தன் எழுதிய “அண்ணல் வழியில் வைக்கம் வீரர் பெரியார்”, ‘கண்ணன் வருவான்’ எனும் படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிய “பூமியைப் படைத்தது சாமியா?”, ’தங்கதுரை’ படத்தில், “மனிதனும் இங்கே தன்னை மறந்தான்! கடவுளைத் தேடி கண்ணை இழந்தான்!” போன்ற 12 க்கும் மேற்பட்ட பகுத்தறிவுப் பாடல்களைப் பாடியுள்ளார் என்ற தகவலை ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டோம்.

அப்போது டி.எம்.எஸ்.சுக்கு ஆசிரியர் தான் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” புத்தகத்தை வழங்கி அவரை சிறப்பித்தார்” என்று தெரிவித்தார் ஆவணப்பட இயக்குநர் விஜயராஜ். அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத டி.எம்.எஸ். அவர்கள், இப் புத்தகத்தைப் படித்துவிட்டு, “இப்படி யெல்லாம் ஆசிரியர் வீரமணி எழுதுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இவ்வளவு நாள் ஆசிரியரைப் பற்றி குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விட்டேன்’ என்று டி.எம்.எஸ். தனது வியப்பைப் பகிர்ந்து கொண்ட செய்தி யையும் நம்மிடம் தெரிவித்தார் இயக்குநர் விஜயராஜ்.


No comments:

Post a Comment