மே 7 இல் நடைபெறவிருக்கும் திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப் பாராட்டு!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தொழிலாளர் பணி நேரத்தை - சில தொழிற் சாலைகளில் தொழிலாளர்கள் விரும்பினால் 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம் என்று சட்ட மன்றத்தில் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் விடுத்த வேண்டு கோளை ஏற்று, நமது முதலமைச்சர் அதை நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அறிவித்தார்.
மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்தினோம்!
அதனை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது, அதையே திரும்பப் பெற்று ரத்து செய்ய வேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்திக் கோரிக்கை வைத்தோம்.
அதனை இன்று (1.5.2023) நமது முதலமைச்சர் ஏற்று, மே நாள் கொண்டாட்டத்திற்கு முழு மகிழ்ச்சி அனைத்துத் தொழிலாளருக்கும் ஏற்படும் வகையில் அம்மசோதாவைத் திரும்பப் பெற்றதாக - ரத்து செய்த தாக அறிவித்திருப்பதற்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு - வாழ்த்து - நன்றியைத் தொலைபேசியில் உடனடியாகத் தெரிவித்தோம்.
முதலமைச்சரும் நன்றி தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தொழிலாளரணி
மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப்
பாராட்டு விழா!
வருகிற 7 ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் முதலமைச் சருக்குப் பாராட்டு விழாவும் இணைத்து நடத்திடுவோம் என்று அவர்களிடமே மகிழ்ச்சியோடு தெரிவித்தோம்.
உண்மையான மக்களாட்சி தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' ஆட்சியாகவே நடைபெறுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டும் இது!
இது தொழிலாளருக்கு அளித்த ஆக்கப்பூர்வ பரிசு - இவ்வாண்டு!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.5.2023
No comments:
Post a Comment