கால்டுவெல்லின் 209ஆவது பிறந்த நாள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

கால்டுவெல்லின் 209ஆவது பிறந்த நாள்

7

ஆரியம் வேறு, பழைமையான திராவிடம் வேறு என்று சான்றுகளோடு கூறி தமிழுக்கு செம்மொழி சிறப்பை தேடித்தர காரணமாக இருந்த ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் இன்று. [7.5.1814 - 28.8.1891]

கால்டுவெல் என்று அழைக்கப்படுபவர், தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல். இவர் அயர்லாந்து நாட்டின் கிளாடி ஆற்றங்கரையிலுள்ள பெல்பாஸ்ட் என்ற சிற்றூரில் 1814-ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிறந்தார். ஸ்காட்லாந்தில் பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த அவர், ஆர்வத்தின் காரணமாக இளமையிலேயே ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்று விளங்கினார். அதோடு ஓவியக் கலையையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர், சமய நூல்களையும், மொழியியல் நூல்களையும் தேடித்தேடி படிக்கத் தொடங்கினார்

1838 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில் பிரவுன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். மேலும், அவர் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலை நாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் சிறந்த புலமைப் பெற்றிருந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்து, அதை வட இந்திய மொழிகளோடும், சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு பார்த்து அதன் அடிப்படையில் தமிழ் மொழியும் மற்ற தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தை விட தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவை என்று உரத்துச் சொன்னவர்.

இதன் பயனாக, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தில், ‘ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட மொழி இனங்கள் வேறு, தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை, வடமொழி இன்றியே தனித்து இயங்கக்கூடியது தமிழ் என தக்க சான்று காட்டி நிரூபித்துள்ளார்.

தொல்காப்பியம் முதல் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் வரையிலான நூல்களெல்லாம் தமிழின் அமைப்பிலக்கணம் கூறுவன. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சிதான் முதன்முதலில் தமிழின் ஒப்பிலக்கணம் கூறியது. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், சம்ஸ்கிருதம்தான் தமிழுக்குத் தாய் என்ற கருத்தை முதலில் கருக்கலைப்புச் செய்தது

53 ஆண்டுகள் அயராது தமிழ்ப்பணி, இறைப்பணி, கல்விப்பணி மற்றும் சமூகப் பணி ஆற்றி கால்டுவெல் 1891-ஆம் ஆண்டில் தன் னுடைய 77-ஆவது வயதில் கொடைக்கானலில் மரணம் அடைந்தார்.  இத்தனை புகழ் பெற்ற ராபர்ட் கால்டுவெல்லின் 209ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ஆனால் கால்டுவெல் என்றாலே ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பார்ப்பன சக்திகளுக்குக் குமட்டிக் கொண்டு வரும். காரணம் புரிகிறதா?

-  மயிலாடன்


No comments:

Post a Comment