பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் எத்தகைய இராமனடி!

(10.4.2023 அன்றைய தொடர்ச்சி...)

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணாம் ஆவது மிக நல்லது. 

- விஜய பாரதம், 31.3.2023

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ சாங்கோ பாங்கமாக விவரிக்கிறது.

ஆனால் ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் இராமன் பற்றி என்ன சொல்லுகிறது. இதோ ஆதாரங்களின் குவியல்! 

இனி, இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.

1. கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டான் என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். இதை இராமனே பரதனிடம் கூறுவதாக அயோத்தியா காண்டம், 107 ஆவது சருக்கத்தில் காணப்படுகிறது.

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும். குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். 

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.

4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு, ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி. இலட்சு மணனை ஏய்க்க. "இலட்சுமணா. உனக்காகத்தான் நான் முடிசூட்டிக்கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப்போகிறாய்" என்று தாஜா செய்கிறான் அயோத் தியா காண்டம், 4 ஆவது சருக்கம்). ஆட்சி கைக்கு வந்த பிறகு, இலட்சுமணனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை.

5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். 

6. “நாடு உனக்கு இல்லை, நீ காட்டுக்குப் போக வேண்டும்" என்று தசரதன் சொன்னவுடன் மனத்துக் குள் துக்கப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 19 ஆவது சருக்கம்).

7. “நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய்கனி களைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே" என்று தாயாரிடம் சொல்லிச் சங்கடப்படுகிறான். (அயோத்தியா காண்டம், 20 ஆவது சருக்கம்). (ஆனால், காட்டில் மாமிசத்தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்).

8. "என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போன தோடல்லாமல். நான் காட்டுக்கும் போகவேண்டியதாயிற்றே" என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல் லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம். 20,26,94 ஆவது சருக்கம்).

9. "எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப் பானா?” என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்).

10. இராமன் பல மனைவிகளை மணந்து இருக் கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான திரு.சி.ஆர்.சீனிவாச அய்யங்கார். 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட வால்மீகி இராமாயணம் 2 ஆம் பதிப்பு, அயோத்தியா காண்டம், 8 ஆவது சருக்கம். 28 ஆம் பக்கத்தில் "இராமன் பட்ட மகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான்'” என்றும். திரு.மன்மதநாத் தத்தரால் 1892 ஆம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் 202 ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டம், 8ஆவது சருக்கத்தில், "இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உன்னுடைய (கைகேயியுடைய) மருகியர் (பரதன் மனைவியர்) துன்பத்தை அடைவர்" 'என்றும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாய ணத்தில் பல இடங்களில் "இராமனின் மனைவிமார்கள்" என்றே வாசகங்கள் வருகின்றன.

11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வந்திருக்கிறான்.

12. கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும். மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு "கைகேயி தீய குணமுடையவள்" என்கிறான்! அயோத்தியா காண்டம், 31,33 ஆவது சுருக்கம்).

13. கைகேயி ஒரு கெட்ட குணமில்லாதிருந்தும், "அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்" என் கிறான் அயோத்தியா காண்டம். 31,33 ஆவது சருக்கம்),

14. "என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடு வாள்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்று சொல்லி, இழிவான பழியைச் சுமத்துகிறான்.

15.காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கரு தக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம். பலமுறை யும் "கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்" என்று பல தடவை சொல்லியிருக்கிறான்.

16. காட்டில் இலட்சுமணனிடம். “இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் தந்தையும் மூப்பினராகி, யானும் காடடைந்தமையால், எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.

17. கைகேயி இராமனிடம். “இராமா! அரசர் நாட் டைப் பரதனுக்கு முடி சூட்டுவதாகவும், நீ காட்டிற்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்" என்று சொன்னபோது, இராமன். "அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே" என்று சொல்லுகிறான். அயோத் தியா காண்டம், 19 ஆவது சருக்கம்) என்றும்

18.தந்தையை, "மடையன், புத்தி இல்லாதவன்" (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றும் சொல்லுகிறான். 

19, தந்தையை, நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டு இரு. நான் காட்டுக்குப் போய் வந்துவிடுகிறேன்" அயோத்தியா  காண்டம். 34 ஆவது சருக்கம்) என்று சொல்லிப் பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.

20. “எனக்கு கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று. என்னை அயோத்திக்கு அரச னாக்கிக் கொள்ளுவேன். உலகத்தார் பழிப்பார்களே என்று தான் சும்மா இருக்கிறேன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்கிறான். இதனால், இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

21. தன் மனைவி சீதையைப் பார்த்து. "நீ பரதன் மனங்கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள். அதனால், நமக்குப் பின்னால் லாபம் ஏற்படும்" அயோத் தியா காண்டம், 26 ஆவது சருக்கம்) என்கிறான்.

22. இராமன் காடுசென்ற செய்தி கேட்டு மனம் வருந்திய பரதன் இராமனைக் கூப்பிட காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது. "பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணி விடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?" என்று கேட்கிறான். அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

23. மற்றும் "உன் தாய், அவளது எண்ணம், நிறை வேறிச் சுகமாய் இருக்கிறாளா?'' என்று கேட்கிறான். (அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

24. பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக்கொடுத்த பிறகே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே சுல்க மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான் (அயோத்தியா காண்டம். 107 ஆவது சருக்கம்)

25. பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இரா மனுடைய பாதரட்சையை வாங்கிவந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராயிருப்பவனை. இராமன் பரதன் மீது சந்தேகப்பட்டு, ஊருக்குச் சமீபத்தில் வந்தவுடன் அனுமானை விட்டு "நான் படைகளோடும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகி றேன் என்று பரதனிடம் சொல்லு. அப்பொழுது, அவன் முகம் எப்படி இருக்கிறது? என்பதையும், இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான் என்பதையும் கவனித்து வந்து சொல்லு. ஏன் ஏனில், எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் அயோத்தி நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது?” என்று சொல்லி பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான். (யுத்த காண்டம், சருக்கம் 107).

26. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச் செய்து அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு. அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும் அதற்காக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான்.

27. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும். இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாகவேண்டியதாயிற்று. அதாவது. அவள் மண் ணில் மறைய வேண்டியதாயிற்று.

28. தமையனைக் கொல்லச்செய்து. இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதி. துரோகச் சிந்தனை யோடு வந்த சுக்ரீவன். விபீஷணன் ஆகிய அயோக்கி யர்களை, அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.

29. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதரத் துரோகிக்காகவேண்டி, மறைந்திருந்து திடீ ரென்று கொல்லுகிறான். மறைந்திருந்து கொன்றவனைத் தான், “இராமன் ஒரு வீரன்" என்று மூட மக்கள் கருதி இருக்கிறார்கள். பார்ப்பனர்களும் இதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.

30. விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியா மலே தனது கெட்ட எண்ணத்தையும், வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்தியிருக்கிறான். அதாவது, "தனக்கு மூத்தவன் தீயவனாயிருந்தாலும் அவனுக்குக் கீழ்ப் பட்டு நடக்கவேண்டும் என்கின்ற அறத்தைப் பரத னைப்போல் எல்லோரும் கைக்கொள்ளமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?" என்கிறான். (யுத்த காண்டம், சருக்கம் 17) இதில் தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்கிறான்.

31. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, "மிரு கங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டிய தில்லை" என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.

32. இராமன், பல பெண்களைக் கொன்று மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து, அங்கஈனமாக் கிக் கொடுமையும் செய்திருக்கிறான்!

33. பல பெண்களைக் கொன்று இருக்கிறான் (தாடகை). 

34. பெண்களிடம் பல இடங்களிலும் பொய் பேசி இருக்கிறான்.

35. பெண்களைக் கேவலமாய் மதித்து இருக்கிறான். "பெண்களை நம்பக் கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது" என்கிறான் அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

36. அதிகக் காமாந்தகாரனாக இருந்திருக்கிறான்.

37. அநாவசியமாக உயிர்களைக் கொன்றும், தின்றும் இருக்கிறான்.

38. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத் தான் யாருக்கோ வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான் (ஆரண்ய காண்டம், 6,10 ஆவது சருக்கம்).

39.அரக்கர்களோடு வலியச் சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே. சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக் கிறான் (ஆரண்ய காண்டம், 9,10 ஆவது சருக்கம்).

40. கரனோடு போர் புரியும் போது. "உங்களை எல் லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட் டேன்" என்கிறான். (ஆரண்ய காண்டம், 29 ஆவது சருக்கம்)

41. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகி யாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணடைகிறான். "என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்டவேண்டும் என்கிறான்.

42. விபீஷணன் அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு வந்த துரோகி என்று தெரிந்தும், அவனைச் சேர்த்துக் கொள்கிறான் (யுத்த காண்டம், சருக்கம் 17),

43. இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி விட்டு. (யுத்த காண்டம், சருக்கம் 18) "சீதையை விட்டு விட்டால், இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுகி றேன் என்று சொல்லு" என்பதாக அங்கதனிடம் இராமன் சொல்லித் தூது அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன்மீது வேறு குற்றமில்லை என்பதும் தெரி கிறது. (யுத்த காண்டம், சருக்கம் 40)

44. பரதனும் கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும். "சத்யாகிரகம்" செய்தும் அழைத்தபோது. 'தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய, யாரு டைய பேச்சையும் கேட்கமாட்டேன்" என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்து விட்ட இராமன். அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய். அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் சம்மதிக்கிறான் (யுத்த காண் டம், சருக்கம் 130).

45. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராம னைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல், திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொள்கிற வரையில் அதே கவனமாக, ஆசையாக. நம்பிக்கையாக இருந்திருக்கிறான். இதைப் பலமுறையும் தன்னுடைய பேச்சுகளால் வெளிப்படுத்துகிறான்.

46. தபசு செய்ததற்காக சூத்திர சம்பூகனைக் கொன்று இருக்கிறான் (உத்தர காண்டம், 76 ஆவது சருக்கம்).

47.கடைசியாக. சாதாரண மனிதர்களைப் போலவே இராமன். இலட்சுமணனையும் தள்ளிவிட்டு. தானும் ('எமனால்') ஆற்றில் விழுந்து சாகிறான். (உத்தர காண்டம். சருக்கம் 106) பிறகு உப-இந்திரனாகத்தான் ஆனான் (உத்தர காண்டம். சருக்கம் 11).

48. இராமன் தன் கையைப் பார்த்துக் கூறுவதாவது: "ஹே ! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சி சோர்த்விஜஸ்ய ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்ருபானாம்: ராமஸ்ய காத்ரம..."

பொருள்: ஓ! வலதுகையே! இறந்துபோன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு; நீ இராமனது அங்கங் களில் ஒன்றன்றோ? (வால்மீகி இராமாயணம்)

குறிப்பு: சம்பூகன் என்கிற 'சூத்திரனை' தவஞ்செய்ததற்காகக் கொலை செய்த இராமன் விஷ்ணுவின் அவதாரமாம்! இராமனைப் போன்ற அரசன் இக் காலத்திலும் இருந்தால், 'சூத்திரர்' எனப்படுபவர்களின் கதி என்னவாகும்?

49. இராமன் ஒடித்தது சிவன் வில் என்பது. இது முன்னமேயே ஒடிந்து இருந்த வில் என்பதற்கு "அபிதான சிந்தாமணி"யில் எட்டுப் பக்கங்களில் அதாவது, 157, 331, 571, 663, 894, 1151, 1173, 1494 ஆவது பக்கங்களில் ஆதாரம் காணப்படுகின்றது.

50. இராமாயணங்களிலும் 'பரசுராமன்' சொன்னது முதலிய இடங்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படு கின்றன. இதை ஒடிக்கும்போது இராமனுக்கு அவன் தாயார் சொல்லுகிறபடி 5 வயது: தகப்பன் சொல்லுகிறபடி 10 வயது, பெண்டாட்டி (சீதை) சொல்லுகிறபடி 12 வயது - எப்படி இருந்தாலும் "முன்னமேயே ஒடிந்த வில்” என்பது கதையின் படி உண்மை. 

நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து 

வால்மீகி இராமாயண இராமன் நேர்மையானவன் அல்ல: துரோகமான காரியத்தில் பங்கு கொண்டவனே யாவான். 

அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என் பதும். இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதை யும். இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.

எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், "அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக" என்று கைகேயியின் தந்தைக்கு வாக்களித்து. அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.

இந்த உண்மை இராமனுக்கும் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக் கொண் டிருக்கிறான்.

இதை பரதனிடம் எடுத்துச் சொல்லி பரதனைத் தனது தாயார் மீது குறைகூற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருக்கிறான் என்பதாகக் கூறுகிறார்.

மற்றும், இந்தச் சேதி இராமனின் தாய் கவுசலைக்கும் தெரியும், மற்றும் வசிஷ்டர் முதலிய ரிஷி குருமார் களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும்

ஆகவே பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவள் தாய், ரிஷி குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று. சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தை யாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்கர் ஆராய்ச்சி - ரஷ்யப்  பத்திரிகையின் வெளியீடு "The American interpretation makes Rama something in the nature of a chicago gangster and sita a light minded girl rather pleaded at being kidnapped by the demon Ravana"

இதன் மொழிபெயர்ப்பு:

"இராமன் சிகாகோ கொள்ளைக்காரன் போன்றவன், சீதை, இராவணன் தன்னைத் தூக்கிச் செல்வதை மனதார விரும்பியவள். மகிழ்ச்சியுடன் இராவணனுடன் சென்ற அற்பப் புத்தியுள்ள பெண்"

அமெரிக்காவில் Ramayana என்பவர் எழுதிய News and views from the soviet union  என்னும் புத்தகத்தில் மேற்குறித்த கருத் துப்பட மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வரும்Saturday, November 20, 1954 Vol. XIII. 263 பக்கம் 2 இல் இது வெளியிடப் பட்டுள்ளது.

(ஆதாரம்: தந்தை பெரியார் எழுதிய 

"இராமாயணப் பாத்திரங்கள்")


No comments:

Post a Comment