சென்னை, ஏப்.29 மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக இயற்கையெய்தினார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒன்றிய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி ஒன்றிய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழ்நாடு பொதுப் பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை தடைசெய்யக்கோரிய மனு
உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, ஏப்.29 பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல்கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில், தற்போது, 2-ஆவது கட்ட பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், ஒன்றிய பாஜக அரசின் மேனாள் வழக்குரைஞருமான முகுல் ரோதக்கி வாதிட்ட பிறகு, மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து தள்ளுபடி செய்தனர். ஏற்கெனவே பாட்னா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தை நாடினர். இப்போது உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதால் மாநில அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்த எந்த இடையூறும் இல்லை
No comments:
Post a Comment