உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
காலவரையறையின்றி - மாநில சட்டப் பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை சுட்டிக்காட்டி, குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் இதைக் கவனத்தில் கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காது கால தாமதம் செய்கிறார்; அவருக்கு அறிவுறுத்தி விரைந்து செயலாற்றி கடமைகளை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா மாநில அரசு போட்ட வழக்கில் (ஆளுநர் - எதிர், பாரத ராஷ்டிர சமதி என்ற முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் உள்ள கட்சி) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணையில், தெளிவாக ஆளுநருக்கு ஆணை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
"மாநிலங்களில் அரசியல் சாசன தலைமை (கவர்னர்) அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவை மனதில் கொள்ள வேண்டும்.
ஒப்புதலுக்காக மசோதாக்கள் அனுப்பப்படுகிறபோது அவற்றைக் கிடப்பில் போடக் கூடாது.
தங்களுக்கு ஒப்புதல் இல்லாத மசோதாக்களை சட்டப் பேரவையில் மறு ஆய்வுக்காக ஆளுநர்கள் கூடிய விரைவில் அதற்கான குறிப்புடன் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
'கூடிய விரைவில்' என்னும் போது அது ஒரு குறிப்பிட்ட ஓர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
இதை மனதில் கொள்ள வேண்டும்".
இந்த முக்கிய அறிவுரையை தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி முக்கியமாகப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்!.
ஏனெனில் இதுவரை சுமார் 18 மசோதாக்கள் அப்படியே - ஒப்புதல் தரப்படாமலும் அல்லது திருப்பி அனுப்பப்படாமலும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆளுநரால்
ஜனநாயக முட்டுக்கட்டை
ஜனநாயக முட்டுக்கட்டை தமிழ்நாட்டில் நிலவுவதால், அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதோடு, ஆளுநருக்குக் கறுப்புக் கொடி போரட்டங்களையும் நடத்த வேண்டிய கட்டாயம் - அவர்கள்மீது ஆளுநரின் போக்கால் திணிக்கப்பட்டுள்ள அரசியல் அவலம் ஏற்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு ஜனநாயக ஆட்சியைச் செயல்படவிடாமல் இப்படி முடக்குவது, அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் முற்றிலும் முரணானது.
கூடிய விரைவில் என்றால்...
எனவே "கூடிய விரைவில்" என்று அரசமைப்புச் சட்டப் பிரிவில் சொற்களை இணைத்ததற்கு நியாயமான பொருள் என்ன என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ஆகவே ஆளுநர் தமிழ்நாடு சட்டமன் றத்தில் நிறைவேற்றப்பட்டு, பல மாதங் களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளித்தோ, திருப்பி அனுப்புவதையோ உடனடியாகச் செய்தாக வேண்டும்.
'நிறுத்தி வைத்தல்' என்றால் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே பொருள் என்பது மாதிரி ஒரு விசித்திர முரண்பாடுடன் அர்த்தம் கூறிய ஆளுநர் திரு.ஆர்.என். ரவியின் கருத்து எதையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் வெள்ளிடைமலையாகிறது.
இனியும் தாமதம் வேண்டாம்!
மக்களாட்சியின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
26.4.2023
No comments:
Post a Comment