பார்ப்பனர் சூழ்ச்சி தமிழன் படித்தால் தரம் குறையுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

பார்ப்பனர் சூழ்ச்சி தமிழன் படித்தால் தரம் குறையுமா?

*தந்தை பெரியார் 

நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங் குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி - இழி மக்களான சில பார்ப்பனரல்லாத, பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் - ஆதரவாளர்களின் ஆதிக்கமும், ஒரு அளவுக்கு ஒழிக் கப்பட்ட பின்பே சிறிது மான உணர்ச்சி பெற்று, ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததன் பயனாய் நாம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

வளர்ச்சி எப்படி என்றால், கல்வித் துறையில் பார்ப்பான் ஆதிக்க காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தம் நாம், மூன்றே கால் கோடி மக்களில் (16 இலட்சம்) பதினாறு இலட்சம் மக்களே படித்துக் கொண்டிருந்த நம் மக்கள் இன்று (64 இலட்சம்) அறுபத்து நான்கு இலட்சம் மக்கள் படிக்கும்படியாகவும், மற்றொரு கணக்குப்படி, ஜனத்தொகையில் 100க்கு 10 விகிதமே (நூற்றுக்கு பத்து விகிதமே) படித்திருந்த மக்கள் இன்று 100க்கு 40 விகித (நூற்றுக்கு நாற்பது விகித)த்திற்கு மேல் படித்திருக்கிறவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன் இனி அய்ந்து வருட காலத்திற்குள் 100க்கு 100 மக்களையும் எழுத, படிக்க கற்பித்த பிறகே உறங் குவேன் என்று நம் இரட்சகர் காமராஜர் திட்டம் வகுத்த பின், நம் நாட்டுக்குள் குஷ்டரோகம் போல் புகுந்து இருக்கிற பார்ப்பனர்கள் பலர் வயிறெரிந்து அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யய்யோ!! கல்வித்தரம் குறைந்து போய்விட்டதே என்று கட்டுப்பாடாக மக்கள் காதடையும்படி ஊளையிடுகிறார்கள்.

தமிழன் படித்தால் தரம் குறையுமோ?

இப்படி இந்தப் பார்ப்பனர்கள் ஊளை இடுவதை தமிழர் சமுதாயம் இனியும் பொறுத்துக் கொண்டிருப்பது தமிழர் களுக்கு மாபெரும் மானக்கேடேயாகும். ஏனென் றால் இப் போது தமிழர் பிள்ளைகள் படித்திருக்கும் படிப்பெல்லாம் தரம் குறைந்த படிப்பு என்று தானே பொருளாகிறது?

நம் நாட்டில் அண்ணாமலை யுனிவர்சிட்டி ஏற்படும் முன்பு பச்சையப்பன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மக்களை இவன் பச்சையப்பன் காலேஜ் பி.ஏ. என்று ஏளனம் செய்வார்கள். பிறகு அண்ணாமலை சர்வகலா சாலை ஏற்பட்ட பிறகு பச்சையப்பன் கல்லூரியை விட்டு விட்டு இவன் அண்ணாமலை யுனிவர்சிட்டி பி.ஏ. என்று சமீப காலம் வரை ஏளனம் செய்து வந்தார்கள்.

ஏனென்றால், முன்பெல்லாம் அரசாங்க காலேஜும், கிருஸ்துவர் காலேஜும்தான் நாட்டில் இருந்து வந்தது; அவற்றில் பார்ப்பனருக்கும் கிருஸ்துவர்களுக்கும்தான் 100க்கு 90 பேர்களுக்கு இடம் கிடைக்கும். நம் பிள்ளை களுக்கு கல்தாதான் கிடைக்கும்.

அப்போதெல்லாம் பச்சையப்பன் காலேஜ் இருந்ததால் நம் பிள்ளைகளுக்கு 100க்கு 50 இடமாவது கிடைத்து வந்தது. பிறகு அண்ணாமலை சர்வகலாசாலையில் நம் பிள்ளைகளுக்கு சிறிது தாராளமாய் இடம் கிடைத்து வந்தது. ஆகவே நம் பிள்ளைகள் அதிகமாகச் சேர்ந்து படிக்க முடிந்ததாலேயே பார்ப்பனரின் ஆத்திரமானது இந்தப்படி இழிவாய்ச் சொல்லி படித்த மரியாதையைக் குறைத்து வந்தார்கள்; இப்போது அந்தக் கூச்சல் குறைந்துவிட்டது.

கல்வி பற்றி தரம் பேசுவது மோசடியே

ஆகவே கல்வியைத் தரமுடையதாக்குவதும், தரமற்றதாக்குவதும் பார்ப்பனருடைய நோட்டத்தில் பட்டுவிட்டது. பார்ப்பனர்களின் இந்தக் கட்டுப்பாடான அயோக்கியத்தனத்தை நமது இரட்சகர் காமராஜர்தான், - இப்படிக் கூறுவது தங்களுக்குத்தான் கல்வி உரிமை யானது; மற்றவர்கள் படிப்பது நம் வாழ்வுக்கு ஆபத்தானது என்று கருதும் அயோக்கியர்கள் கருதிச் செய்யும் மோசடி வேலை - என்று சொன்னார். அதற்குப் பிறகும் நமது அரசாங்கம், நமது கல்வி, தரம் குறைந்த கல்வி ஆகிவிட்டது என்று கருதினால் அது நமது பொல்லாத வாய்ப்புத்தான். நிற்க. இன்று யார்தானாகட்டும் கல்வித் தரம் குறைந்து விட்டது என்று சொல்ல என்ன காரணம்? என்ன ஆதாரம் காட்டுகிறார்கள்? அல்லது எதைக்கொண்டு தரக்குறைவு பேசுகிறார்கள்?

தரக்குறைவு எப்படி ஏற்படும்?

பள்ளிக்கூடங்கள், காலேஜுகள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது போலவே தான் பார்ப்பனர்கள், கிறிஸ்து வர்கள் நிர்வாகத்தில் இன்றும் இருந்து வருகின்றன. ஆசிரியர்கள், ஹெட்மாஸ்டர்கள் (Headmasters), புரஃபசர்கள் (Professors), செனட்டர்கள் (Senators), சிண்டிகேட்டர்கள் (Syndicaters), வைஸ் சான்ஸ்லர்கள் (Vice Chancellores), பரீட்சை செய்பவர்கள் (Examiners),  டெக்ஸ்ட்புக் எழுதுபவர்கள் (Text Book Writers) பலர் 100க்கு 50க்கு மேற்பட்டவர்கள் தகுதி திறமை பெற்ற, பழைய காலப் படிப்பு பட்டம் பெற்ற பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள். மற்றும் கல்வி தரமாய் இருந்த காலத்தில் கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் செய்து வந்த ஏற்பாடுகளில் எதில் மாறுதல் ஏற்பட்டு விட்டது?

ஆசிரியர் தகுதியைக் குறைத்துவிட்டார்களா? பாடத் திட்டத்தை மாற்றி விட்டார்களா? பரீட்சையாளர்களை மாற்றி விட்டார்களா? பரீட்சைக் கேள்விகளின் தன்மையை மாற்றி விட்டார்களா? அல்லது பரீட்சையில் தேறவேண்டிய அளவு மார்க் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களா?

பரீட்சை பேப்பர்களைத் திருத்தும் நபர்களின் யோக்கியதையையோ அவர்களது நாணயத்தையோ குறைத்து விட்டார்களா? கல்வி அதிகாரிகளின் யோக்கிய தாம்சத்தைக் குறைத்து விட்டார்களா?

கல்லூரிகளின் கவனிப்பு 

குறைக்கப்பட்டு விட்டதா?

யுனிவர்சிட்டிகளின் (Universities) யோக்கியம் நாணயம் குறைந்துவிட்டதா? சிண்டிகேட் யோக் கியதை கெட்டு விட்டதா? மற்றும் எந்த விதத்தில் எந்த காரியத்தால் என்ன மாறுதலால் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்று கூறுபவன் யோக்கியனாகவோ, நாணயஸ்தனாகவோ, மானமுள்ளவனாகவோ இருந்தால் எடுத்துக்காட்ட வேண்டாமா?

சர்டிஃபிகேட் பெற 

யோக்கியதை என்ன?

அரசாங்கத்தின் ஏற்பாட்டுப்படி படிப்பின் யோக்கியதை பரீட்சையில் பாஸ் செய்து சர்டிபிஃகேட் (Certificate)  பெறுவதுதானா? அல்லது பாஸ் செய்தாலும் இத்தனை மார்க் வாங்க வேண்டுமென்பதா?

ஆகவே படிப்பு திறமையானதாக இருந்த காலத்தில் படிப்புக்காக செய் திருந்த ஏற்பாடுகளில், நிபந்தனைகளில் நிர்வாகங்களில் எது எதில் குறைக்கப்பட்டு விட்டது? என்று கேட்கிறேன். அல்லது படிப்பை ஆதாரமாக, அளவாகக் கொண்டு கொடுக்கப்பட்ட உத்யோகங்களில் மார்க் குறைவு காரணமாக எந்த உத்யோகஸ்தனால் என்ன கேடு ஏற்பட்டது? என்று கேட்கிறேன்.

பார்ப்பன உத்யோகஸ்தர்களின் 

யோக்கியதை தெரியாதா?

சீமைக்குப் போய் அய்.சி.எஸ். பாஸ் செய்து திறமை பெற்று வந்த கெட்டிக்கார அய்.சி.எஸ்.களில் பார்ப்பனர்களில் தலா 3 பேர் நாணயக் குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டும், தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள். மற்றும் பலர் தண்டிக்கப்படும் பதவியில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவர்கள் படிப்பில் தரம் குறைந்தவர்கள் அல்ல, பரீட்சையில் குறைந்த அளவு மார்க் வாங்கி பாஸ் செய்தவர்களுமல்ல.

மற்றும் பெரிய படிப்பு, மிக மிக கெட்டிக்காரர் என்று பெயர் கொடுக்கப்பட்டு அய்க்கோர்ட் சீப் ஜட்ஜ்(High Court Chief Judge)   பதவி கொடுக்கப்பட்ட தகுதி, திறமை பெற்ற பார்ப்பனர் ஒருவர், தனது பிறந்த தேதியை பொய் தேதி கொடுத்து அரசாங்கத்தை மோசடி செய்த பார்ப்பனர் தகுதி திறமையில் குறைந்தவரா? என்று கேட்கிறேன்.

தகுதி - திறமை தமிழர்க்கு 

மட்டும்தான் தேவையா?

அண்மையில் சென்னை அய்க்கோர்ட்டில் பப்ளிக் பிராசிக்யூட்டராக (High Court Public Prosecutor) நியமிக்கப்பட்ட திரு.V.P. ராமன் அவர்கள் அய்க்கோர்ட்டில் தொழில் நடத்தும் வக்கீல்களில், குறிப்பாக கிரிமினல் வக்கீல்களில் எத்தனையாவது வரிசை தகுதி திறமை உடையவர் என்று கேட்கிறேன்?

மற்றும் அய்க்கோர்ட்டில் முன்பு சர்க்கார் வக்கீலாக இருந்த திரு.அழகிரிசாமி அவர்களுக்கு சர்க்கார் வக்கீல் வேலை  (கவர்மெண்ட் பிளீடர்) கொடுத்தபோது 100 (நூற்று)க்கணக்கான வக்கீல்கள் தகுதி, திறமை பற்றிக் கூப்பாடு போட்டு ஒரே கூச்சலாக ஊளையிட்ட வக்கீல்கள் இந்த அய்க்கோர்ட் ஜட்ஜைப் பற்றியோ, இந்த பப்ளிக் பிராசிக்யூட்டரைப் பற்றியோ தகுதி, திறமை, நாணயம் பற்றியோ யார் யார் பேசுகிறார்கள்; கேட்டார்கள்? என்று கேட்கிறேன்.

தகுதி திறமை அறிய வரம்பு என்ன?

மற்றும் இந்த தகுதி, திறமை பேசும் யோக்கியர்கள் கல்வியில் தகுதி திறமை பேசுவது; கேட்பது உத்தி யோகத்தில் திறமையாய் இருக்கத் தகுந்த தகுதியான கல்வி இருக்க வேண்டியது அவசியம் என்று கேட்கிறார்களா? அல்லது ஒரு மனிதன் இன்ன அளவு கல்வி கற்றால்தான் கல்வி கற்றவன் என்று சொல்லவேண்டுமென்ற பொது நன்மையைக் குறிவைத்துக் கேட்கிறார்களா என்று கேட்கிறேன்.

உத்யோகம் ஒதுக்குகையில் 

தகுதி கருதப்படுகிறதா?

உத்யோகத் திறமைக்காகக் கேட்பதாக சொல்லப் படுமானால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்கள் என்பதற்காகவென்று எல்லாவிதமான உத்யோகங்களுக்கும் நீதி, நிர்வாக, தொழில்துறை ஆகிய உத்யோகங்களுக்கும் கல்வியின் அந்தஸ்தைக் குறைத்தும், பாஸ் செய்தால் போதும் மார்க்கைப் பற்றிக் கவலை இல்லையென்றும், வயதைப் பற்றிக் கவலை இல்லை என்றும் திட்டமிட்டு சற்றேறக்குறைய மொத்த எண்ணிக்கையில் 100க்கு 40 வீதம் ஒதுக்கி வைத்துக் கொடுத்துக் கொண்டும் வரப்படுகிறதே (இது கூட பள்ளிக்கூடச் சேர்க்கையில்தானேயொழிய, உத்தியோகத்தில் இம்முறை கடைப்பிடிக்கப்படாத நிலையே இருக்கிறதென்பதையும் நாம் மறந்து விட முடியாது) இதற்குத் தகுதி, திறமை எங்கே போயிற்று?

தமிழர் நிர்வாகத்தில் தவறு ஏற்பட்டதுண்டா?

இவர்களது நிர்வாகங்களில் எதில் ஓட்டை, திறமைக் குறைவு, தகுதிக் குறைவு, நாணயக் குறைவு, ஒழுக்கக்குறைவு ஏற்பட்டு விட்டது? என்று கேட்கிறேன்.

ஆகவே, பார்ப்பனர் கூப்பாடு போடும் தகுதி - திறமை என்பது எவ்வளவு மோசடி, எவ்வளவு அயோக்கியத்தனம், எவ்வளவு இழி தன்மைகொண்ட மானம் கெட்டதனம் என்று கேட்கிறேன். கல்வியில் தகுதி திறமை என்பதில், முதலில் கல்வி நம் மக்களுக்கு எதற்கெதற்காக வேண்டும் என்பதில் சிந்திக்க வேண்டும்.

பிறகு கல்வி எதற்கு வேண்டுமோ அதற்கு இப்போதிருக்கும் கல்வியின் தகுதி திறமை போதுமா? போதாதா? என்று பார்க்க வேண்டும்.

இந்த இரண்டிலும் விஷயம் தெரிந்து கொள்ளாத, ஒரு முடிவுக்கு வராத மக்கள் கல்வியில் தகுதி - திறமை பேசுவது முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனம் என்று தான் சொல்லுவேன்.

கல்வியின் உபயோகம் யாது?

இன்றையக் கல்வி உபயோகமற்றது; அறிவுக்கு ஏற்றதல்ல, உத்யோகத்திற்குத் தான் பயன்படக்கூடியது என்பதாக சுமார் 50-60 வருஷங்களாக பல கல்வி மாநாடுகளில், மகாகனம் சீனிவாச சாஸ்திரி உட்பட பல பார்ப்பன பிரின்ஸ்பால்களும், ஹெட்மாஸ்டர்களும், பொது வாழ்வில் ஈடுபட்ட தலைவர்கள், பெரிய மனிதர்கள் என்பவர்களும் சொல்லி வந்ததும், சொல்லிவருவதும் எனக்குத் தெரியும்.

தனிப்பட்ட நோக்கங்கள்

1921இல் காந்தியார், ஆங்கிலக் கல்வி, அடிமைகளை உற்பத்தி செய்யும் கல்வி; வெள்ளையன் தன் ஆட்சிக்கு கூலிகளைச் சேர்ப்பதற்காகக் கொடுக்கும் கல்வி; இதை பகிஷ்கரியுங்கள் என்று சொன்னதன் பின், காங்கிரஸ் கல்வியைப் பகிஷ்கரித்து தேசியப்பள்ளிக் கூடங்கள் ஏற்படச் செய்தது.

மற்றும் காந்தியார் வார்தா கல்வித் திட்டம் வகுத்தார்.

மற்றும் காங்கிரஸ் ஆட்சி ஆதாரக் கல்வித் திட்டம் வகுத்தது.

மற்றும் இராஜாஜி ஆட்சியில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களுக்கு கல்வி எதற்கு? அவனவன் படிக்க வேண்டிய கல்வி, அவனவன் ஜாதித் தொழில்தான் என்று திட்டம் வகுத்தார்.

நம்மை தற்குறிகளாகவே வைக்கின்ற சூழ்ச்சி

இந்த தகுதி - திறமை பேசும் யோக்கியர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பன்னூற்றாண்டு ஆதிக்கத்தில், தாங்கள் மாத்திரம் 100க்கு 100ம் படித்தவர்களாகி, தமிழர்களாகிய நம்மை 100க்கு 10 பேர்களுக்கு மேல் எழுத, படிக்க, கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களாகக் கூட செய்யாமல், தற்குறிகளாகவே, வைத்திருந்ததுடன் நம்மை கீழ் மக்களாக பாமர மக்களாக வைத்திருப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டிருந்த யோக்கியர்கள், நாம் 100க்கு 40 பேர் படித்தவர்களானவுடன் இன்று கல்வியில் தகுதி - திறமை குறைந்து போய் விட்டது என்றால் இது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

முதலாவது அறிவுள்ள மனிதனானால், யோக்கியமான மனிதனானால் ஒரு காரியம் வேண்டுமானால் அது எதற்காக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

கல்வியின் தேவையும் தகுதி வரம்பும்

இப்போது கல்வி எதற்காகத் தேவை. மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டானாக இல்லாமல் புத்தகம் படிப்பதற்கும், உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கல்வி வேண்டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கு உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி பெறவே கல்வி வேண்டும். மற்றபடி தொழில் துறையில் தொழில் செய்ய, வைத்தியம், எஞ்சினியரிங், விஞ்ஞானம், கணிதம் முதலிய துறைகளுக்கு அவை சம்பந்தமான கல்வி வேண்டும்.

இவற்றிற்கு அரசாங்கம் உச்ச அளவு திட்டம் வகுத்து, படிப்பித்து, பரீட்சை செய்து முத்திரை குத்தி விடுகிறது. மற்றபடி கல்வி எதற்கு வேண்டும் - வேண்டியதற்கு தகுதி, திறமைக்கு அளவுகோல் என்ன வகுத்திருக்கிறது? - வைத்திருக்கிறது? என்று கேட்கிறேன்.

ஒரு கலெக்டர் வேலைக்கு என்ன கல்வி வேண்டும்? அதற்கு என்ன தகுதி திறமை வேண்டும்? கலெக்டர் வேலைகள், வெள்ளைக்காரன் தன் இனத்தானுக்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே அய்.சி.எஸ். பரீட்சை பாஸ் செய்ய வேண்டுமென்று சொன்னான். இப்பவும் அவன் சொன்னதை நாம் எல்லோரும் கண்டித்தோம். என்ன சொல்லிக் கண்டித்தோம் அவன் (வெள்ளையன்) அயோக்கியன், ஜாதி உணர்ச்சி கொண்டவன், தங்கள் ஜாதியாரிடமே ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிறான். சுயநலக்காரன் அவனை ஒழித்தாக வேண்டும் என்று சொன்னோம்.

அப்படிப்பட்ட பதவிகளில் சில எலும்புத் துண்டு களை நமக்கும் வீசி எறிந்தவுடன் அது பெரிதும் பார்ப் பனர்களுக்கே கிடைப்பதாயிருந்து தமிழர்களுக்கு கிடைக்க முடியாததாய் ஆனவுடன் பார்ப்பனர் (காங்கிரஸ்) அதற்கும் பணிந்து விட்டார்கள்.

பார்ப்பனரே பதவிக்கு வர சூழ்ச்சி

அவனை (அப்படிப்பட்ட வெள்ளையனை) பின்பற்றிய இந்த பார்ப்பனர் அய்.ஏ.எஸ். என்பதாக, அய்.பி.எஸ். என்பதாக கல்வியில் சில திட்டங்களை வகுத்துக் கொண்டு அதை பெரிதும் பார்ப்பனர்களுக்கே வரும்படி செய்து கொண்டு நம்மை உனக்குத் தகுதி இல்லை! திறமையில்லை என்று சொல்லி நம்மை ஒதுக்கத் தகுதி திறமை என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்போது அய்.ஏ.எஸ். பட்டம் பெற்ற பார்ப்பானுக்கும், அந்தப் பட்டமில்லாத பி.ஏ. படித்து ரெவின்யூ இலாகாவில் கிளர்க் ஆகி, ரெவின்யூ இன்ஸ்பெக்டராகி, ஜப்டி தாசில்தாராகி, தாசில்தாராகி, ஜுனியர் சிரஸ்தாராகி, டிப்டி கலெக்டராகி, சர்வே லேண்ட் ரிக்கார்டு, பாஸ் செய்து கலெக்டருக்கு பி.ஏ. (உதவியாளர் (PA)) ஆக இருக்கின்ற 50 ஆண்டு உலக அனுபவமும் வெறும் 22 ஆண்டு ரெவின்யூ இலாகா அனுபோகஸ்வர்களையும் விட இன்று அய்.ஏ.எஸ். படித்து வரும் பச்சகானா இளம் பசங்கள் (பச்சகானா என்றால் சிறு பசங்கள்) அதுவும் 28, 29, 30 வயதுப் பசங்கள் எந்த விதத்தில் கலெக்டர் பதவிகளுக்கு உரிய தகுதியும், திறமையும் உடையவர்கள். கல்வி அனுபவம் உடைய அவர்கள் ஆகிவிடுவார்கள்? போலீசிலும் அப்படியே கேட்கிறேன். ஹைகோர்ட், சுப்ரீம் அய்கோர்ட் ஜட்ஜுகளைப் பற்றியும் அப்படியே கேட்கிறேன்.

25 ஆண்டு சிவில் அனுபவம் பெற்ற ஜில்லா ஜட்ஜ் ஜில்லா ஜட்ஜாகவே ரிட்டையராகி விடுகிறான், பித்தலாட்டத்திலும், புரட்டிலும் பெயர் பெற்ற, மனசாட்சியே இல்லாதவன் தொழில்வாதத்தில் நீதி, நேர்மை, யோக்கியம் அற்ற ஒரு வக்கீல், திடீரென்று ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட் ஜட்ஜாகி விடுகிறான் இதில் நீதிக்கு தகுதி, திறமை அனுபவம் என்ன இருக்கிறது?

வக்கீல் எந்த புத்தியைக் கொண்டு வாதாடுகிறானோ அந்த புத்தியைக் கொண்டு தானே ஜட்ஜ்மெண்ட் எழுதுவான்?  முன்சீஃப் ஆகி இருந்து ஜட்ஜாகிறவன் நீதியில் ஒரு பதிவிரதை போல வாழ்க்கை நடத்தி பதவிக்கு வருகிறான்! வக்கீலாயிருந்து ஜட்ஜ் பதவிக்கு வருகிறவன் குச்சிக்காரிபோல் வாழ்க்கை நடத்தி பதவிக்கு வருகிறான்!

நம்மைச் சூத்திரர்களாகவே நீடிக்க வைக்கும் ஆயுதமே தகுதி - திறமை

ஆகவே இந்த இன்றைய தகுதி - திறமை பார்ப்பான் பதவிக்கு வரவேண்டும்; மற்றவர்கள் அடிமைகளாகவே, சூத்திரர்களாகவே இருக்க வேண்டுமென்பதற்காகவே அயோக்கியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இராமபாணம் போன்றதல்லாமல் வேறு எதற்காக இந்த தகுதி - திறமை கண்டுபிடிக்கப்பட்டது? என்று கேட்கிறேன்.

இப்போது திரு. கக்கன் மந்திரியாய் இருக்கிறார், திரு.மன்றாடியார் மந்திரியாய் இருக்கிறார், திரு.காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கிறார், இவர்கள் நிர்வாகத்தில் எதில், என்ன, ஓட்டை? என்று சொல்லுங்களேன் பார்ப்போம்!

100க்கு நூறு பேரும் எழுதப் படிக்கச் செய்வதே நம் இலக்கு

நமக்கு - எனக்கு, நம் மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதல்லாமல், கல்வியில் தகுதி, திறமை, வெங்காயம் என்பது எனது இலட்சியம் அல்ல! தகுதி திறமைக்காகப் பொதுக் கல்வி அல்ல. எனக்கு வேண்டியது நம் மக்கள் 100க்கு 100 வீதம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நம் மக்கள் பட்டப் படிப்பில் பார்ப்பனர், அவர்கள் எண்ணிக்கையில் 100க்கு எத்தனை வீதம் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அத்தனை வீதம் பரீட்சை பாஸ் முத்திரை பெற்றிருக்க வேண்டும். தகுதி - திறமைக் குறைவு என்று பேசுவதாலும், கண்டுபிடிப்பதாலும் பொதுவான உத்யோகங்களுக்கு அதனால் எந்த விதமான குறைவோ, குற்றமோ ஏற்பட்டு விடாது. ஏற்பட்டு விடுவதுமில்லை, ஒழுக்கத்துக்கும் நாணயத்திற்கும் தகுதி - திறமை சம்பந்தமில்லை.

உதாரணமாக ஒரு அய்.ஏ.எஸ். படிக்காத திரு.காளிதாஸ் நாயுடுவைவிட ஒரு அய்.ஏ.எஸ். படித்த திரு.வேதநாராயணன் கலெக்டர் வேலையில் எந்த விதத்தில் அதிகம் தகுதி, திறமை, ஒழுக்கம், நாணயம், அனுபவம் உடையவராவார்?

இன்ன இன்ன உத்தியோகத்திற்கு இன்னின்ன பட்டம் பாஸ் செய்த தகுதி வேண்டும் என்று ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, மேலும் தகுதி - திறமை என எந்த ஏற்பாட்டின்படி குறை சொல்லப்படுகிறது?

தகுதிக்குக் குறிப்பிட்ட அளவு பாஸ் சர்ட்டிஃபிகேட்டும் திறமைக்கு, கை, கால், கண், காது, மூளை சரியாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதைத் தவிர, வேறு என்ன வேண்டும்? இதைத் தவிர வேறு என்ன இல்லாவிட்டால் குறிப்பிட்ட எந்த உத்தியோகம் பார்க்க முடியாது? என்றுதான் பார்க்க வேண்டும்.

இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் நான் சொல்லவில்லை. படியேறி விட்டோம், உச்சத்திலிருக்கிறோம் என்று கருதிக்கொண்டு தகுதி - திறமை பேசும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் தான் சொல்லுகிறேன்.

- தந்தை பெரியார் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், 1966, பக்கம் 91 - 95


No comments:

Post a Comment