சென்னை,ஏப்.14- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் 10, 11, 13 ஆகிய மூன்று நாள்களில் சிறப்புக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.
வைக்கம் போராட்டத்தில் தந்தைபெரியார் பங்களிப்புகுறித்து திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தும், திரிபுவாதங்களை பரப்பியும் வருகின்ற பார்ப்பனர்கள், பார்ப்பன அடிவருடிகளுக்கு சாட்டையடியாக இந்த மூன்று சிறப்புக் கூட்டங்கள் வாயிலாக அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து பதிலடி கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
தமிழர் தலைவர் நிறைவுப் பேருரை
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மூன்றாம் நாள் (13.4.2023) சிறப்புக்கூட்ட பேருரை ஆற்றினார்.
அவர் உரையில்,
பகுத்தறிவுப்பார்வை என்பது விருப்பு வெறுப்பற்றது. வரலாற்றை நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
தந்தைபெரியார், நாவலர் கூறியதைப்போன்று பக்தர்கள் மறந்துவிடுவார்கள் என்று பக்திப்போதைக்கே நினைவூட்டிக்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டு, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்களை ஆதாரப் பூர்வமாக எடுத்துக்காட்டினார். பார்ப்பனர்கள், பார்ப்பன அடிவருடிகளின் திரிபுவாதங்கள் உண்மைக்கு மாறான தகவல்களுக்கு மறுப்புக் கூறியபின்னரும் திரும்பத் திரும்ப திரிபுவாதங்களை, விஷமப்பிரச்சாரங்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி, அதனைத் தோலுரித்து உண்மை வெளிச்சக்கீற்றுகளை இனிவரும் அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள் ளும் வரலாற்றுக்கடமையை ஆற்றுவதைக் குறிப்பிட்டு எடுத்துக்காட்டினார்.
கடவுள், மத, புராணங்களிலிருந்து பல்வேறு ஆய்வு களை செய்து ‘புரட்டு இமாலயப்புரட்டு' என்று தந்தை பெரியார் வெளியிட்டார்.
இமாலயப் புரட்டையும் தாண்டிய புரட்டு ஒன்று உள்ளது என்றால் அதுதான் பார்ப்பனப்புரட்டு என்றார் ஆசிரியர்.
வைக்கம்போராட்ட தொடர் பேருரை தொடங்கிய பின்னர் ‘தினமலர்' பார்ப்பன ஏட்டில் விஷமத்தனத்தைச் சுட்டிக்காட்டி, பல காலக்கட்டங்களில் பார்ப்பனர்களின் பொய்மையை தோலுரித்துக்காட்டி, பேருரை ஆற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் மேலும் கூறும்போது, இப்படி பேசுவது வீணுக்கல்ல, அறிவுப்புலமையை காட்டுவதற்கு அல்ல, ஒரே இலக்கு ஜாதியற்ற சமுதாயம் மலர வேண்டும். அதற்கு மக்களை ஆயப்படுத்த வேண்டும். வேதங்களில்தானே ஜாதி உள்ளது என்றால், ஆணிவேரை அகற்றவேண்டும் என்றார்.
கழகத் துணைத் தலைவர் தொடக்க உரை
நேற்றைய கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமதுரையில், வைக்கம் போராட்டம் வெறும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டமல்ல, ஜாதி ஒழிப்புப் போராட்ட மாகும். ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பது என்பது நிழலோடு சண்டைபோடுவதாகும்.தந்தைபெரியார் ஜாதி ஒழிப்பையே தம்முடைய இலட்சியமாகக் கொண்டிருந்தார். 1917இல் ஈரோட்டில் நகரமன்றத் தலைவராக இருந்தபோது கொங்கு பறத் தெரு என்று ஒரு தெருவுக்கு இருந்த பெயரை திருவள்ளுவர் தெரு என்று மாற்றினார்.
ஜாதி, மதம், தெய்வம், தனம் ஆகிய இந்த 4 தத் துவங்கள் அழிக்கப்பட வேண்டும். இவை அழிக்கப் பட்டாக வேண்டும் என்பதுதான் தம் கொள்கை என்று தந்தைபெரியார் 1936இல் கூறியுள்ளார்.
பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்றார் தந்தைபெரியார்.
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1921இல் பொதுக் கிணறுகளை ஒடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதைத் தடுத்தால், பொது சாலைகளில் ஒடுக்கப்பட்டவர்கள் செல்வதைத் தடுத்தால் அவர்களுக்கு ரூ.50 அபராதம் என்று உத்தரவிட்டார் ரெட்டைமலை சீனுவாசன். அதே போல், பொதுப்போக்குவரத்தில் பேருந்தில் பயணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றால், பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் ஊ.புஅ.சவுந்தரபாண்டியனார்.
கடவுள் எதிர்ப்பு, மனுதர்மம் எரிப்பு, அரசமைப்புச் சட்டத்தையும் எரிப்பு போராட்டம் தந்தை பெரியார் நடதினார் என்றால் ஜாதி ஒழிப்புக்காகவே.
சென்னையில் உணவு விடுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. ரயில் நிலையங்களிலும் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாருக்கு சாப்பிடுவதற்கு தனி இடம் என்றிருந்தது.
பறையன் பட்டம் இருக்கின்ற வரை சூத்திரன் பட்டம் போகாது என்றார் தந்தைபெரியார்.
வைக்கம் போராட்டத்தின் 60ஆம் ஆண்டு விழா வின்போது 1985இல் துக்ளக்கில் நெல்லை ஜெப மணியைக்கொண்டு கட்டுரைகள் வெளியானது. அவ்வப்போது வீடணர்கள் இருப்பார்கள். பார்ப்பனர்கள் கைகூலிகளைத் தேடிப்பிடித்து எழுதச் செய்வார்கள். அப்படி துக்ளக்கில் ஜெபமணி கட்டுரைகள் தொடர்ந்து எழுதியநிலையில், அப்போது மலேசியாவில் இருந்த ஆசிரியர் மறுப்புக்கட்டுரையை அனுப்பினார். அதனை வெளியிடவில்லை என்றால் திருப்பி தலைமைக் கழகத்துக்கே அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். ஆனால், ஆசிரியரின் மறுப்புக் கட்டுரையை வெளி யிடவும் இல்லை, திருப்பி அனுப்பவும் இல்லை. இவர்களின் அறிவு நாணயம் எவ்வளவு கேவலமானது என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
வைக்கத்தில் தேவஸ்தான கமிஷனர், வைதீகர்கள் சிலர் காந்தியாரை சந்தித்தனர். காந்தியுடனான சம்பாஷ னைக்குப் பிறகு, வைக்கம் தெருவில் ஒடுக்கப்பட் டோரைப் போன்று, முசுலீம்கள், கிருத்துவர்களையும் தடுக்கலாம் என்றனர். ஆரியசமாஜ ஏடான ‘லீடரில்' (8.6.1924) வைக்கம் போராட்டம் குறித்து குறிப்பிடும்போது, காந்தியார் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் முன்பே வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
வைக்கம் போராட்ட சத்தியாகிரகிகள் 19 பேர் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். இந்தியாவிலேயே தந்தை பெரியார் வந்தால் மட்டும்தான் போராட்டம் வெற்றி பெறும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாபிலிருந்து காய்கறிகள், பணம் உதவி எல்லாம் வந்தது. அப்போது காந்தியார் வெளிமாநிலத்தவர் தலையிடக்கூடாது என்றார்.
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவராக தந்தைபெரியார் இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கிணறு அமைப்பதற்காக அரிஜன நிதி என்று காந்தியார் அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தந்தை பெரியார் திருப்பி அனுப்பிவிட்டார். காரைக்குடியில் தனி கிணறு திறப்புக்கு பெரிய விழா ஏற்பாடு செய்து தந்தை பெரியாரை அழைத்திருந்தார்கள் அங்கே தந்தைபெரியார் பேசும்போது தனிக்கிணறு ஜாதியை வளர்க்கும் என்று கூறி, அதற்காக வெட்கப்பட வேண்டும் என்றார்.
காங்கிரசை விட்டு வெளியேறி தந்தை பெரியார் 5 நாளில் அன்னை நாகம்மையாருடன் வைக்கத்துக்கு சென்றார்.
தஞ்சாவூரில் ‘‘ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாடு'' நடத்தினார் தந்தை பெரியார். ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா, என்று கேள்வி எழுப்பினார்.
தந்தைபெரியார் நூல்கள் ஏராளமாக இப்போது இந்தி மொழியில் வெளியிடப்பட்டு வருகிறது.. அங்கிருந்து அனுப்புகிறார்கள். அதில் தந்தை பெரியார் படம் உள்ளது.
லக்னோவில் அகில இந்திய டாக்டர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்தும் பங்கேற்றார்கள். அம்மாநாட்டின் பிஆர்ஓ, 25 ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டி ருக்கிறேன், தமிழ்நாட்டிலிருந்து வரும் டாக்டர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டம் இல்லையே ஏன் என்று கேட்டார். அதற்கு தமிழ்நாட்டு டாக்டர் கூறினார், எங்கள் நாட்டில் பெரியார் என்ற தலைவர் இருக்கிறார் அதனால்தான் என்றதும், ஓ. ஈ.வெ.ராமசாமி நாயக்கரா, என்றார்.
ஆசிரியர் சொல்கிறார், ‘‘எல்லா மன்றங்களையும் விட மக்கள் மன்றம்தான் மதிப்புடையது'' என்கிறார்.
மறைந்த தோழர் தா.பாண்டியன் கூறினார், ‘‘தந்தை பெரியார் சட்டமன்ற உறுப்பினர் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை, முதல் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்'' என்றார்.
வாழ்மானபாளையத்தில் 5 மணி நேரம் பெரியார் பேசியுள்ளார். பெரியார் பொதுக்கூட்டத்தில் 4 மணி நேரம் பேசியுள்ளார்.
அதேபோல் ஆசிரியர் 10 வயதிலிருந்து மாலை நேரத்தில் மக்களிடையே கூட்டங்களில் பேசி வருகிறார். இந்த மூன்று கூட்டங்கள் இடையே ஆளுநரைக் கண் டித்து கண்டனப் பொதுக்கூட்டம், அடுத்து ஜெகதாப்பட் டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
அனைத்தும் தமிழர்கள் நலனுக்காகவே.
பெரியார் கருத்துகளை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டோர்
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பெ.ஜெகதீசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் கண்மதியன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், புதுமை இலக்கிய தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம், வெ.ஞானசேகரன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், தமிழி னியன், புரசை சு.அன்புசெல்வன், கி.இராமலிங்கம், கு.சோமசுந்தரம், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ் செல்வன், அம்பத்தூர் ஏழுமலை, நடராஜன் பெரியார் மாணாக்கன், மயிலை டி.ஆர்.சேதுராமன், மண்டல மகளிரணி செயலாளர் இறைவி, பூவை செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
கூட்ட முடிவில் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment