சென்னை, மார்ச் 20- இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் இன்று (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ 2019இல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு பல்வேறு செயல்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இணையதளம் வழியாக... அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி வரும் மே 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (மார்ச் 20) தொடங்கி, ஏப்.3ஆம் தேதி வரை நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் (www.isro.gov.in) வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களின் தற்காலிகப் பட்டியல் ஏப்.10ஆம் தேதி வெளியிடப்படும். அவர்கள், தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதிப் பட்டியல் ஏப். 20ஆம் தேதி வெளியாகும். தேர்வாகும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம், சிறீஅரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மய்யங்களில் பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment