மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு -"களை" கட்டுகிறது ஜெகதாப்பட்டினம்! - தொடங்கியது பணிகள்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு -"களை" கட்டுகிறது ஜெகதாப்பட்டினம்! - தொடங்கியது பணிகள்!

10

தொகுப்பு: வி.சி.வில்வம்

கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள  ஜெகதாப்பட்டினத்தில் 14.09.2022 அன்று தோழர்கள் சுவாதி - குமார் இணையேற்பு நிகழ்வை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார்கள்.

அன்றே சூளுரைத்த ஆசிரியர்!

மீனவர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்ட அந்நிகழ்வில், "பெரியார் என்ன செய்தார்? இந்த இயக்கம் என்ன செய்தது? ஜெகதாப்பட்டினம் போன்ற பகுதிகளில் திராவிடர் கழகம் ஏன் வளர வேண்டும்?

மீனவர் சமுதாயத்தில் எத்தனை அய்.ஏ.எஸ், எத்தனை அய்.பி.எஸ். இருக்கிறார்கள்? உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எத்தனை பேர் இருக் கிறார்கள்?'' எனப் பல்வேறு செய்திகளைச் சுட்டிக்காட்டி பேசியது, மக்களுக்கு   உணர்வுப்பூர்வமாக இருந்தது!

பொதுவாகப் பாதுகாப்பு கருதி மீன் உணவை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். ஆனால், அந்த மீனைத் தருகிற மீனவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே எனக் கூறி, இந்தப் பிரச்சினைகளுக்கு  விரைவில் ஒரு  முடிவு எட்ட வேண்டும் என்று சொன்னதோடு, திராவிடர் கழகம் சார்பில் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு இதே  ஜெகதாபட்டினத்தில்  நடைபெறும்  என்று  மீனவர்களின் பலத்த கரவொலிக்கிடையே சூளுரைத்தார்கள்!

ஏப்ரல் 14 - கடற்கரையில் 

ஓர் கருங்கடல்!

'சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்!' என்கிற அடிப்படையில் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு ஏப்ரல் 14 அன்று நடைபெறும் எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்துவிட்டார்கள். இந்த மகிழ்ச்சியான  செய்தியை ஏந்திக் கொண்டு 19.03.2023 ஞாயிறன்று கரும்படை ஒன்று ஜெகதாப் பட்டினம் நோக்கி  விரைந்தது! காலை 10 மணி தொடங்கி, பிற்பகல் 4 மணிவரை ஒன்றல்ல, இரண்டல்ல... 5 மகிழுந்துகளில் 20 தோழர்கள் கடைவீதிகளில் உலாவந்த வண்ணம் இருந்தனர். மாநாட்டு விளம்பரம் பகுதியளவு முடிந்தது என்கிற நிறைவை அன்றே தோழர்கள் பெற்றனர்! 

அலைகடலென கிடைத்த வரவேற்பு!  

ஆசிரியர் அவர்களின் மாநாட்டு அறிவிப்பை  கீழ்க்கண்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர் களையும் நேரில் சந்தித்து பரிமாறிக் கொண்டோம்!

அவ்வகையில் மணமேல்குடி தெற்கு ஒன்றியத் திமுக  செயலாளர் சீனியர் என்ற அப்துல்லா,  ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத் தலைவர் பாலமுருகன், பொறுப்பாளர்கள் மோகன், செல்லத்துரை, எம்.டி.ஆர்.மருது, கோட்டைப் பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் முகமதுகான், கோட் டைப்பட்டினம் விசைப்படகு சங்கத் தலைவர் எம்.அசன் முகைதீன், விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பாளர் கதிர் நிலவன், கோட்டைப்பட்டினம் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் மைதீன், ஜெகதாப்பட்டினம்  தமுமுக மாவட்டச் செயலாளர் ஜெகதை செய்யது,  தமுமுக மருத்துவரணி மாவட்டச் செயலாளர் முகமது சாலிக், மணமேல்குடி தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் மன்னர் முகமது ஹனீபா, கீழமஞ்சக்குடி கிராமத் தலைவர் பல்தசார், உசிலங்காடு அருளாந்து உள்ளிட்ட பலரையும் சந்தித்து மாநாடு குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மிகச் சிறப்பாக செய்துவிடலாம் என அனைவரும் ஒருமித்த குரலில் உற்சாகம் தந்தனர்!

எத்தனை மாவட்டம்! எவ்வளவு தோழர்கள்!!

பகல் முழுக்க அலைந்து திரிந்து, பொழுது சாய்ந்ததும் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள கீழமஞ்சக்குடி கிராமம் சென்றோம். அங்கே ஒரு பெரிய வேப்பமரம். அம்மரத்தில் விளக்கு கட்டி, அங்கே தான் மாநாட்டுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. காலை முதல் 5 கார், 20 தோழர்கள் என சென்றோம்! மாலை கூட்டத்திற்கோ மேலும் 20 சேர்த்து 40 கருஞ்சட்டைகள்  அக்கிராமத்தில் சூழ்ந்து விட்டனர். ஜெகதாப்பட்டினம் கிளைக் கழகம் எந்த மரத்தின் கீழ் 10.12.2019 இல்  தொடங்கப்பட்டதோ, அதே இடத்தில் மாநாட்டு முதல்  கூட்டம்!  இக்கூட்டத்திற்குக் கழக மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், விருத் தாசலம் ஆகிய பகுதியில் இருந்து  தோழர்கள் வந் திருந்தனர்!

இதில் அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் க.முத்து, பொதுக் குழு உறுப்பினர் த.சவுந்திரராஜன், மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார் வரவேற்க, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா கடவுள் மறுப்புக் கூறினார்.

தொடக்கமாக மாநில அமைப்பாளர் உரத்தநாடு  இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அ.சரவணன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி,  இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் மு.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கோ.வ.அண்ணாரவி, புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க.துணைத் தலைவர் பொன்னமராவதி அ.சரவணன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் குரு விஜயகாந்த், கீழமஞ்சக்குடி கிராம தலைவர் பல்தசார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, பகுத்தறிவாளர் கழகம்  கறம்பக்குடி ந.அம்பிகாபதி, தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் த.பிரகாஷ், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி இளைஞரணி தோழர் அரவிந்த்,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் முனைவர் ந.எழிலரசன், கீழமஞ்சக்குடி கழக இளைஞரணி அமைப்பாளர் செல்வமணி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்டச்  செயலாளர் அ.அருணகிரி, திராவிடர் கழகத்  தொழில் நுட்ப அணி செயலாளர் வி.சி.வில்வம், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,  ஆகியோர் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு வெற்றி பெற சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்தனர். நிகழ்வில் மகளிரணி தோழர் எஸ்.நாகவள்ளி, திருச்சி கா.முபாரக், சோ.முருகேசன், அரவிந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

முன்னதாக ஜெகதாபட்டினம் பகுதியில் திராவிடர் கழக அமைப்பை தொடங்க காரணமான முனைவர் ந.எழிலரசன், இரா.வெற்றிக்குமார் இருவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.      

நிறைவாகப் பேசிய பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறும் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாட்டுப்  பணிகள் குறித்து விவரித்துக் கூறினார். கடை வீதிகளில் துண்டறிக்கை வழங்குதல், அனைத்து மக்களையும் சந்தித்தல், அவர் களை மாநாட்டில் பங்கு பெறச் செய்தல், நன்கொடை திரட்டுதல் போன்றவை  குறித்துப் பேசினார். 

இறுதியில் மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான்குமார், "எங்கள் கிராமத்திற்கு இத்தனை தோழர்கள் வந்ததே  மாநாட்டின் வெற்றியை உறுதி செய்துவிட்டது", என்று கூறி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தோழர்களுக்கு பிற்பகல் உணவு குமார் இல்லத்திலும், இரவு உணவு யோவான்குமார் இல்லத்திலும் வழங்கப்பட்டது. 

கூட்டத் தீர்மானங்கள்:

1) சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் மறைவிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

2) ஜெகதாபட்டினத்தில் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது! மாநாட்டில் பங்கேற்க ஏப்ரல் 14 ஜெக தாப்பட்டினம் வருகை தரும் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டத் திராவிடர் கழகம் சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் மாபெரும் வரவேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது!

3) தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாட்டினை 14.04.2023, வெள்ளி மாலை 6 மணியளவில் ஜெக தாபட்டினத்தில் மிக எழுச்சியோடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது! மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து விளம்பரம் உட்பட அனைத்து விளம்பரங்களையும் சுற்று வட்டார பகுதிகளில் சிறப்பாக செய்வதுடன், மாநாட்டில் மீனவப் பெருமக்களைப் பெரும் திரளாகப் பங்கேற்க செய்வது எனவும் முடிவு செய்யப்படுகிறது!

4) அறந்தாங்கி நகர கழக அமைப்பாளராக ஆ.வேலுச் சாமி அவர்களை இக்கமிட்டி பரிந்துரை செய்கிறது.

5) கந்தர்வகோட்டை ஒன்றியத் திராவிடர் கழக அமைப்பை, அறந்தாங்கி மாவட்டத்திலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைக்குமாறு தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


பொறுப்பாளர்களின் அறிவிப்புகள்!

காரைக்குடி மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை, "இம்மாநாடு தமிழ்நாடு முழுக்கப் பேசு பொருளாக மாறும்" என்று கூறியதோடு, மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் துண்டறிக்கைகளை  காரைக்குடி மாவட்டம் சார்பாக செய்து தருகிறோம் என்று அறிவித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநாடு முடியும் வரை தொடர்ந்து வருகை புரிவதோடு, இளைஞரணி சார்பாக கிழக்கு கடற்கரை சாலை முழுவதிலும்  சுவரெழுத்து விளம்பரங்களை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம் என அறிவித்தார். தஞ்சை மாவட்டம் சார்பாக முதல் தவணை நன்கொடையாக ரூபாய் ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி வழங்கினார்.  

மாநாட்டு விளம்பரம் செய்து 

தமிழ்நாடு முழுவதும் சுவரெழுத்துகள்!

மீனவர் நலன் பாதுகாப்பு மாநாடு அறிவிக்கப்பட்ட மறுநாளே சென்னையில் மாநில  இளைஞரணி சார்பில் சுவரெழுத்து எழுதப்பட்டது. அதேபோன்று எப்பொழுதும் சிறப்பாகச் செயல்படும் தென்காசியிலும் எழுதப்பட்டது. மாநாடு நடைபெற இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையில் சுண்ணாம்பு அடித்த நிலையில் சுவர் தயாராய் இருக்கிறது. தவிர தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி,  இராமநாதபுரம் மாவட்டங்களிலும் சுவரெழுத்து விளம்பரம் செய்ய இருப்பதாக அம்மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment