இது அந்த ராமர் கட்டிய பாலம் அல்ல, ஆங்கிலேய சிவில் என்ஜினியர்கள் திட்டம் போட்டு கட்டிய பாலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

இது அந்த ராமர் கட்டிய பாலம் அல்ல, ஆங்கிலேய சிவில் என்ஜினியர்கள் திட்டம் போட்டு கட்டிய பாலம்!

110-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த பாம்பன் ரயில் பாலம்.... 

இது குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ...!!

110ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது பாம்பன் ரயில் பாலம். நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாம்பன் பாலத்தை நூற்றாண்டு நினைவுச் சின்னமாக அறிவிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பாம்பன் பாலம் குறித்து சில முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் (அய்க்கிய அமெரிக்காவின் மியாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன.  அத்துடன் இப்பகுதி கடல் கொந்தளிப்பு  ஏற்படும் பகுதியுமாகும். 1964இல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

கடல் மீது அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலத்தின் வழியே பெரிய கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு தூக்குப் பாலமாக வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடலுக்குள் 144 தூண்கள் அமைக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில் 110ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாம்பன் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திடீரென்று ரயில் சேவையை நிறுத்தியது சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர் உள்ளூர் வாசிகள். மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்க பட்டிருப்பதால் பாலத்தில் ரயில் சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றார்கள். இது குறித்து தென்னக ரயில்வே முதன்மை அதிகாரிகள் கூறுகையில், கடல் அரிப்பால் பாலத்தின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள அரிப்பால் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து வருவதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பழைய தூக்குப் பாலத்தின் அருகே புதிய ரயில் பாதை கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறிய அவர்கள் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டுக்காக அடையாளமாக இருக்கக்கூடிய பாம்பன் தூக்குப் பாலத்தை நூற்றாண்டு நினைவுச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment