திருமணமான பெண்ணுக்கு வாரிசு வேலை பெற தகுதி இல்லை என்ற உத்தரவு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

திருமணமான பெண்ணுக்கு வாரிசு வேலை பெற தகுதி இல்லை என்ற உத்தரவு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை,மார்ச் 20- -‘திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை’  என்ற தனி நீதிபதியின் உத்த ரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார், சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல்காரராக வேலை செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அவர் இறந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு சரஸ்வதி அதே ஆண்டு ஜூன் 5ஆம் தேதி மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், மீண்டும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி மனு கொடுத்தார். இந்த மனுவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி நிராக ரித்தார். வாரிசு வேலை கேட்டு 3 ஆண்டுக்குள் விண்ணப் பிக்கவில்லை என்று காரணமும் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சரஸ்வதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில், மனுதாரர் திருமணஆம் ஆனவர் என்பதால், அவர் வாரிசு வேலை பெற தகுதியானவர் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சரஸ்வதி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதி மன்றம் நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகி யோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அகிலேஷ் ஆஜராகி, கருணை அடிப் படையில் திருமணமான பெண்கள் வாரிசு வேலை பெற தகுதியில்லை என்று கருநாடகா மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை செல்லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் சத்துணவு உதவியாளர் மற்றும் சமையல்காரர் பதவிக்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற நிலை யில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஜி.நன்மாறன் ஆஜராகி, திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், விதி களின்படி வேலை கேட்டு 3 ஆண்டுக ளுக்குள் அவர் விண்ணப்பிக்க வில்லை என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருமணமான பெண்கள் வாரிசு வேலை கோர முடியாது என்று கருநாடகா அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய் துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மனுதாரர் திருமணமானவர் என்பதால், அவர் வாரிசு வேலை கேட்க முடியாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை ஏற்க முடியாது. தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 4 மாதத்துக்குள் வேலை வழங்க வேண்டும் என்று கூறினர்.


No comments:

Post a Comment