'திராவிட மாடல்' ஆட்சி நாயகரின் உரை அனைத்திந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது!
தீயணைப்பு வீரர்கள்போல மதத் தீயை அணைப்பதில் முக்கிய கவனம் தேவை!
மதவெறி பி.ஜே.பி.யை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிடின் அனைவருக்கும் தாழ்வே!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை என்பது, இந்தியா முழு மையும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு வழிகாட்டும் தெளிவுரை என்றும், ஒன்றுபட்டால்தான் வாழ்வு உண்டு என்றும், சுயநலம் பொசுங்கி பொதுநலம் ஓங்கினால் வெற்றி நமதே என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதல மைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர் களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளில், முக்கிய அனைத் திந்திய கட்சிகளான எதிர்க்கட்சிகளாக உள்ள தோழ மைக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, சென்னை யில் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மாநாடு போன்ற பெருவிழாவில், நமது முதலமைச்சர் ஆற்றிய தெள்ளிய உரை, வெறும் உரையாக இல்லாமல், அரசியல் களம் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி அமைந்தால், அடாத பாசிசத்தின் காரணமாக, மூச்சுத் திணறலில் உள்ள இந்திய ஜனநாயகமும், சமூகநீதியும், சமதர்மமும், மதச்சார்பின்மையும், அவற்றை வலியுறுத்து கின்ற அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட முடியும் என்ற அருமையான வழிகாட்டும் (ஃபார்மூலாவை) வழிமுறைகளை வித்தாரமாக முழங்கினார்!
முதலமைச்சர் உரை - ஒரு கலங்கரை விளக்கம்!
அரசியல் கடலில் பயணம் செய்யும் எதிர்க்கட்சி களான கப்பல்களுக்குக் கலங்கரை வெளிச்சமாக அவை அமைந்துள்ளன!
நாட்டில் உள்ள முக்கிய ஜனநாயக பாதுகாப்பு அமைப்புகளை எல்லாம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தம் வயப்படுத்தி, ஒன்றிய ஆட்சியைப் பட்டாங்கமாய் பயன்படுத்தி வருகின்றன.
தங்களது தந்திர வியூகத்தாலும், தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய சுதந்திர அமைப்புகளை ஒருபால் சாயும் ஆதரவு அமைப்புகளாக மாற்றிவிட்டு, எப் படியோ இரண்டாம் முறை ‘‘ரோடு ரோலர் மெஜாரிட்டி'' யைப் பயன்படுத்தி, எதேச்சதிகாரத்தை தாராளமாக ஓடும் வாய்க்கால் ஆக்கிவிட்டனர்!
நேற்று (2.3.2023) உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு, தேர்தல் ஆணையம் எப்படி ஆட்சியின் கைப்பாவையாக மாற்றப்பட்டது என்பதை அண்மையில் நடைபெற்ற தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் பற்றி சுட்டிக்காட்டி - அந்த அநீதியைப் போக்க, இனி கடைப்பிடிக்கவேண்டிய புதிய நியமன முறைபற்றியும் தீர்ப்பில் கூறியிருப்பது இதற்குத் தக்கதோர் சான்றாகும்!
இவை போன்றவை மீண்டும் ஜனநாயகப் பாதுகாப் புக்கான அரசாங்கம் அமையும் - வழிகாட்டும் என்பதால், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பாராட்டத்தக்கதவை.
ஆளுநர்கள் ஜனநாயகத்தை வீழ்த்தும் புல்டோசர்களா?
அதுபோலவே, மாநில ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் எந்திரங்களாக மாற்றம், ஜனநாயகம் நடக்காமலிருக்கப் பயன்படுத்தப்படும் புல்டோசர்களாக்குவதைத் தடுக்கும் தீர்ப்புகளையும், உச்சநீதிமன்றம் ஆட்சியாளர்களின் தலையில் குட்டு வதுபோல் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
இவற்றிற்கெல்லாம் முடிவு - விடியலை 2024, எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைந்த ஒற்றுமையின்மூலம்தான் அடைய முடியும்.
அதை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பாக தனது உரையில் விளக்கினார்!
நம்பிக்கை ஒளிபாய்ச்சும்
கூட்டணி!
இந்த காலகட்டத்தில்,
1. யார் ஆட்சிக்கு (மத்தியில்) வரவேண்டும் என்பதைவிட, நமது கண்ணோட்டம் யார் வரக்கூடாது என்பதாகவே அமையவேண்டும்.
2. நமக்குள்ள வேற்றுமைகளை மறந்து, துறந்து, ஒரே அணியாக ஒற்றுமையுடன் நின்றாகவேண்டும்.
3. காங்கிஸ் கட்சியை விலக்கிவிட்டு, கூட்டணி அமைத்தல், மிகப்பெரிய அரசியல் பிழையாகும்!
அக்கட்சி எவ்வளவு தோல்விகளைத் தழுவி னாலும் இந்தியாவின் அத்துணை மாநிலங்களிலும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சி அதுதான்!
‘யானை படுத்தால் குதிரை மட்டம்' என்ற பழமொழியை மறந்துவிட வேண்டாம் என்பதன் சுருக்கமே அவ்வழிகாட்டு நெறி!
4. மூன்றாவது அணி என்பதால், அரசியல் எதிரிகளுக்கு - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுக்கு லாபமே தவிர, நமது நோக்கத்தை சிதைத்துவிட்டு, உடன் பிறந்தே கொல்லும் வியாதி போன்றது - தவிர்க்கப்பட வேண்டியது.
5. தேர்தலுக்குமுன் தான் கூட்டணி அமைத்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும்; தேர்தலுக்குப் பின் அல்ல!
- இவை அருமையான தெளிந்த, செறிவான வழிகாட்டும் அரசியல் வழிமுறைகளாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல.
கடந்த 10 ஆண்டுகளுக்கும்மேலாக கொள்கை, லட்சியங்களால் ஒன்றுபட்டுக் கட்டப்பட்டு, காக்கப்படும் கொள்கை லட்சியக் கூட்டணியாகும்!
இதில் கட்சிகளும், தலைமைகளும் தங்களை முன்னிலைப்படுத்தாமல், கொள்கை லட்சியங்களையே முதன்மையாக்கி, மக்களைச் சந்தித்து, நம்பிக்கை ஒளி பாய்ச்சிடும் கூட்டணி!
தீயணைப்பு வீரர்கள்போல...
அரசியல் பதவிக்காக என்று அல்லாமல், தீயணைப்பு வீரர்கள் கடமையாற்றுவதுபோல - பரவிவரும் எதேச் சதிகார மதவெறித் தீயை அணைக்க - பரவி வரும் நெருப்பு மட்டும்தான் நம் கண்களுக்கும், கருத்து களுக்கும் தெரியவேண்டும்!
இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வழிகாட்டும் நெறிகளாக அரங்கில் முன்வைத்தார்.
தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்:
‘‘ஒரு பொது நோக்கோடு பலரும் ஒன்று சேரும் அணியை உருவாக்கும்போது, எது நம்மை இணைக் கிறதோ, அதை நாளும் அகலப்படுத்தவேண்டும்; எது நம்மை பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்தி, புறந்தள்ளவேண்டும்'' என்பார்!
இதைவிட சிறந்த அறிவுரை வேண்டுமோ?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
எனவே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - இன்றேல் இந்திய ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, சமூக நீதிக்கு, மனித உரிமைகளுக்குத் தாழ்வும், வீழ்ச்சியும்தான்!
இந்த ஜனநாயகம் காக்கும் அறப்போரில், மக்களுக் கான வெற்றியாகவே கருதி, நாம் மதவெறியை மாய்த்து மனித நேயத்தைக் காக்க, தங்களை முன்னிலைப் படுத்தாமல், நாட்டு நலனே முக்கியம் என்று கருதி, அனைத்து மாநிலக் கட்சிகளின் (எதிர்க்கட்சி) தலை வர்கள் உணர்ந்து நடக்கவேண்டும்.
எதிர்கால சந்ததியினர் வாழ்த்தும் வகையில் தொலை நோக்குச் சிந்தனையுடன் நடந்துகொள்வது அவர்களின் கடமையாகும்!
வரும் தேர்தல் - 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு என்பது - தலைமுறை வாழ்வா, வீழ்வா என்பதை நிர்ணயிக்கப்போகும் தேர்தல். சுயநலம் பொசுங்கி, பொதுநலம் ஓங்கினால், வெற்றி நமதே! வெற்றி நமதே!! வெற்றி நமதே!!!
முதலமைச்சருக்கு நமது நன்றி - காப்பாற்றப்பட வேண்டிய ஜனநாயகத்தின் சார்பில்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.3.2023
No comments:
Post a Comment