ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக இளைஞரை 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி வசூலித்து இருக்கிறார்கள்.  மொட்டையடித்தும் ஊர்வலமாக கொண்டு சென்ற நிகழ்வு பிஜேபி ஆளும் கருநாடகத்தில் மீண்டும் நடந்தேறி உள்ளது

கருநாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பகுதியில் உள்ளது கொங்கள்ளி கிராமம்.  இக் கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்ணை அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காதலித்து வந்திருக்கிறார்.  இந்தக் காதலுக்கு இளைஞரின் வீட்டினரும், ஊராரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.  எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2018இல் திருமணம் செய்திருக்கிறார்கள்.  திருமணத்திற்குப் பின்னர் இருவரும் வெளியூரில் வசித்து வந்துள்ளார்கள்.  இந்த நிலையில் வெங்கடேசன் பெற்றோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டி ருக்கிறது.   அதனால் அவர்களைக்  கவனித்துக் கொள்வதற்காக மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார்   வெங்கடேசன்.

அப்போது அவர் ஜாதிக்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு "நீ தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறோம்.  திரும்பவும் நீ வந்தது எங்களை இழிவு படுத்தும் செயல்.   அதனால்  இங்கு வந்ததற்கும், உன்னுடைய பெற்றோரை சந்தித்துப் பேசுவதற்கும் 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்" என்று கூறி இருக்கிறார்கள். ஏற்கெனவே பெற்றோர் உடல் நிலையைப் பார்த்து மன வேதனையில் இருந்த வெங்கடேசன்,  அவர்களிடம் வாதம் எதுவும் செய்யாமல், ஆறு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.   அதன்படியே 6 லட்சம் ரூபாய் பணத்தையும் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் 15 பேரிடம் ஒப்படைத்திருக்கிறார்.   அதன் பின்னரும்  பஞ்சாயத்தார், வெங்கடேசனை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்டு மொட்டை அடித்து ஊர்வலமாக தனது தெருவிற்குள் சென்றுள்ளார்

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் மனைவி, இதுகுறித்து கொள்ளேகால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் . காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்தக் கிராமத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள்15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இதனால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே கருநாடக மாநிலத்தில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது பலத்த வன்கொடுமைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவிலுக்குள் குழந்தை  நுழைந்ததற்காக ரூ.50,000 அபராதம், தேர் வரும் போது மின்சார வயரை ஒதுக்கப் பயன்படும் கம்பைத் தொட்ட சிறுவனை அடித்து அவனது பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்கியது, கோவிலுக்குள் சென்ற ராணுவ வீரரை அவர் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தகாத வார்த்தைகளில் பேசி விரட்டியது, கோவில் வளாகத்தில் உட்கார்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் தலைமுடியை வெட்டி ஆடையைக் கிழித்து இழிவு படுத்தியது - என்று தொடர் கதையாகக் கொடுமைகள் நடந்துகொண்டு வருகின்றன.

ஹிந்து ராஜ்யம் பற்றியும், ராமராஜ்ஜியம் பற்றியும் வாய் கிழியப் பேசும் ஹிந்துத்துவவாதிகள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார்கள்?

"உத்தரப்பிரதேசம் நினைத்தால் ராமராஜ்ஜியத்தை உருவாக்க முடியும்" என்று நரேந்திர மோடி சொன்னதுண்டு (பி.டி.அய். 21.12.2013).

2024இல் மோடி மீண்டும் பிரதமரானால் இவை எல்லாம் நடக்கும் என்பதை இன்றே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுதே விழித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் கைகோர்த்து ஓரணியில் நின்றால், ஒரே நொடியில் ஒன்றிய அதிகாரத்திலிருந்து பிஜேபியைக் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் தூக்கி எறிந்து விடலாம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

இது சுவர் எழுத்து!


No comments:

Post a Comment