அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!

ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் 

தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!

பெண்ணாடம், ஆண்டிமடத்தில் 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!

பெண்ணாடம், மார்ச் 29 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் ஆகியவை பற்றி தமிழ் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் மாபெரும் பரப்புரைக் கூட்டத்தின் 27 ஆம் நாளில் 51 ஆம் கூட்டமாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். 

பெண்ணாடத்தில் தமிழர் தலைவர்!

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் நேற்று (28.3.2023) நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு பெரியார் படிப்பகம் புரவலர் தா.கோ.சம்பந்தம் தலைமை வகித்தார். நகர தலைவர் செ.கா.இராசேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராச மாணிக்கம், நகர செயலாளர் அ.பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற் றினார்.

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நம் விழி திறந்த வித்தகர் 

தந்தை பெரியார்!

ஆசிரியர் தமதுரையில், இந்தப் பயணம் பற்றிய ஒரு முன்னோட்டத்தை விவரித்தார். தொடர்ந்து பெண் ணாடம் பகுதியில் தன்னுடைய மாணவர் பருவத்தில் சந்தித்த சுயமரியாதை வீரர்களான சிவ பழமலை, வெங்கரும்பு நாராயணசாமி, பகுத்தறிவு ஆசிரியர் குழந்தைவேலனார், திருஞானசம்பந்தம், நல்வேலனார், சாமிநாதன், கென்னடி ஆறுமுகம், சுப்பையா, துரைபாண் டியன், மகளிர் பேச்சாளராகவே நாடு முழுவதும் அனுப் பப்பட்ட ராஜம் துரைபாண்டியன் என்று ஒரு நீண்ட பட்டியலைக் குறிப்பிட்டார். ‘‘அந்தத் தொண்டர்களின் வரிசையில் சம்பந்தம் மட்டும் தான் இருக்கிறார். சுயமரியாதை வீரர்! கொள்கையில் உறுதியானவர்! வள்ளல்! முறுக்கேறிய மீசை!'' என்று சொல்லிவிட்டு, ‘‘தந்தை பெரியார் பச்சை அட்டை ‘குடிஅரசு' ஏட்டில், அனைத்துயிரும் ஒன்றெண்ணி! அரும்பசி எவர்க்கும் ஆற்றி!'' என்று போட்டிருந்ததைக் குறிப்பிட்டு சம்பந் தத்தின் வள்ளல் தன்மைக்குப் பெருமை சேர்த்தார். அத் தோடு பெண்ணாடம் நினைவுகள் முடிந்துவிடவில்லை. ‘இந்தப் பெண்ணாடத்தில் இருக்கின்ற படிப்பகத்திற்கே 50 ஆண்டுகள் வரலாறு உண்டு’ என்று தொடர்ந்து அதுகுறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

முன்னதாக தாமதமாக வந்த பெண்ணாடம் பேரூராட் சித் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமுதலட்சுமி, தானாகவே சென்று மேடையின் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். அதை அறிந்த ஆசிரியர் அவரை முன் வரிசையில் அமரவைக்குமாறு தோழர் களுக்கு அறிவுறுத்தினார். அவரைச் சுட்டிக்காட்டி, ‘திராவிடர் கழகத்தின் மூன்றாவது குழல் துப்பாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்த அமைப்பிலிருந்து ஒரு பெண் இன்று பெண்ணாடம் பேரூராட்சியின் தலைவர் என்றால், இது தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகளின் வெற்றிச் சின்னம்’ என்று பெருமிதப் பட்டார். மக்கள் அதை அங்கீகரித்து கைதட்டினர். 

தொடர்ந்து, நம் விழி திறந்த வித்தகர் தந்தை பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால் இந்தத் துண்டு என் தோளில் ஏறி இருக்குமா? என்று தன்னையும் எடுத்துக் காட்டாக்கினார். தோள் சீலை போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டதை பற்றி நினைவுகூர்ந்தார். ‘இதற்கெல்லாம் மாற்று கண்டதுதான் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம்!’ என்று பலத்த கைதட்டல் ஒலிக்கிடையே குறிப்பிட்டார்.

ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!

தொடர்ந்து பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவு நாளை நினைவுகூர்ந்து பேசினார். ‘அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தொண்டனுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். அவர் பேசும் போது கற்கள் மேடையில் வந்து விழும். அதை எடுத்து வரச்சொல்லி கையில் வைத்துக் கொண்டு, வீசப்பட்ட இந்த கற்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? ‘‘அழகிரி, இன்னமும் உரத்துப் பேசு! கொள்கையை வீரியத்துடன் பேசு! என்கின்றன. இந்தக் கற்களை வைத்துத்தான் வீசியவர்களின் பிற் போக்குத்தனத்திற்கு சமாதி கட்டப்போகிறேன்'' என்று அவரின் பேச்சை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து கானாடு காத்தான் பகுதியில் நடைபெற்ற நாயன வித்துவான் சிவக்கொழுந்துவின் சுயமரியாதை மீட்பில் அழகிரியின் பங்கை விவரித்தார். அதோடு, ‘சென்னையில் பெரியார் திடலில் நடைபெற்ற பெரியாரின் கடைசி பிறந்த நாளில், ராஜா சர். முத்தையா (செட்டியார்) வந்திருந்தார்! அப்போது நாதஸ்வரக் கச்சேரியில் மிகப்பெரிய வித்துவான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் வாசித்து முடிந்து உட்கார்ந்திருந்தார். பெரியார் கட்டிலில் சப்பளாம் போட்டு அமர்ந்திருக்கிறார். முத்தையா (செட்டியார்) பெரியார் பக்கத்தில் அமர்ந்ததும், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் இயல்பாக எழுந்தார். நாங்கள் அவருடைய தோளில் அழுத்தி அமர வைத் தோம். இதை பெரியார் பார்த்தார். எந்த ஜாதியைக் காட்டி தோளில் துண்டு போடக்கூடாது என்று இருந்ததோ, அதை மாற்றி அவர்களுடனேயே சரிசமமாக அமர வைத்தபடிதான் தந்தை பெரியாரின் கடைசி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது’ என்ற இன்னுமொரு அரிய வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்து கொண்டு, ’அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரி நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்’ என்று சொல்லிவிட்டு, ‘அப்படி ஜாதியை ஒழிக்கும் வரையில் அந்த ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவை’ என்று சமூகநீதி பற்றிய வரலாற் றைப் பேசினார். 

அடுத்து வேலை வாய்ப்பு பற்றி பேசும் போது, மோடி கொடுத்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு மோசடியைக் குறிப்பிட்டு, ‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மோசடி அல்ல, அது வந்தால் நமது இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்! தமிழ்நாடு செழிக்கும்! நம் எதிர்கால சந்ததிகள் வாழும்!’ என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டவர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், பெண் ணாடம் பேரூராட்சி மன்றத் தலைவர் அமுதலட்சுமி, தி.மு.க. மேனாள் ஒன்றிய செயலாளர் சோம. ஞானமூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.பிச்சை, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் தி.சக்திவேல்,  சட்டத்துறை பொறுப்பாளர் வழக்குரைஞர் பழனியாண்டி, பெரியார் நூலக பொறுப்பாளர் அன்பினுருவன், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் நகர அமைப்பாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார். இறுதியாக தோழர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஆண்டிமடம் நோக்கிப் புறப்பட்டார் ஆசிரியர்.

ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர்!

ஆண்டிமடம் கடைவீதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மண்டல தலைவர் இரா.கோவிந்தராசன், மண்டல செயலாளர் சு.மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் திலீபன், மண்டல இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், நகர தலைவர் சுந்தரம், நகர செயலாளர் அண்ணாமலை, மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரை நிகழ்த்தினார்.

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கழுதைக்கு யார் திருமணம் செய்து வைப்பர்?

தமிழர் தலைவர் தம் உரையின் தொடக்கத்தில், ‘இந்த ஊரில் தோழர் பாண்டியன்தான் இயக்கத்திற்கு வந்தார். நான் வந்தவுடன் சிந்தனைச் செல்வனிடம் விசாரித்தேன்.  அவர் அழைத்து வந்தார். அன்றைக்கு ஆண்டிமடம் என்றாலே எல்லோரும் கொஞ்சம் யோசிக்க கூடிய அளவில் இருந்த சூழலில், இன்றைக்குத் திராவிடர் இயக்கக் கோட்டையாக மாறக்கூடிய அளவுக்கு நன்றாக பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் கார ணம், அருமைத் தோழர் எங்கள் குடும்பத் தோழர், கொள்கைத் தோழர் எஸ்.எஸ். சிவசுப்பிரமணியன்' என்று நினைவு கூர்ந்தார், ‘‘‘இன்று தம்மின் தம் மக்கள் அறிவுடையோர்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருப்பவர் மாண்பமை போக்குவரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள்'' என்று எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்களின் மகனையும் மறக்காமல் குறிப்பிட்டார். தொடர்ந்து, ‘இன்றைய இளைஞர்கள் எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் கொள்கைக்காக வாழ வேண்டும், பொது ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்றால், நீங்கள் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்’ என்று சுட்டிக்காட்டினார். ‘அப்படிப்பட்ட அழகிரியுடன் நான் பழகுகிற, பேசுகிற வாய்ப்பைப் பெற்றேன்’ என்று தன்னையும் அழகிரியின் நினைவுகளிலே இணைத்துக் கொண்டார். “வடநாட்டைப் போல இங்கே ‘ஆயாராம், காயாராம்' என்றும் குதிரை பேரம், கழுதை பேரம் இங்கில்லை'' என்றும் குறிப்பிட்டார். மேடையில் இருந்தவர்கள் உட்பட மக்கள் அனைவரும் சிரித்து விட்டனர். ஆசிரியர் அதை இன்னமும் தெளிவுபடுத்த எண்ணி, ‘கழுதை பேரம் என்று நான் ஒன்றும் சும்மா சொல்லவில்லை’ என்று தொடர்ந்தார். அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்னால் காதலர் தினத்தைக் கொச் சைப்படுத்த, கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் என்னிடம் இது குறித்து கேள்வி கேட்டனர். நான் ‘திருமணம் யார் செய்து வைப்பார்கள்? சொந்தக்காரர்கள் தானே? அதனால்தான் அவர்கள் செய்து வைக்கிறார்கள் என்று சொன்னேன். அதிலிருந்து அதை விட்டு விட்டார்கள்’ என்று சொல்லச் சொல்ல யோசித்துக் கொண்டே வந்த மக்கள், புரிந்ததும் வெடித்துச் சிரித்தனர். ’காதலர் தினம் என்பது ஜாதி ஒழிப்பு நாள் தான்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பார்ப்பனர்களிலும் தாழ்ந்த ஜாதி உண்டு!

ஜாதியின் கொடுமையைச் சொல்ல, பார்ப்பனர் வீடுகளில் நடக்கும் கொடுமைகளில் ஒன்றைச் சொன் னார். அதாவது, பார்ப்பனர் வீடுகளில் யாராவது இறந்து விட்டால் பிணத்தைத் தூக்குவதற்கென்று பார்ப்பனர் களிலேயே தாழ்ந்த ஜாதி உண்டு. அவர்களுக்கு 'சவுண்டிப் பார்ப்பனர்’ என்று அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு தகவலைச் சொல்லி, ‘பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி என் உருவத்தை பிணமாக தூக்கிச் சென்றது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போது, ‘எங்களுக்கு இதில் கோபம் எதுவுமில்லை. இதுவே எங்கள் கொள்கைக்கு வெற்றிதான்' என்று பதில் சொன்னேன். எப்படி என்றனர்? பார்ப்பனர் இறந்தாலே அதைத் தூக்குவதற்கு அவர்களிலேயே தாழ்ந்த ஜாதி யான சவுண்டிப் பார்ப்பனர்தான் தூக்கிச் செல்வார்கள். அவர்களின் கூற்றுப்படி நான் சூத்திரன். என் பிணத்தை பார்ப்பனர்கள் தூக்கியது எங்கள் கொள்கைக்கு வெற்றிதானே என்று சொன்னேன்’ என்று ஆசிரியர் அவர்கள் சொன்னதும், வியந்து போன மக்கள் தம்மை மறந்து கைதட்டினர். சிறிது இடைவெளிவிட்டு, ‘தூக் கினவன் இப்போது இல்லை. நான் இன்னும் இருக்கிறேன்!’ என்றதும் கைதட்டல்கள் தொடர்ந்தன. 

தொடர்ந்து, கொள்கை உறுதி பற்றி பேச வந்து, ’நான் என் வாழ்நாளில் கொள்கைக்காரனாக இருந்திருக் கிறேனே தவிர, கட்சிக்காரனாக இருந்ததில்லை’ என்று பெரியார் சொன்னதை நினைவூட்டி, தமிழ்நாட்டு அரசியலை தொட்டார். தமிழ்நாட்டில் மட்டும் கூட்டணி வலிமையாக இருக்கக் காரணம் என்ன? என்று கேள்வி கேட்டு, ‘இது அரசியல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி’ என்று பதிலும் சொன்னார். தொடர்ந்து மகளிர் உரிமை பற்றியும், அதில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு குறித்தும், வைதீகத்தின் பங்களிப்பு குறித்தும் விவரித்தார். நிறைவாக மோடியின் ஜூம்லாக்களைச் சொல்லி, ’தமிழ்நாட்டில் பெரியார், ராமன் தோலை உரித்ததால்தான் அவர்களால் இங்கே வாலாட்ட முடியவில்லை’ என்பதை பலத்த கைதட்டல்களுடன் சொல்லி, சேது சமுத்திரத் திட்டம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் பரமசிவம், வி.சி.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை, வி.சி.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், த.வா.க. ஒன்றிய செயலாளர் கலைவாணன், சி.பி.அய்.ஒன்றிய செயலாளர் கவர்னர், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி நகர பொறுப்பாளர் செல்வராஜ், கழக ஒன்றிய தலைவர் தமிழரசன், கழக ஒன்றிய செயலாளர் தியாக.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் நன்றி கூறினார். 

நிகழ்வின் தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் வழங்கிய ‘மந்திரமா? தந்திரமா?' எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பரப்புரைப் பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment