தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சி ஓடுவது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சி ஓடுவது ஏன்?

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வராத மாணவர் களை தேர்வை எழுத வைக்க கல்வித் துறை முயற்சி செய்கிறது. அந்த வகையில் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* இந்த கல்வியாண்டில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர் களில் பொதுத் தேர்வுக்கு வராதவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கும், இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும், அனைத்துத் தேர்வர்களும் தேர்வினை எதிர்கொள்வதற்கும், துணைத் தேர்வு சிறப்புப் பயிற்சி மய்யம் ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிக்கவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும். வருகிற 24-ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10 மற்றும் 24-ஆம் தேதிகளிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த கூட்டங்களை அவசியம் நடத்த வேண்டும்.  

* தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்கள் தேர்வு மய்ய முதன்மை கண்காணிப்பாளரால் தேர்வு நடைபெறும் அன்று பிற்பகலிலேயே பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அதைப் பகிர வேண்டும். அதே போல் நீண்ட நாள் விடுப்பில் இருக்கும் மாணவர்களின் விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்துக்கு முன்னரே தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

* 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர் பட்டியலை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பகிருவதோடு. அவர்கள் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதிசெய்ய வேண்டும்.

* நீண்ட நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை சேகரித்து மாணவர்களை பள்ளியில் நடை பெறும் சிறப்புப் பயிற்சி மய்யங்களுக்கு வரவழைத்து பயிற்சியில் பங்கேற்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.  

* ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர்கள், வட்டார வள மய்ய ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வாயிலாக மாணவர்கள், பெற்றோருக்குப் பொதுத் தேர்வின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

* அதேபோல், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் பெற்றோருக்கும் துணைத் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். 

* துணைத் தேர்வு குறித்த மாணவர்கள், பெற்றோரின் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு  14417 என்ற இலவச உதவி மய்ய எண்ணை பயன்படுத்தலாம்; துணைத்தேர்வுக்கான முன்தயாரிப்புக்கும் உயர் கல்வி படிப்பதற்கான ஆலோ சனைகள் வழங்குவதற்கும் பள்ளி அளவில் சிறப்புப் பயிற்சி மய்யம் ஏற்படுத்தப்பட்டு, பாட ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் பள்ளி மேலாண்மைக் குழு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆலோசனைகள் சிறப்பானவைதான் - அதே நேரத்தில் தேர்வு என்றாலே பெரும் அச்சம் மாணவர்கள் மத்தியில் பேரலையாக எழுந்து நிற்கிறதே - அதற்குக் காரணங்கள் என்ன என்பதைக் கல்வியாளர்கள் யோசிக்க வேண்டாமா? 

தொடக்கப் பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள் பொதி மாடுகள் போல புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்லுவதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?

தேசிய புதிய கல்வித் திட்டம் என்ற பெயராலே 5ஆம் வகுப்புக்கே அரசுத் தேர்வாமே! எட்டாம் வகுப்புக்கும் அரசு தேர்வாமே!

இப்பொழுதுகூட 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக அரசுத் தேர்வு என்ற  அழுத்தமே, மாணவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்துகிறதே - இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் +2 தேர்வை எழுதுவதற்கு வரவில்லை என்ற சூழலில், மாணவர்கள் சொன்ன கருத்துகள் என்ன?

11ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெறவில்லை- எனவே அத்தோடு எங்கள் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம் என்று பெரும்பாலான மாணவர்கள் கூறியிருக்கிறார்களே, இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டாமா?

உலகில்  மிகச் சிறப்பு கல்வி முறை உள்ள நாடு பின்லாந்து என்று கூறப்படுகிறதே- அங்கெல்லாம் எந்த முறை கையாளப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சியை மேற்கொள்வது முக்கியமானது.

இப்பொழுதுள்ள மனப்பாட கல்வி - தேர்வு என்பது பார்ப்பனீய முறை - பரம்பரை பரம்பரையாக மந்திரங்களை மனப்பாடம் செய்யும் திறன் அவர்களின் ஜீனிலேயே உள்ளது.

இதற்குப் பதில் செய்முறைக் கல்விதான் தேவை. 

வெறும் ஏட்டுப் படிப்பு தான் கல்வியா? விளையாட்டுகள், மாணவர்களிடம் குடிகொண்டுள்ள தனித் திறன் போன்றவற்றை வெளியில் கொண்டு வருவதற்கான திட்டம் என்ன?

என்.சி.சி., ஏ.சி.சி. என்பதெல்லாம் காணாமல் போன காரணம் என்ன? அய்.அய்.டி.யில்கூட மாணவர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டே போவது ஏன்?

பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப் படாததும் ஒரு முக்கிய காரணம். ஜாதி அபிமானம் உள்ள ஒரு நாட்டில் குறிப்பிட்ட மேல் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள் பேராசிரியர்களானால் அங்கே மாணவர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற புகாரைப் புறக்கணிக்க முடியுமா?

உள்ளீடு மதிப்பெண்கள் அளிக்கப்படுவதில் பாகுபாடுகள் இருக்கின்றன என்பதையும் அலட்சியப்படுத்த முடியுமா?

மாணவர்கள் தேர்வு எழுதத் தயங்கும் ஒரு நிலையில், கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து தீர்வு காண்பது அவசர அவசியமாகும்.


No comments:

Post a Comment