பிஜேபியின் இரட்டை வேடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

பிஜேபியின் இரட்டை வேடம்

மேகாலயா பா.ஜ.க. தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நானே மாட்டிறைச்சி சாப்பிடு கிறேன். அதில் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பா.ஜ.க. எந்த ஜாதி, அல்லது மதம் பற்றியும் நினைப்பதில்லை. நாம் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அது நமது உணவுப் பழக்கம். ஒரு அரசியல் கட்சிக்கு அதனுடன் ஏன் பிரச்சினை வர வேண்டும்?" 

"மேகாலயாவில் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். மாநிலத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இது நமது பழக்கம், மற்றும் கலாச்சாரம்! நாம் நமது  சொந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறோம், தடை இல்லை, எங்களுக்கு எந்தத் திசையும் இல்லை. மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்தும். கட்சித் தலைவர்கள் ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்க்கிறார்கள். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தபட்சம் 34 இடங்களில் வெற்றி பெறுவோம். இதுவே எங்களின் கணிப்பு. 

மக்கள் எங்களுக்கு வாக்காளிக்கிறார்களா இல்லையா என்பது இப்போது மக்களின் கையில் உள்ளது. மாநிலத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை மக்கள் விரும்பினால், மாநிலத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வுக்கு கண்டிப்பாக வாய்ப்பளிக்க வேண் டும்." இவ்வாறு  அவர் தெரிவித்தார். மேகாலயாவில் மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட அம் மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது.

மேகலாயாவின் பிஜேபி தலைவர் தனது உரையின் முதல் பகுதியில் யாருக்குப் பதில் சொல்லுகிறார் என்பதுதான் முக்கியம்.

உணவுப் பிரச்சினையில் ஒரு கட்சிக்கு என்ன வேலை? என்று மேகலாயா பிஜேபி தலைவர் யாரை நோக்கி விரலை நீட்டுகிறார்? 

சாட்சாத் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கித் தானே? எந்தக் கட்சியை நோக்கி வினா எழுப்புகிறார்? பிஜேபியை நோக்கித் தானே?

இஸ்லாமியர் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) இருப்பது மாட்டுக் கறி என்று மோப்பம் பிடித்து படுகொலை செய்த கட்சி எது என்பதை அறிய மாட்டாரா மேகாலயா பிஜேபி தலைவர்? செத்துப் போன பசுத் தோலை உரித்துக் கொண் டிருந்த அரியானாவைச் சேர்ந்த பட்டியலின மக்களை அடித்துக் கொன்ற அபாயகரமான மதவெறியர்கள் யார் என்று தெரியாமலா பேசுகிறார் மேகாலயா பிஜேபி தலைவர்?

தேர்தல் நேரம்  - வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய உணவு - மாட்டுக் கறி - அதில் கை வைத்தால் என்ன நடக்கும் என் பதைத் தெரிந்தே இந்தக் கபடத்தனமான பேச்சு! மேகாலயா மக்கள் பிஜேபிக்குப் பாடம் கற்பிப்பார்கள் என்பது பிஜேபி தலைவர் பேச்சின் தோரணையிலேயே அப் பட்டமாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment