உயர்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி 118 பணியிடங்களுக்கு கொலீஜியம் பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

உயர்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி 118 பணியிடங்களுக்கு கொலீஜியம் பரிந்துரை

 புதுடில்லி,மார்ச்19- நாட்டில் உள்ள உயர்நீதி மன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 118 இடங்களுக்கு மட்டுமே கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளதாக மாநிலங்கள வையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மார்ச் 10-ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இல்லை. அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதி களின் எண்ணிக்கை 1,114. ஆனால், 780 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 334 நீதிபதி 

பணியிடங்கள் காலியாக உள்ளன.

உயர்நீதிமன்றங்களில் 118 நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை கொலீஜியம் இதுவரை அனுப்பியுள்ளது. அப்பரிந்துரைகள் மீதான நடவடிக் கைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. 216 நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை உயர்நீதிமன்ற கொலீஜியம் வழங்க வேண்டியுள்ளது.

பணிஓய்வு, பணி விலகல், உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உயர்நீதி மன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாகின்றன. அவற்றை நிரப்புவதற்குத் தொடர்ச்சியான ஒருங் கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசமைப்புச் சட்ட அமைப்பு களின் ஆலோசனைகளைப் பெற்றே நீதிபதி 

பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி காலியிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு ஒன்றிய அரசு உறுதிகொண்டுள்ளது. நீதிபதி காலியிடங்களுக்கான பரிந்துரைகளை வழங்கும் போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பரிந் துரைக்க முன்னுரிமை வழங்கி சமூக நீதியை நிலை நாட்டுமாறு கொலீஜியத்துக்கு அரசு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் நீதித்துறை நடவடிக்கைகளை மேம்படுத்து வதற்காக மட்டுமே நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தனது பதிலில் அமைச்சர் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment