கோவையில் ஈஷா யோகா மய்யம் என்ற ஒன்றை அமைத்து ஜக்கி வாசுதேவ் என்ற ஆசாமி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகின்றார்.
யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளார். பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துள்ளார்.
அவர் நடத்தும் ஆசிரமத்தில் கொலைகள் நடந்துள்ளன. பல மர்மமான நிகழ்வுகள் உலா வருகின்றன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றும் வருகிறது.
ஈஷா மய்யத்தில் பயிற்சிக்கு வந்த சுபசிறீ என்ற பெண்ணின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய மர்ம ஆசாமி நடத்தும் ஒரு மய்யத்திற்குக் குடியரசு தலைவர் வருவது எல்லாம் எந்த வகையில் சட்டப்படியானது நியாயமானது - நேர்மையானது? என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இந்த மய்யத்திற்கு மகா சிவராத்திரி அன்று வருகை தருகிறார் என்பது எத்தகைய அவலம்!
ஜக்கி வாசுதேவ் மீதுள்ள வழக்கு விசாரணை எல்லாம் என்ன ஆகும் என்பது எல்லாம் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதே!
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முதல் குடிமக(ன்)ள் ஒரு குறிப்பிட்ட மத நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லாம், சட்ட அவமதிப்பின் கீழ் வராதா?
ஒன்றியத்தில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்தாலும் அமைந்தது - எந்த சட்ட வரை முறைகளும் இல்லாத அராஜக பூமியாகி விட்டது.
குடியரசு நாள் அரசு விளம்பரத்திலேயே மதச் சார்பின்மை, சோசலிசம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை கூறும் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் நீக்கி வெளியிடுகிறது என்றால் இந்த அரசின் கீழிறக்கத்தை விளக்கிட வேறு எந்த சாட்சியம் தேவை?
ரூ.1,800 கோடி செலவில், மதச்சார்பற்ற அரசின் ஒரு பிரதமர் ராமன் கோயிலை முண்டாசை இறுக்கிக் கட்டி கட்டுகிறார் என்பதிலிருந்தே நடப்பது ஹிந்து ராஜ்யம் ராம ராஜ்யம் என்பது விளங்கவில்லையா?
மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செயல் திட்டங்களைச் செய்து முடிக்கத் திராணியற்ற நிலையில், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மதக் கிறுக்குத்தனத்தையும், பக்திப் போதையையும் பயன்படுத்தித் திசை திருப்பும் திருகு தாள வேலைதானே இவை எல்லாம்!
குடியரசு தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குஜராத்தில் சோமநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்டு நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்கச் சென்ற போது, பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள், மதச்சார்பற்ற கொள்கையுடைய அரசின் தலைவர் குறிப்பிட்ட ஒரு மத நிகழ்ச்சியில் பங்கேற்பது உகந்ததல்ல என்று இடித்துச் சொன்னதுண்டே!
1971ஆம் ஆண்டில் சாரதா பீடாதிபதியான சங்கராச்சாரியார் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிக்கு, அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜி.எஸ். பாடக், குஜராத் ஆளுநர் சிறீமன் நாராயணன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; அதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இன்றைய குடியரசு தலைவர் சிவராத்திரி என்ற பெயரில் ஓர் இரவு முழுவதும் நடக்கும் பூஜை புனஷ்காரங்களில் பங்கேற்பது ஏற்புடையது தானா?
மதச் சார்பின்மை என்றால் மதத்திற்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று தானே அகராதிகள் அர்த்தம் கூறுகின்றன.
அதற்கு மாறாக, எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்று இவர்கள் விருப்பத்திற்கு வியாக் கியானம் செய்வது விவேகமாகாது.
நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் இந்த ஆட்சியில் இந்த வியாக்கியானம்கூட பொருந்தாத ஒன்றுதான்.
எல்லா மதங்களையும் சமமாகத்தான் பாவிக் கிறார்களா? இந்தியா என்றால் ஒரே மதம் என்பதுதானே இவர்களின் கோட்பாடு!
வேற்று மதத்தவரின் குடி உரிமையே கேள்விக் குறியாக்கப்பட்டு விட்டதே!
140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு துணைக் கண்டத்தின் அமைச்சரவையில், 15% விழுக்காடு மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் மக்களுக்கு ஒரே ஒரு இடம் கூடக் கிடையாதே! இதுதான் இந்தியாவின் ஒரு மதச்சார்பு நிலை.
குடியரசு தலைவர் கோவை வருகையை ரத்து செய்வாரேயானால், அவரின் உயர்ந்த பதவிக்கு மரியாதை சேர்த்ததாக இருக்கும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தை உரிய வகையில் மதித்ததாகவும் இருக்கும் - எங்கே பார்ப்போம்!
No comments:
Post a Comment