புதிய பல்லியினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

புதிய பல்லியினம்

தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஆண்டீஸ் மலைத்தொடரில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் லியாலிமஸ் வார்ஜெண்ட்டே (Liolaemus Warjantay). இந்த இனம் பெருவின் தென்மேற்குப் பகுதியில் அரிக்கீட்டா  (Arequita)  என்ற பிரதேசத்தில் வாழ்கிறது. 4,500 மீட்டர் (14,700 அடி) உயரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இதனை பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் கண்டுபிடித்தது.

Liolaemus Warjantay  அமைப்பும் பரவலும்

இதன் தலை அடர் சாம்பல் நிறத்துடன் உள்ளது. பெண் இனப் பல்லிகள் வெளிறிய மஞ்சள் நிற கண் இமைகளைப் பெற்றுள்ளன. அர்ஜெண்டினா, பொலிவியா, சிலி மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு இந்த இனத்தைக் கண்டுபிடித்தது. இதே வகையைச் சேர்ந்த 280 இனங்கள் பெருவில் உள்ள மத்திய ஆண்டீஸ் பகுதி முதல் தென்னமெரிக்காவின் தென்கோடி மூலையில் உள்ள படகோனியா (Patagonia) வரை காணப்படுகிறது.

தகவமைப்பு

இவை தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பல்வேறு தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. 2021 ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் இதே பிரிவைச் சேர்ந்த மற்றொரு பல்லியை இதே பகுதியில் 5,000 மீட்டர் உயரத்தில் கண்டுபிடித்தனர். இதுவே உலகில் மிக உயரத்தில் வாழும் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் என்று அப்போது விஞ்ஞானிகள் கருதினர். இந்த கண்டுபிடிப்பு பூமியில் மனிதன் கண்டறிய வேண்டிய உயிரினங்கள் எண்ணற்றவை உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்


No comments:

Post a Comment