கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்!
ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறாதுழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலுபேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச்சவாரி செய்தாலும், உட்கார்ந்து செல்லும் போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!
கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறுவேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகையில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல.
பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங்காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்! அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!
இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!
பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப்பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ் செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம் பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப்பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர் வாதத்தினால் விளைந்த வளர்ச்சிதான் இன்றையத் திராவிடர் கழகம்!
அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர்களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால் மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனையில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லாவிட்டால், “உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங்களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியதுதானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!
அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவிடரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொருவரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! “திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!!” இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப்பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை!” எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல்லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது! யோசியுங்கள்!” இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர்களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்!
தோளோடு தோளிணைத்து நாட்டுக்குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்தமாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள். அப்போது பல தீர்மானங்களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட்டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவதாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண்டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்ய வேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.
இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்பதினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்ய வேண்டிய “திருப்பணி” என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், “தாங்கள் வேறானவர்கள்”, “உயர்ந்தவர்கள்” என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம்” என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.
மாநாட்டுக்குப் பிறகு, அடுத்த படியாக, மாகாணத்திற்கு வந்திருக்கும் ஏகாதிபத்தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் “பட்டேல் பிரபு” அவர்கள் பேச்சுகளிலிருந்து தெரிகிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு “விடுதலையை” ஒழித்து விடவேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந்திருக்கிறது.
சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் “பட்டேல் பெருமான்” அவர்கள். இந்தப் “பெருமான்”தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக “பவநகரை” நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக்காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத்தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க்காரான, மாகாண மந்திரிசபையினருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந்தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!
ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரையாகவே “நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும்” என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார்களே, இதைக் கண்டு நாம் உண்மையாகவே பச்சாதாபப் படுகிறோம்! பார்ப்பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென்கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறைவேற்றியும் விடலாம்.
ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்குகேட்ட நீதிக்கட்சியை, அய்ம்பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந்தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங்கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத்திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடுகின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித்திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லா திருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்!
குடிஅரசு - தலையங்கம் - 26.02.1949
No comments:
Post a Comment