ராய்ப்பூர், பிப் 26 அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் தயார் என்று கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.
சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (25.2.2023) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் சாசனம் மீதும், ஜனநாயக மதிப்பீடுகள் மீதும் தொடரும் தாக்குதல்கள், சீன எல்லையில் தேசிய பாதுகாப்பு பிரச்சினை, எப்போதும் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் என நாடு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த கடினமான சூழ்நிலைகளில், நாட்டுக்குத் தகுதி வாய்ந்த, தீர்க்கமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உண்டு. 2004-ஆம் ஆண்டு தொடங்கி 2014-ஆம் ஆண்டு வரையில், ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி, நாட்டு மக்களுக்கு சேவை செய்தது. நாங்கள் மக்கள் விரோதமான, ஜனநாயக விரோதமான பா.ஜ.க. அரசை தோற்கடிப்பதற்காக ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து சாத்தியமான கூட்டணியை உருவாக்குவதை மீண்டும் எதிர்பார்க்கிறோம். நாங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறோம். வரக்கூடிய சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் எங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக என்ன தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வின் மரபணு, ஏழைகளுக்கு எதிரானது. அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு எதிராக மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும். பிரதம சேவகன் என்று தன்னை அழைத்துக்கொள்கிறவர் (பிரதமர் மோடி), தனது நண்பர்களின் நலன்களுக்காகத்தான் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய ஜனநாயகத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உழைக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த மாநாட்டில், கட்சியின் காரியக்கமிட்டியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட் டோர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த திருத்தத்தின்படி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் கட்சியின் மேனாள் பிரதமர்கள், மேனாள் தலைவர்கள் இடம் பெறுவார்கள். காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கை 25-இல் இருந்து 35 ஆக உயர்த்தப்படுகிறது. இப்போது முதல் கட்சியில் டிஜிட்டல் வடிவில் உறுப்பினர் சேர்க்கையும், பதிவேடுகளும் இருக்கும்.
No comments:
Post a Comment