குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கூட்டத்தினரின் மதவாத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதவெறி சக்திகள் அங்கே கலவரம் நடத்துவோம் என்ற தொனியில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசித் திருவிழாவின் போது ஹைந்தவ சேவா சங்கம் என்கிற பெயரில் ‘சமய மாநாடு’ போர்வையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்திருக்கிறது. சமய நிகழ்ச்சிகளை எதையும் ரத்து செய்யவில்லை. மாறாக, ஹைந்தவ சேவா சங்கத்தின் பா.ஜ.க. அரசியல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பும் நிகழ்ச்சியை மட்டுமே தடை செய்திருக்கிறார்கள். ஆனால், சமய நிகழ்ச்சிகளையே தடை செய்து விட்டதாக அந்த சங்க நிர்வாகிகளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினரும் வழக்கம் போலவே மோசடியாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக, உண்மையை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “ஹைந்தவ சேவா சங்கம் இந்த ஆண்டு அவர்களின் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கும் நபர்களின் பெயர்களைப் பார்த்தாலே இது ஆன்மீக நிகழ்ச்சியல்ல - அப்பட்டமான அரசியல் நிகழ்ச்சி என்பது தெரியவருகிறது” எனக் குறிப்பிட்டு, அவர்களது நிகழ்ச்சி நிரல் திட்டத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்படி சங்கத்தினர், மண்டைக் காடு கோவிலில் 5.3.2023 அன்று பாஜக மேனாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்; 7.2.2023 அன்று பாஜக ஒன்றிய கவுன் சிலர் வி.மனோகர குமார்; 8.3.2023 அன்று பாஜக இரணியல் மேனாள் பேரூராட்சித் தலைவர் கே.கோபு குமார்; 10.3.2023 அன்று ராஷ்டிரா சேவிகா சமிதியின் எம்.சிறீவர்தினி, ஆர்.எஸ்.எஸ். தர்ம ஜாக்ரான் மாநில அமைப்பாளர் இ.பரமேஸ்வரன் ஜி, இந்து அய்க்கிய வேதி மாநிலத் தலைவர் கே.பி.சசிகலா டீச்சர்; 11.3.2023 அன்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம சிறீனி வாசன், பாஜக மேனாள் நாகர்கோ வில் நகர்மன்ற தலைவர் மீனா தேவ்; 13.3.2023 அன்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ். சஹ பிரகாந்த் ப்ரமுக், குமரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சி.தர்மராஜ், பாஜக மாவட்ட துணைத் தலைவர் பா.ரமேஷ்; 14.3.2023 அன்று நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம், ஹிந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் த. அரசுராஜா, பத்மநாபபுரம் மேனாள் எம்.எல்.ஏ. வை.பாலச்சந்தர். ஹிந்து முன்னணி மாவட்ட ஆலோசகர் சி.சோமன், ஹிந்து மகா சபா துணைத் தலைவர் தா.பாலசுப்ரமணியம் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்து வார்கள் என அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர். “இவர்கள் எல்லாம் அன்பைப் போதிப்பார்களா? ஆன்மீகம் வளர்ப்பார்களா? ஹிந்து சமயத்திற்கும் இவர்களுக்கும் என்னதான் தொடர்பு? அரசியல் நோக்கம் தவிர வேறு என்ன தொடர்பு? இதைத் தடை செய்து விட்டார்கள் என்று கூக்குரலிடு கிறார்கள்.
கோயில் திருவிழாவுக்கும் சங்பரிவார்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்பொழுதெல்லாம் கோயில் திருவிழாக்களை ஹிந்து முன்னணியினரும், ஆர்.எஸ்.எஸ்சும் நடத்துவது போல காவிக் கொடியைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். பக்தியை வைத்து மத வெறியை மூட்டி அரசியல் இலாபம் ஈட்டுவதே இவர்களின் நோக்கம்.
1982இல் மண்டைக் காட்டில் மதக்கலவரத்தை உண்டாக்கி மனித ரத்தத்தைக் குடித்ததுபோல 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் ஏதாவது ஒரு கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள் போலும்!
அரசும், காவல்துறையும் எச்சரிக்கையாக இருந்து உரிய வகையில் செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment