சோதிடப் பரீட்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

சோதிடப் பரீட்சை

- அறிஞர் அண்ணா

தியாகராசனும், வேணுவும் பச்சையப்பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகுநாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இருவரும் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர்.  அதிகம் வளர்த்துவானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்பிராய பேதமிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத்தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

“வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும்” என்றறிந்த தியாகராசன்,  இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான். அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

“நரதபுரம் நவீன சோதிட சாத்திரியார் எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு”

“எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின் பெயரையாவது குறிக்கவும்”

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு: 

அய்யா, 

கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவுசெய்து விடைகளைத் தெரிவிக்கவும். 

1) என் தாயார் உடம்பு சீக்கிரம் குணமாகுமா?

2) என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?

3) அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? 

புஷ்பம் - கனகாம்பரம்

தங்களன்புள்ள,

 தியாகராசன்,

இதை உடனே தபாலில் சேர்த்து விட்டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரியார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. 

தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரியாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்ததாவது:-

“உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன் அவர் குடும்பத்தில் அமைதி எற்படும்.”

வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்த தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? 

தியாகுவின் தாயார் இறந்து அநேக வருடங்களாயின. 

வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரியாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

- ‘திராவிட நாடு’ இதழ் - (5.7.1942)


No comments:

Post a Comment