ராஜா சாஹேப் அவர்களே! சகோதரர்களே! சிவாஜி மகாராஜா பார்ப்பனர்களை நம்பினதால்தான் மோசம் போனார். நான் சிவாஜி மகாராஜா தம் வாழ்நாளில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு நன்மை செய்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு பெரிய நன்மையை நம்மவர்களுக்குச் செய்திருக்கிறார்! “இதோ நான் பார்ப்பனர்களை நம்பி மோசம் போனேன்! பார்ப்பனரல்லாத மக்களே! ஜாக்கிரதையாயிருங்கள், பார்ப்பனர்களை நம்பினால் மோசம் போவீர்கள்!” என்ற ஓர் எச்சரிக்கையை, ஒரு பெரிய படிப்பினையை, நமக்கு விட்டுப் போயிருக்கிறார். இதுதான் சிவாஜி மகாராஜா நம் பார்ப்பனரல்லாத மக்களுக்குச் செய்த பெரிய நன்மையாகும். இதற்காகத்தான் நாம் அவருடைய முன்னூறாமாண்டு விழாவைக் கொண்டாட இங்கு கூடியிருக்கிறோம். இதைத்தவிர மற்றபடி தம் வாழ்நாளில் சிவாஜி மகாராஜா பார்ப்பனர்களுக்குத்தான் நன்மை புரிந்து வந்தார். பார்ப்பனர்களுக்குத்தான் பெரிய பெரிய உத்தியோகம் கொடுத்துவந்தார். பார்ப்பனர்களையே தான் ஆதரித்து வந்தார். இத்தகைய நன்மைகளெல்லாம் பார்ப்பனர்களுக்கே செய்து வந்ததினாலும், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களைப் புறக்கணித்தே வந்ததாலும் இப்பெரிய பட்சபாதமான குற்றத்தைச் செய்ததற்காக, அந்தக் கர்ம பலனைத் தகுந்தபடி அனுபவித்தார். பார்ப்பனர்களுக்கு உபகாரம் செய்தது பாம்புக்குப் பால்வார்த்தது போலாயிற்று! உபகாரம் செய்த சிவாஜி மகாராஜாவுக்குக கல்மனப் பார்ப்பனர்கள் அபகாரம் செய்தனர்.
சிவாஜி மகாராஜாவானவர் அவ்வாறு பட்சபாதமாய் நடந்துகொண்டது அவருடைய குற்றமாகாது. குழந்தைப் பருவத்திலிருந்து பார்ப்பனருடனேயே பழகி வந்ததாலும் பார்ப்பனர்களே உயர்ந்தவர்களென்று அவருக்கு ஆரம்ப முதலே உபதேசம் செய்யப்பட்டு வந்திருத்தலாலும் பார்ப்பனர்களுக்குத் தர்மமும் உபகாரம் செய்தால்தான் புண்ணியங் கிடைக்குமென்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்திருத்தலாலும் சிவாஜி மகாராஜா அரசரான பின்னருங்கூட, பார்ப்பனக் கட்டுப்பாடுகளினின்றும் புரோகிதக் கட்டுப்பாடுகளினின்றும் விடுபடுவது மிகவும் கஷ்டமாயிருந்தது.
நமது தலைவர் கனம் பனகால் அரசர் பகவத் கீதையிலிருந்து எடுத்துச் சொல்லியது போல “நீதி அழிந்து அநீதி தலைவிரித் தாடுங்கால் துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலனார்த்தம் நான் இவ்வுலகத்தில் அவதரிப்பேன்’’ என்றபடி நம் வீரர்கள் ஒவ்வொருவரும் அவதார புருஷர்களாய் இவ்வுலகில் தோன்றினார்கள் என்பதற்குச் சற்றும் சந்தேகமேயில்லை. இம்மூபெருந் தலைவர்களும் தங்கள் வாழ்நாளிலும் வாழ்நாள்களுக்குப் பின்னாலும் விட்டுப் போயுள்ள உணர்ச்சிகளும் கிளர்ச்சிகளும் இயக்கங்களும் அவதார புருஷர்களால் முடியத்தக்க காரியங்களேயன்றி சாதாரண மக்களால் முடியத்தக்க காரியங்களன்று.
சிவாஜி மகாராஜா பெரிய நாடுகளையெல்லாம் தன் வீரத்தினாலும், தீரத்தினாலும், போர்புரியும் ஆக்கத்தினாலும் ஜெயித்தார். அஞ்சா நெஞ்சம் படைத்த சுக்த வீரராய் விளங்கினார். அவருடைய வாழ்நாளில் அவருக்கு நிகராக போர்வீரர் யாருமே இருந்ததாகச் சொல்ல முடியாது. அப்படித் தன் திறனாலும் தன் சேனா பலத்தாலும் வென்ற நாடுகளையுங்கூடத் தான் அனுபவிக்கக் கூடாதென்று தற்காலத்திலிருப்பது போன்ற அக்காலத்துச் சட்டந்தெரிந்த புலிகளும் சட்ட நிபுணர்களும் சட்டப் பண்டிதர்களும் சொன்னார்கள். அததகைய பெரிய இராஜாங்கத்தை அனுபவிக்க சிவாஜி மகா ராஜாவுக்கு யாதொரு உரிமையும் சுதந்திரமும் இல்லையென்று சொல்லப்பட்டது. உண்மையென்ன? அக்காலத்துப் பார்ப்பனர்கள்தான் இராஜாக்களுடைய யோக்கியதைகளெல்லாம் கணிக்கக்கூடிய பண்டிதர்கள். அவர்கள் சொன்னதுதான் வேத வாக்கு, அப்பார்ப்பனப் பண்டிதர்கள் என்ன சொன்னார்கள்? சிவாஜி க்ஷத்திரியரல்ல. ஆதலால், அவர் அரசராக முடியாது என்று இந்துக்களின் குருக்களாகிய பார்ப்பனப் பண்டிதர்கள் சொன்னார்கள்! பார்ப்பனர்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் பார்ப்பனர்களால் பட்டாபிஷேகம் முதலிய சடங்குகள் நடத்தப்பெறாமல் போனால் தான் ராஜாவுக்குத் தகுந்த கண்ணியம் வாய்க்கப் பெற முடியாது என்று சிவாஜி மகா ராஜா நம்பினார். தான் எப்படியும் ஒரு அரசராகக் கருதப்பட வேண்டும். அதிகாரமிருக்கிறது, பெரிய ராஜ்யமிருக்கிறது. ஆனால், மகாராஜா என்ற பெயரில்லை. பார்ப்பனப் பண்டிதர்கள் தன்னை க்ஷத்திரியன் என்று கூப்பிட மறுக்கிறார்கள். அக்காலத்தில் பார்ப்பனர்களிடமிருந்து பட்டம் பெறுவது அவ்வளவு கஷ்டமாகவும் அவ்வளவு பெருமையானதாகவும் கருதப்பட்டு வந்தது! சிவாஜி மகாராஜாவும் அத்தகைய பெயருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருந்தார்.
ஒன்றரை கோடி தட்சணை!
பம்பாய் மாகாணத்துப் பிராமணர்களெல்லாம் ஒரே கட்டுப்பாடாக சிவாஜிக்கு க்ஷத்திரிய பட்டம் கொடுக்க மறுத்துவிடவே, சிவாஜி இந்தியாயின் வேறு இடங்களிலுள்ள பிராமணர்களை வரவழைக்க ஆரம்பித்தார். வடக்கே ராஜபுத்திர அரசர் களைப் போன்று தானும் ஒரு க்ஷத்திரியராக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசர் பட்டம் கிடைக்கப் பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணத்தாலும் ஆசையாலும் தூண்டப்பட்ட சிவாஜி காசியிலிருந்து பிராமண பண்டிதர்களை அழைத்துக்கொண்டு வந்தார். காசியிலுள்ள பிராமண பண்டிதர்கள் சொல்லிவிட்டால், பம்பாய்ப் பார்ப்பனப் பண்டிதர்களுக்கு வாயடை பட்டு விடும்! ஏனென்றால் அக்காலத்தில் காசிப் பிராமணர்கள் தான் மகா பண்டிதர்கள் என்று கருதப்பட்டு வந்தார்கள். பட்டாபிஷேக வைபவம் நடந்தேறவும், க்ஷத்திரியப்பட்டம் பெறவும் அந்தோ! சிவாஜி மகாராஜா ஒன்றரை கோடி ரூபாய் செலவிட வேண்டியதாயிற்று! இல்லாவிட்டால் “க்ஷத்திரிய”ப் பட்டம் வரமறுக்கிறது! இந்த வைபவத்திற்கு ஈஸ்டு இந்தியா கம்பெனியின் பிரதிநிதி யொருவரும் வந்திருந்தார். அவ்வெள்ளைக்கார சரித்திர ஆசிரியர் இப்பட்டாபிஷேக விருத்தாந்தங்களை யெல்லாம் பற்றி எழுதி யுள்ளார். சிவாஜி சரித்திரத்தை நான் எழுதவில்லை! (நகைப்பு) வேறு எந்த ஜஸ்டிஸ் கட்சியினரும் எழுதவில்லை! (நகைப்பு) அப் பட்டாபிஷேகத்தில் நடந்த சடங்குகளும் பார்ப்பனரின் கொடுமைகளும், பார்ப்பனரின் கேவலமான நடத்தைகளும், சிவாஜி மகாராஜா என்னென்ன சில்லரைச் சடங்குகளுக்கெல்லாம் உட்படுத்தப்பட்டார் என்பதும் மனிதத் தன்மைக்கு ஒவ்வாத கோட்பாடுகளும் இவையெல்லாம் சரித்திரத்தில் காணப் பெறுவனவேயன்றி வேறில்லை. கடைசியில் ஒரு பெரிய திராசைக் கொண்டுவந்து, ஒரு தட்டில் சிவாஜி மகாராஜாவை உட்கார வைத்தும், மற்றெரு தட்டில் கலப்படமில்லாத தங்கத்தை சிவாஜியின் நிறைக்குச் சமமாக நிரப்பினார்கள்!
சகோதரர்களே! அற்ப சொற்பமானவரன்று!எவர் எவ்வளவு வீரம் பொருந்தியிருந்தாரோ அதற்கேற்ப புஜபல பாராக்கிரமம் பொருந்தியவராய் ஆஜனுபாகுவாய் விளங்கியிருந்தார்! அவர் 140 பவுண்டு நிறையுடையவராயிருந்தார்! பிராமணர்களின் அதிர்ஷ்டத்தை என்னென்பேன்! 140 பவுண்டு நிறையுள்ள பசும் பொன்னைப் பார்ப்பனர்கள் தட்சணையாகப் பெற்றார்கள்! இதனாலும் இன்னும் மற்றைய சில்லரை தட்சணைகளாலும் சிவாஜி மகாராஜாவின் பொக்கிஷம் காலியாய்ப் போய்விட்டது! தான் எவ்வளவோ பிரயாசப்பட்டு பல வருடங்களாய்த் திரட்டி சம் பாதித்த பணத்தை யெல்லாம சகோதார்களே, பார்ப்பனரிடமிருந்து க்ஷத்திரியப் பட்டம் பெறுவதற்காக வேண்டி விரயம் செய்து விட்டார்! இத்துடன் அடங்கிற்றா நம் பிராமண நண்பர்களிற் சிவாஜி வேட்டை.
இறந்து போனவர்களுக்காக தட்சனை
சிவாஜி அநேக நகரங்களையும் கிராமங்களையும் இராஜ்ஜியங்களையும் கைப்பற்றியபோது எவ்வளவோ கொள்ளைகளும் கொலைகளும் நடந்தனவாம். அநேகமாயிரம் பேர் உயிர்களையும் இழந்தார்களாம். சொத்து சுதந்திரங்களையும் இழந்தார்களாம். ஆனால் சிவாஜி மகாராஜா ஒரு பெரும் பாவத்தைச் செய்தவராகிவிட்டாராம். அப்பாவத்தை யெல்லாம் நீக்க வேண்டுமென்று பார்ப்பனர்கள் சிவாஜி மகாராஜாவுக்குச் சொன்னார்கள். சிவாஜி அது உண்மைதானென்றும், போரில் அநேக உயிர்கள் சேதமாவதும் சொத்துகள் அழிவதும் இயற்கை தானென்றும் அதற்காகத்தான் நஷ்டமடைந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கத் தயாராயிருப்பதாகவும், அதற்கு வேண்டும் அவ்வளவையும் அக் குடும்பங்களுக்குக் கொடுத்துவிடலாம் என்று சொன்னார். அப்பொழுது சிவாஜியின் பாவத்தைப் போக்க மிக அக்கரையுள்ளவர்களைப் போல் பாவனை செய்த பிராமணர்கள், ‘இல்லை இல்லை இந்த நஷ்ட ஈட்டுப் பணத்தையெல்லாம் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் நேராக இறந்தவர்களிடமே அனுப்பி விடுகிறோம்” என்று சொன்னார்கள்! (பெருத்த நகைப்பும் கை தட்டலும்) சகோதரர்களே! அதை சிவாஜி மகாராஜா நம்பி அப்படியே அந்த நஷ்ட ஈட்டையெல்லாம் அப்பார்ப்பனர்களிடமே கொடுத்துவிட்டார்! (நகைப்பு) இத்தகையவரைத்தான் சகோதரர்களே, நம் பிராமண சகோதரர்களான பீஷ்வாக்கள் மோசஞ் செய்தார்கள்!
இவை மட்டுமின்றி சிவாஜி ஒவ்வொரு போருக்கும். புறப்படும் போதும் யுத்தத்தினின்று மீண்டும் வரும்போதும் பிராமணர்களால் சடங்குகள் நடந்தே தீரவேண்டும் பிராமணர் சொல்படி நடக்கும் பொம்மையாய் சிவாஜி மகாராஜா இருந்து வந்தார். எடுத்த தற்கெல்லாம் சடங்கு. எடுத்ததற்கெல்லாம் தரகு! எடுத்ததற்கெல்லாம் தட்சனை!
இவற்றிற்கெல்லாம் சிவாஜி மகாராஜா கீழ்ப்படிந்தே நடந்து வந்தார். ஆனால் ஒவ்வொரு வேளைகளில் பார்ப்பனப் பித்தலாட்டங்களை மகாராஜா அவர்கள் கண்டித்தார். அப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் அவரை ஒழிக்க உத்தேசித்தார்கள். போருக்குரிய தட்டி ஜல்லடம் வீரமணி வீரவான் முதலிய புனைந்து குதிரையேறிப் போர் முனைக்குப் புறப்படும் போது பார்ப்பனர்கள் சடங்கு பிரஸ்தாபம் செய்வார்கள். ஆனால் சுத்த வீரரான சிவாஜிக்கு அப்பொழுதுதான் உண்மை க்ஷத்திர்ய இரத்தம், போர் வீர இரத்தம், கொதிக்க ஆரம்பித்து விடும்! பார்ப்பனப் பித்தலாட்டங்களின் மோசங்களையும் அர்த்தமில்லாத சடங்குகளையும் அப்பொழுது தான் சற்று ஊன்றிக் கவனிப்பார், “அப்பாலே போங்கள்! அர்த்தமில்லாத சடங்குகள் என் வெற்றியைத் தடை செய்யாதிருப்பதாக” என்று சொல்லி வீர முழக்கம் செய்து கொண்டு வாகைமாலை சூடப்போர் முனைக்குப் பறந்து விடுவார். இத்தகைய சிவாஜியின் அடாத செயல்களுக்காகப் பார்ப்பனர்கள் அவரை ஒழிக்க முயற்சி செய்யலானார்கள் தங்களை சிவாஜி சட்டை செய்யவில்லையாம்.(நகைப்பு)
மற்றும் சகோதரர்களே, பார்ப்பனர்களுக்குத்தான் சிவாஜி மகாராஜா தன் சேனைகளில் தளகர்த்தர் உத்தியோகங்களையும் தன் இராஜ்ஜியத்தில் மந்திரி உத்தியோகங்களையும் இன்னும் பெரிய பெரிய உத்தியோகங்களையுங் கொடுத்து வந்தார். பார்ப்பன ரல்லாதார்களை கவனிக்கவே கிடையாது. சிவாஜி மகாராஜாவுக்கு இரண்டு குருமார்களிருந்தனர். அவர்கள் துக்காராம், ராம்தாஸ் ஆகியவர்களே. துக்காராம் பார்ப் பனரல்லாதார், ராம்தாஸ் பார்ப்பனர். இரு வரும் பெரிய பண்டிதர்களே. இவர்கள் இருவருடைய உபதேசமும் 2 வகைப்படும். ஒன்று சிவாஜி மகாராஜாவுக்கு சுயமதிப்பை யும் வீரத்தையும் ஊட்டுவதாக விருந்தது. மற்றொருவரின் உபதேசம் பார்ப்பனர்களைப் பூஜிக்கச் செய்வதாயிருந்தது.
No comments:
Post a Comment