1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி! வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு பெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார் (பெரியார் துணைவியார்), எஸ்.ஆர்.கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை), திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்கு தலைமை தாங்கியவர் பெரியாரின் துணைவியார், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து; தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.
மீனவர்கள் மீன் கூடையைத் தூக்கிக் கொண்டு போகக் கூட இங்கே அனுமதிக்கும்போது, மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்று பெரியாரின் சகோதரி கேட்டார். தடையை மீற வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணி நேரம் அதே இடத்திலே இருந்தனர்.
இறுதியாக பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். “பெண்கள் என்பதற்காக தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம்; ஆண்களை எப்படிநடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார்.
- மலையாள தினசரி கேரள கவுமதி 1924 மே மாதம் 23ஆம் தேதி வெளியிட்ட செய்தி.
(குறிப்பு: கிளர்ச்சியில் பங்கு கொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம், இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் தந்தை பெரியார் குடும்பத்து பெண்கள்தான் என்பது விளங்குகிறது.)
No comments:
Post a Comment