நடந்து முடிந்த தேர்தல் நமக்குச் சொல்லும் பாடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

நடந்து முடிந்த தேர்தல் நமக்குச் சொல்லும் பாடம்

பீட்டர் அல்போன்ஸ்

“பாஜகவின் கைவசம் இருந்த இமாச்சலப்பிரதேசம் மற்றும் டில்லி மாநகராட்சியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது குறித்தும், வரலாற்றில் இதுவரை இல்லாத  பல நெருக்கடிகளுக்கு இடையில் காங்கிரஸ் இமாச்சலப் பிரதேசத்தில் பெற்ற வெற்றி பற்றியும், ஆம் ஆத்மி கட்சி டில்லி பாஜகவின் ஜாம்பவான்களை மண்ணைக் கவ்வ வைத்து அந்த மாநகராட்சியை கைப்பற்றியது குறித்தும் பெரிதாக ஊடகங்களில் பேசப்படாமல் எழுதப்படாமல் பாஜக ஏற்பாடு செய்து கொண்டது.”

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மிகவும்  நெருங்கி வரும் சூழலில் நடந்து முடிந்த  குஜராத், இமாச்சல் மற்றும் டில்லி மாநகராட்சி மன்ற தேர்தல்களின் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. 

பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சொந்தமான தேசிய ஊடகங்களும், ஒன்றிய அரசின் தாழ்வாரத்தில் முறை வாசல் செய்யும் பெரும் ஊடகங்களும், சிபிஅய்-வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வு துறை போன்ற ஒன்றிய அரசின் ஏவல் துறைகளின் விசாரணை வளையத்தின் கண்காணிப்பில் இருக்கும் குற்றப்பின்னணி உள்ள நபர்கள் நடத்தும் ஊடகங்களும் தங்களது எஜமானர்கள் எழுதித் தந்த தலையங்கங்கள், கட்டுரைகள், விவாதங்கள் மூலம் குஜராத்  தேர்தல் முடிவுகளை பாஜக மற்றும் பிரதமர் மோடியின் ஈடு இணை யற்ற வெற்றி என்றும்   இதுதான்  நாடாளுமன்ற தேர்தலிலும் நடக்கும் என்றும் வாய்கிழியப் பேசியும், கைவலிக்க எழுதியும் தங்களது எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாஜகவின் கைவசம் இருந்த இமாச்சலப்பிரதேசம்  மற்றும் டில்லி மாநகராட்சியில் ஆட்சி அதிகாரத்தை  இழந்தது  குறித்தும்,   வரலாற்றில்  இதுவரை  இல்லாத  பல  நெருக்கடிகளுக்கு இடையில் காங்கிரஸ் இமாச்சலப்பிரதேசத்தில் பெற்ற  வெற்றி பற்றியும், ஆம் ஆத்மி கட்சி டில்லி  பாஜகவின் ஜாம்பவான்களை மண்ணைக் கவ்வ வைத்து  அந்த மாநகராட்சியை கைப்பற்றியது குறித்தும்  பெரிதாக ஊடகங்களில் பேசப்படாமல்  எழுதப்படாமல்  பாஜக ஏற்பாடு செய்து  கொண்டது.

இமாச்சலில் பாஜக ஏன் தோற்றது?

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அம்மாநிலம் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலம். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவர் அங்கேயே தங்கி இருந்து அவரது நேரடி மேற்பார்வையிலேயே பாஜக தனது தேர்தல் பணிகளை செய்தது.

 ஒன்றிய அமைச்சரவையின் “சித்தாந்த  புருஷராக” அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும், ஒன்றிய அரசின் விளம்பரத் துறை அமைச்சர் அனுராக் தாகூரின் சொந்த மாநிலம் அது.

வெற்றி பெற்றால் தான்தான் முதலமைச்சர் என்ற  கனவோடு இரவும் பகலும் அவர் அங்கேயே தங்கி  தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். பிரதமர் பலமுறை அம்மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு தனது “டபுள் எஞ்ஜின் ஆட்சி தத்துவத்தின்” அவசியத்தை வலியுறுத்தினார்.

அம்பானி - அதானி போன்ற உலகப் பெரும் பணக்காரர்களின் ஆதரவிலும், “அனாமதேய தேர்தல் பாண்டுகள்” மூலம் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோடிகளின் அரவணைப்பிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின்  விசேஷமான  கண்காணிப்பிலும் நடத்தப்பட்ட  தேர்தலில்  பாஜக  ஏன்  தோற்றது, எப்படி  தோற்றது  என்று  யாரும்   கேட்க விடாமல்  பார்த்துக்கொண்டார்கள். 

இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமான விகிதாச்சாரத்தில் ஹிந்துக்கள் வாழும் மாநிலத்தில் ஹிந்துத்துவா தோற்றது ஏன்? என்ற வினாவையும் யாரும் எழுப்பவில்லை. 

வாக்களிக்க  அனுமதிக்கப்படாத இஸ்லாமியர்

ஹிந்து ராட்டிரத்தின் பட்டத்து இளவரசராக அடையாளம் காணப்பட்டிருக்கும் உ.பி. முதலமைச்சர் ஆதித்தியநாத்தின் தனிப்பட்ட வெற்றியாகக் கொண்டாடப்படும் ராம்பூர் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்திய ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் மிகப் பெரிய எச்சரிக்கை மணி!

எதிர்காலத்தில் பாஜக தேசியத் தேர்தல்களை எப்படி சந்திக்கும் என்பதற்கான முன்னோட்டம். 65 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் அந்த சட்டமன்றத் தொகுதியில் முதன்முறையாக பாஜக வென்றுள்ளது. 

இஸ்லாமியர்கள் என்றாலே பாஜகவுக்கு விரோதமாக இருக்க  வேண்டும் என்பது நமது நிலைப்பாடல்ல. ஆனால், அத்தொகுதியில் இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகள் சராசரி யாக 25 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் சில வாக்குச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

இஸ்லாமிய வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருப்பதற்காக காவல் துறையினரால் மிரட்டப்பட்டனர் என்ற அந்த தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் அமைச்சருமான ஆசிம் கான் அவர்களுடைய குற்றச்சாட்டு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும். 

அதே தொகுதியில் ஹிந்து வாக்காளர்களின் வாக்குகள் 60% பதிவாகியிருப்பது  விநோதமாக  இருக்கிறது. எதிர்காலத்தில் சிறுபான்மையினர் கணிசமாக வாழும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் இப்படிப்பட்ட நடைமுறைகள் தொடரும் என்றால் அதனுடைய விளைவுகள் நமது அரசமைப்பு சட்டத்தின் ஆணிவேரையே அறுத்து விடும். 

குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் இந்த முறை நாம் கவலைப்பட வேண்டிய ஒரு சூழ்நிலையினை பல இடங்களில் பார்க்க முடிந்தது. பல வாக்குச்சாவடிகளில் அச்சமூகத்தின் இளம் தலைமுறையினர் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை.

தேர்தல்களில் வாக்களிப்பதின் மூலம் தங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். பலர் வாக்களிக்க வரவில்லை. 2022 அக்டோபர் மாதம்  3ஆம் தேதி உண்டெலாவில் இருந்து 42 இஸ்லா மிய இளைஞர்களை குஜராத் மாநில சிறப்பு நட வடிக்கைகள் குழு காவல்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

ஒருநாள் முழுவதும் அந்த  இளைஞர்களை காவல் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் காலையில் அவர்களை ஊருக்குள் அழைத்து வந்த காவல்துறையினர், ஊர் மைதானத்தில் அவர்களைக் கட்டிவைத்து லத்தியால் அடித்துத் துன்புறுத்தினர். கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் சுற்றி நின்று கைத்தட்டி இக்காட்சியை ரசித்து பார்த்து காட்சிப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

அடிபட்ட பல இளை ஞர்கள் பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள். சிலர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள். நவ ராத்திரி கொண்டாட்டத்தின் கார்பா நடனத்தின் மீது  கல்லெறிந்தவர்கள் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். சமூக ஊடகங்களில் இந்தக் காட்சிப் பதிவு வைரல் ஆனதால் பல இஸ்லாமிய இளைஞர்கள் அவமானம் பொறுக்காமல் உளரீதியாக பாதிக்கப் பட்டார்கள். இப்பகுதிகளில் இஸ்லாமியர்கள் யாரும் வாக்களிக்கவே வரவில்லை.

காங்கிரஸ்  உறுதியாக இருக்க வேண்டும்

குஜராத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்த நிறுவனங்கள் தரும் மற்றொரு தகவலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஹிந்து வாக்காளர்கள் வாழும் பகுதி களில் ஏழை வாக்காளர்கள் காங்கிரசுக்கு அதிகம் ஆதரவாக வாக்களித்துள்ளனர். வசதியானவர்கள் பாஜக வுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி செல்வாக்கோடு இருந்த சவுராட்டிரா மற்றும் மலைவாழ் மக்கள் மத்தியில் பெருமளவில் காங்கிரஸ் வாக்கு வங்கியில் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. பல  தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே தோற்று விட்டோம் என்ற மன நிலையில் காங்கிரஸ் தொண்டர் கள் இருந்ததாக சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி கவலைப்பட வேண்டிய விஷயம் இது. தங்களது வாக்காளர்கள் யார் என்பதை முதலில் காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டும். அந்த வாக்குகளை அணிதிரட்ட தேவைப்படும் தலைவர்களிடம் கட்சி நிர்வாகம் இருக்கவேண்டும். எல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பது என்ற நிலைப்பாடு தொடர்ந்தால் நாளைக்கு நம்மவர்கள் என்று சொல்வதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்ற நிலை உருவாகும். காங்கிரஸ் பேரியக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளிலும், லட்சியங்களிலும் எவ்வித சமரசமும் எந்த சூழ்நிலையிலும் இல்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்க வேண்டும். தேர்தல் நிலைப்பாட்டுக்காக கொள்கைகளில் சிறு  சமரசங்கள் செய்து கொள்வது நாளடைவில் இயக்கத் தின் அடித்தளத்தை பாதிக்கும். காங்கிரஸ் கட்சி இதனை பரிசீலிக்க வேண்டுகிறேன்.

வாக்காளர்கள் உவந்து அளித்த வெற்றியல்ல!

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி அவர்களைப் பொறுத்தவரையில் பெரும் வெற்றி என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த வெற்றி இயற்கையாக வாக்காளர்கள் உவந்து அளித்த வெற்றி  அல்ல என்பதையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.  அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் பிரதமர், அம்மண்ணின் மைந்தர், தனது அரசின் அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்தி  இரண்டு மாதங்களில் பல நாட்கள் அங்கேயே முகாமிட்டு வீடு வீடாகச் சென்று  வாக்குக் கேட்டதை ஒரு சாதாரண தேர்தல் பிரச்சாரம் என்று ஒதுக்கி விட  முடியாது.

பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பெருந்தொழில்களுக்கான முதலீடுகளை, ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த முதலீட்டாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவைகளை குஜராத்துக்கு மடை மாற்றம் செய்தது, பல மாநிலங்களுக்கு  இழைக்கப் பட்ட அநீதி. இரண்டு மாதங்களில் இரண்டேகால் லட்சம் கோடி முதலீடுகளையும், திட்டங்களையும்  குஜ ராத்துக்கு கொண்டு சென்றதும் அவை அனைத்துக் கும் பிரதமரே கால்கோள் விழாக்களை நடத்தியதும் ஒன்றிய அரசின் செலவில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம்தானே!

பிரதமரின் வசதிக்கேற்ப இவை அனைத்தும் நடந்து முடியும் வரை நமது” நடுநிலை தவறாத” தேர்தல்  ஆணையம் காத்திருந்தது மற்றுமொரு அவலம். பிரதமரும், பாஜகவும் அனைத்து தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் கவனமாக இருந்தது. சிறுகுழந்தை களை தேர்தலில் வாக்கு கேட்க பயன்படுத்தக் கூடாது  என்ற  அடிப்படையான விதியை நமது பிரதமர் பகிரங்கமாக மீறிய போதும் கூட  ஒரு   அதிருப்தி முனகலைக் கூட பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.

பணத்தில்  புரளும் பாஜக

நமது ஜனநாயகம் பணநாயகமாக வேகமாக மாறி வருவதற்கு குஜராத்  சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எடுத்துக் காட்டு. நாம் கற்பனையே  செய்ய  முடியாத நிதிக் குவியலையும், ஆதாரங்களையும், உலகின் மிகப் பெரிய இந்திய பெரும் பணக்காரர்களையும் தங்களது  ஏவலில் வைத்திருக்கும் பாஜகவின் தேர்தல் பிரச்சார தந்திரங்களை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான புதிய வியூகங்களை    மற்ற அரசியல் கட்சிகள் உருவாக்கவில்லை என்றால் வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடுவதே வீண் என்ற நிலை உருவாகும் என நான் அஞ்சுகிறேன்.

வரைமுறையற்ற பணப் புழக்கமும், பாஜகவிடம் மட்டுமே இருக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும், சமூக ஊடகங்களின் பிரச்சாரங்கள் மூலம் எதிரிகளை நிர்மூலமாக்கும் “அரசியல் கொரில்லா தாக்குதல்களை” நடத்துவதற்கு  தேவைப் படும் அயல் நாட்டு அறிவியலும் தேர்தல் களத்தை சமச்சீரற்ற போட்டிக்களமாக மாற்றியுள்ளது. சிபிஅய், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற புல னாய்வு நிறுவனங்கள் எப்போது பாய்வார்கள் என்ற  அச்சம் அனைத்து தரப்பினருக்கும் இருப்பதால்  நல்லெண்ணம் கொண்ட பலரும்   தேர்தல்களத்தி லிருந்து ஒதுங்கியே நிற்க விரும்புவது இந்திய ஜன நாயகத்துக்கு  ஏற்பட்டுள்ள மற்றுமொரு சோதனை!

ஆர்எஸ்எஸ்சின் குழந்தை ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடும், செயல்பாடு களும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆம்  ஆத்மி கட்சி ஆர்எஸ்எஸ் அமைப்பின் குழந்தைகளுள் ஒன்று என்று முதலில் இருந்தே சொல்லி வருகிறோம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது  ஊழல் புகாரை சொல்லி பொதுமக்கள் மத்தியில் பெரும் அவப்பெயரை உருவாக்க ஆர்எஸ்எஸ்ஸால் அமர்த்தப்பட்ட அரசியல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் அழைத்து வந்த நடிகர்களுள் ஒருவர்தான் கெஜ்ரிவால்.

அவரது நடிப்பினை பொதுமக்கள் பெரிதும் ரசித்த தால் ஆர்எஸ்எஸ் அவரை நிரந்தரமாக பணியமர்த்திக் கொண்டது. இதனை பிரசாந்த் பூஷன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மோடி அவர்களது அரசியல் செல்வாக்கு சரியும்  போது அவரிடத்தை நிரப்ப கெஜ்ரிவால் பயன்படு வார் என ஆர்எஸ்எஸ் கருதுகிறது. எந்த சூழ்நிலை யிலும் மோடியின் எதிர்ப்பு வாக்குகள் காங்கிரஸ்  உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளுக்கு போய்விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு இது.

சமயச் சார்பின்மையிலும், சமூக நீதியிலும், மாநில உரிமைகளிலும், எல்லோரையும் உள்ளடக்கிய பொரு ளாதார வளர்ச்சியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலுக் கான அணியினை உருவாக்கும்போது கெஜ்ரிவால், மம்தா போன்றவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எங்கள் கிராமங் களில் சொல்வது போல் “கட்டுச் சோத்துக்குள் பெருச் சாளிகளையும் சேர்த்து வைத்து கட்டுவதைப் போல” நடந்துவிடக் கூடாது.

கெஜ்ரிவால் விஷயத்தில் ஒரு சுவாரசியமான கோணமும் உண்டு. கெஜ்ரிவாலின் வெற்றி குறித்து ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் பிரதமரும், உள் துறை அமைச்சரும் அதை  ரசிக்கவில்லை. பிரதமரின் “குறுக்கு வழி அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல” என்ற கருத்து இதனுடைய எதிரொலியே!

மொத்தத்தில், நடந்து முடிந்த தேர்தல்கள் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை உடனடி யாக துவங்க வேண்டும். தனித்தனியாக செயல்படுவதை தவிர்த்து இப்போதே தேசிய அளவிலும், மாநில அளவிலும் கூட்டு  நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டு நடவடிக்கை குழுக்கள் மாநில அளவிலும் மக்களவை தொகுதிகள் அளவிலும் அமைக்கப்பட வேண்டும்.

வாக்குச்சாவடி அளவில் அனைவரும் இணைந்த  கூட்டுக்குழுக்கள் அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கப்பட்டு வாக்காளர்களை தொடர்பு கொள்ளும் பணியினைச் செய்ய வேண்டும். நம்பிக்கை இழந்து நிற்கின்ற மக்கள் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டால் பாஜகவைத் தோற்கடிக்க முடியும்!

நாம் உழைத்தால் வெற்றி பெறவும் முடியும்!!

நன்றி: 'சமூகநீதி முரசு' - ஜனவரி 2023


No comments:

Post a Comment