சீனாவில் கம்யூனிசப் புரட்சிக்கு முன் கணிக்கப்பட்ட மக்கள் தொகைதான் கிடைக்கின்றது. அதுகூட போதும் சீனாவின் மத நிலைமையைப் படம் பிடித்துக்காட்ட சீனமக்கள் சமூகம், மத அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது. டாவோயிசம் - பவுத்தம் - கம்பூசியிசம் என்பவை இந்த மூன்று பிரிவுகள்.
மத அடிப்படையில் இப்படி சீன மக்களைப் பிரித்தாலும் சீனர்கள் யாரும் மதபக்தியை ஆழமாகப் பெற்றிருக்கவில்லை. பல சீனர்கள் இந்த மூன்று மதங்களிலுமோ அல்லது மூன்றில் இரண்டு மதங்களிலுமோ நடைபெறும் விழாக்கள் சடங்குகளில் தாராளமாகக் கலந்து கொள்வர்.
மதம் என்பது சீனர்களுக்கு வாழ்க்கையின் பெரும் பிரச்சினைகளில் ஒன்று அல்ல. அய்ரோப்பிய அமெரிக்க ஆப்பிரிக்க பிற ஆசிய மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால், சீனர்களுக்கு மதமே இல்லை என்று தான் கூறவேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்கு முன்பே டாவோயிசம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது இம்மதத்துக்கு என்று மக்கள் மத்தியில் நிரந்தர ஆதரவாளர்கள் கிடையாது. டாவோயிசம் என்பதை அப்படியே கடைப்பிடிப்பவர்கள் மதகுருக்களும் பூசாரிகளும் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
கம்யூனிச ஆட்சி ஏற்படுவதற்கு முன் சீனாவில் 2 லட்சத்து 7 ஆயிரம் புத்த விகாரங்கள் இருந்தன. இவற்றில் 7 லட்சத்து 38 ஆயிரம் பிக்குகளும் பிக்குணிகளும் இருந்தனர் என்று கூறுகிறது. இத்தனை தூரம் பரந்து படர்ந்த மதத்தைக் கூட சீனர்கள் ஏதோ ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்ற கண்ணோட்டத்தில் தான் கடைப்பிடித்தனர்.
மேற்கண்ட மூன்று மதங்களைத் தவிர முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் சீனாவில் உள்ளனர். சுமார் அய்ந்து கோடி முஸ்லிம்களும், 30 லட்சம் கத்தோலிக்கர்களும், 6 லட்சம் புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களும் இருந்ததாக ஒரு கணக்கெடுப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்ட போது வாடிகனும் போப்பும் ஜப்பானை ஆதரித்த காரணத்தால், சீனாவில் கத்தோலிக்க நிறுவனங்கள் மடாலயங்கள் நொறுக்கித் தள்ளப்பட்டன. சீனர்களின் மதப்பழக்கம் பற்றி 1939இல் ஒருவர் “International Review” என்ற இதழில் எழுதிய வாசகம்தான் சீனர்களைச் சரியாகக் கணிக்க உதவும் அவர் கூறுகிறார் “சீனர்களின் இனமுறைப்படி அவர்கள் மதமற்ற மனோபாவம் உடையவர்கள். சீனஞானிகள் போதித்த இயற்கை வாதமும், மனிதாபிமானமும், சீன இளைஞர்கள் மத்தியில் நாத்திகக் கருத்துகளையே வளர்த்து வருகிறது”
இதற்குக் காரணமாக அமைந்தது சீனாவில் 1918க்குப் பிறகு பரவிய ‘No god Movement’எனப்படும் ‘கடவுள் இல்லா இயக்கம்’. இந்த இயக்கம் சூடு பிடிக்கப் பிடிக்க கம்யூனிசமும் பரவத் தொடங்கியது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாத்திக இயக்கமே கம்யூனிச இயக்கம் பரவுவதற்கு வழி வகுத்தது.
இந்த நேரத்தில் கம்யூனிசம் பரவாமல் தடுக்க முனைந்தார் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சியாங்கே - ஷேக், இவர் ஒரு கிறிஸ்துவர். தமக்கு ஆபத்து வரும்போதெல்லாம் மதத்துக்கு ஆபத்து என்றும் சொத்துரிமைக்கு ஆபத்தென்றும் ஓலமிடுவார். மதம் என்று ஒரு கிறிஸ்துவ ஆட்சியாளர் அலறுகிறார் என்றால், அமெரிக்கர்களும் பிரிட்டிஷாரும் ஏமாந்து போவது இயல்பு தானே? இதைப் பயன்படுத்திக் கொண்டு தமது ராணுவத்தில் ஊடுருவ முயன்ற கம்யூனிஸ்ட்களையும் தமது நாட்டில் காட்டுத் தீ போல பரவி வந்த கம்யூனிச இயக்கத்தையும் நசுக்க முயன்றார். ஆனால், நல்ல உரமிட்ட நிலத்தில் முளைத்த சீனக் கம்யூனிசப்பயிர் செழித்து வளர்ந்தது.
நாத்திகம் விதையிட்டு வளர்த்த பயிரின் சாகுபடியை மா-சே-துங் நன்றாக அறுவடை செய்து கொண்டார் என்றுதான் சீனத்தின் மதவரலாறு புரிந்தவர்கள் மதிப்பிடுவார்கள்.
No comments:
Post a Comment