மாடா மனிதனா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 17, 2023

மாடா மனிதனா?

'விடுதலை' நாளிதழில் (10.2.2023) வெளியான காதலர் தினத்திற்கு எதிராக கோமாதா காதலா என்ற தலையங்கம் வாசித்தேன். 

மத வெறியில் ஊறித் திளைத்த பாஜகவின் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமலே மத வெறியில் மிதக்கிறது பாஜக ஆட்சி. 

அய்ந்தறிவு உயிரினங்களின் மீது, அதுவும் பசு மாடு   மட்டுமே  பாஜகவின் கண்களுக்கு தெரிகிறது. (நாமும் எருமை மாடுகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்) 

ஆறறிவு உடைய மனிதருக்கு தரவேண்டிய  சம உரிமையின் மீது அக்கறையில்லை.

சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை இவைகள் அனைத்தும் பாஜகவின் எதிர் அடையாளம், பிறகு எப்படி மனிதர்களை மதிக்கும் செயலில் ஈடுபாடு கொள்வார்கள். 

இந்திய கண்டத்திற்கே  தனது பேனா முனையால் - சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியை - தமது குருதியால் நிரப்பி அரசியல்சட்டத்தை மக்களுக்கு தந்த மாமேதை அம்பேத்கர் அவர்கள் விழி மூடிய தினத்தை தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய கூட்டமல்லவா இந்த பார்ப்பனக் கூட்டம். 

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை தேர்ந்தெடுத்து சமூகநீதிக்கெதிராக செயல்பட்டது போல், தற்போது காதலர் தினத்தன்று பசுக்களை தழுவுதல் தினம் கொண்டாப்படவேண்டும் என்று மனித சமுதாயத்திற்கு எதிராக செயலில் ஈடுபாடு காட்டியது பாஜக அரசு. 

தமிழ்நாடு எப்போதுமே விழிப்புணர்வு மாநிலம், பசு மாடுகளை போற்றியும், காளை மாடுகளை சீராட்டியும்  வருகிறது காலம் காலமாக. கிராமத்தில் சிறு குழந்தை கூட பசுவை, காளையை முத்தமிட்டு மகிழ்வது கண்கூடான நிகழ்வு. இதற்கு தனியாக ஒரு நாள் அவசியமா? 

இவைகள் பாஜக வுக்கு தெரியாமல் இல்லை, விலங்குகள் நடமாடும் வீதியில் மனிதர்கள் நடமாட அனுமதி மறுத்த  கூட்டமல்லவா இந்த பார்ப்பனக் கூட்டம். அது தான் மனிதர்களுக்கு எதிராக விலங்கு களின் மீது ஈர்ப்பு அவர்களுக்கு. 

மாக்கள் மீது அக்கறை அவர்களுக்கு, நமக்கு மக்கள் மீது அக்கறை அவ்வளவு தான் வேறுபாடு. 

மானமும் அறிவும்மனிதர்க்கு அழகு என்று அன்றே வழிகாட்டியவர் அறிவாசான் தந்தை பெரியார். மழைபெய்வது பொதுநலம், குடை பிடிப்பது சுயநலம் என்ற அய்யாவின் மொழிக்கேற்ப, 

சுய நலமாக செயலாற்றும் பாஜக அரசை, பொதுநலமாக நாம் செயல்பட்டு சமத்துவம், சமூக நீதி, மனிதநேயம் காப்போம், 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொன் மொழியான  'நம்மை விட்டால் யார் இப்பணியை செய்வது 'என்று எண்ணி களத்தில் செயல்படுவோம். 

காதலர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான், அன்று ஒரு நாள் மட்டும் அல்ல, நீங்கள் தடை செய்வதற்கு. சமத்துவம் போற்றி மனித நேயம் காக்க மதவெறியை வேரோடு சாய்க்க அனு தினமும் போராடுவோம். களப் பணிகளை ஓய்வின்றி செயல்படுத்தி மனிதநேயத்தை போற்றிக் காப்போம். 

- மு. சு. அன்புமணி

மதிச்சியம், மதுரை


No comments:

Post a Comment