விருது என்பது அங்கீகாரம். ஒருவர் ஒரு துறையில் சாதனை படைத்தமைக்காக அவரை கவுரவிக்க வழங்கப்படுவது.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் "பெரியார் தொண்டன்" என்பதே என் தகுதி - பெருமை எனக் கருதுபவர்.
அவரைத் தேடி வந்த விருதுகள் ஏராளம்.
தமிழ்நாடு, டில்லி, மும்பை, மலேசியா, மியான்மர், கனடா, அமெரிக்கா எனப் பல இடங்களிலும் விருது வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது.
31.1.2023 அன்று சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தமிழர் தலைவருக்கு விருது வழங்கும் விழா.
விருது கொடுத்த அமைப்பு, காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை - விருதுக்குரியவரைத் தேர்வு செய்ய அறிவார்ந்த குழு அமைக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களாக சான்றோர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பல கோணங்களில் நுணுகி, ஆய்ந்து விருதாளர்களைத் தேர்வு செய்கின்றனர். வேண்டியவர்களுக்கு விருந்து வழங்கலாம். தகுதியானவர்களுக்கே விருது வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்.
இக்குழுவில் பத்மபூஷன் விருது பெற்ற அய்.ஏ.எஸ். (ஓய்வு) அதிகாரி மூசாரஸா, மேனாள் துணை வேந்தர் வி.வசந்திதேவி, மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பிஷப் தேவசகாயம், காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ஜனாப் எம்.ஜி. தாவூத் மியாகான், அறக்கட்டளையின் தலைவர் முப்தி காஜி, முனைவர் சலாவுத்தீன் முஹம்மது அய்யூப் சாஹிப் முதலியோர் இருக்கின்றனர்.
காயிதே மில்லத் கல்லூரியின் இயக்குநர் முனைவர் அ. ரஃபி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி டி. அரிபரந்தாமன் செறிவான தலைமையுரை வழங்கினார். விருதாளர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும், மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் 'தி வயர்' நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அவர்களையும் துல்லியமாக அறிமுகம் செய்தார். சித்தார்த் வரத ராஜன் அவர்களைப் போராளி என வர்ணித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இதயத்தி லிருந்து சொற்கள் பிரவாகமெடுத்தன.
ஆசிரியர் கி.வீரமணி, பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்றார்.
"சமூகநீதியும், பெண் விடுதலையும் அவர்தம் கண்கள்" என்று குறிப்பிட்டார்.
"நீட்" தேர்வு ஒழிப்பிற்காக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 21 நாள்கள் பிரச்சாரம் செய்தார். சமூகநீதிக்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய இருக்கிறார்.
90 வயதுக்குச் சொந்தக்காரர். 80 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருப்பவர் - என்றெல்லாம் உணர்ச்சி பொங்க விவரித்த நீதியரசர் அரிபரந் தாமன், கி.வீரமணி சமூகநீதிக்கு ஆற்றிய பணி களைச் சட்ட நுணுக்கங்களுடன் எடுத்துரைத்த போது, மாணவர்கள் குழுமியிருந்த சபை அமைதி யாக, வியப்போடு உற்றுக் கேட்டு மகிழ்ந்தது. கல்வியில், வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு - தமிழ்நாட்டில் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்த நீதியரசர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்த பெருமை ஆசிரியரையே சாரும் என்றுரைத்தபோது அரங்கில் கரவொலி நிறைந்தது. 1994ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 76 ஆவது திருத்தத்தின் மூலம் பாதுகாப்பைப் பலப்படுத்தியவர் ஆசிரியர் கி.வீரமணி என்றார்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முறையை அ.தி.மு.க. அரசு கொண்டு வர முயற்சித்தபோது தமிழர் தலைவரின் எதிர்ப்பினாலேயே அது வராமல் நின்று போனது. சமூகநீதிக்காக இறுதி மூச்சுவரை போராடக் கூடியவர் ஆசிரியர் அவர்கள் என்று வரலாற்றை பாடம் சொல்லுவதுபோல் உணர்த்தினார் நீதியரசர்.
அரசியல் சட்டத்தில் பல அதிகாரங்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருப்பதை வேதனை யுடன் பட்டியலிட்டு தலைமையுரையை நிறைவு செய்தார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஜனாப் எம்.ஜி. தாவூத் மியாகான் வாழ்த்துரையாக சுருக்கமாக சில வார்த்தைகள் சொன்னார்கள். காயிதே மில்லத் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடந்த திறத்தை எடுத்துரைத்தார். தேர்தல்களில் அவருடைய அணுகுமுறையை எடுத்துரைத்தபோது கூட்டம் வியந்தது. பாசிசக் கூட்டத்தைத் துணிவுடன் எதிர்க்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கூறிய தாவூத் மியாகான் அதற்குக் காரணம் தந்தை பெரியாரும் அவருடைய வழியிலிருந்து இம்மியும் வழுவாது நடைபோடும் வீரமணியுமே காரணம் என்று பெருமை பொங்க அறிவித்தார். பின்னர் பொன் னாடை அணிவித்து விருதினை வழங்கி மகிழ்ந்தார்.
மேற்கு வங்க மாநில மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் நறுக்குத் தெறித்தாற்போல் கருத்துகளை வெளியிட்டார். 'வயர்' ஷாக் அடிப்பது குறித்து தொடக்கத்திலே எடுத்துரைத்து கரவொலியைப் பெற்றார். ஜன நாயகம் என்பது பெரும்பான்மையோர் ஆள்வது அல்ல; சிறுபான்மையோரைக் காப்பது என்று விளக்கம் நல்கினார். அரசியல் விடுதலை கிடைத்து விட்டது; ஆனால் சமூக விடுதலை எப்போது கிடைக்கும்? என்று பெரியார், அம்பேத்கர் எழுப்பிய வினாவை நினைவு கூர்ந்தார்.
ஆசிரியர் கி. வீரமணி அய்.ஏ.எஸ். அதிகாரியாக, முதலமைச்சராக வந்திருக்க முடியும். ஆனால் பெரியாருடன் இறுதிவரை பயணித்தவர். அதற்குப் பின்னாலும் அய்யாவின் வழியை அடையாளப் படுத்துபவர்; அவரைப் பின்பற்றுவோர்கள் ஏராளம் என்று கூறியவர், வீரமணி ஒரு வாழும் காவியம் என்று முத்தாய்ப்பாய் முடித்தார்.
பணி நிறைவு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தேர் வாழ்த்துரைக்குப்பின் சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் சாதிக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழர் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றபோது சிறந்த பேச்சாளராக வலம் வந்ததை பசுமையுடன் நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.
காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளர் ஜனாப் எம்.ஜி. தாவூத் மியாகான் அவர்களுக்கும் தாம் விருது பெறும் அதே நாளில் விருது பெறும் சக பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் அவர்களுக்கும் கண்கவரும் பொன்னாடையைச் சூட்டி மகிழ்ந்தார் ஆசிரியர். அவையினர் மதிப்பில் இமயமாய் உயர்ந்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரையில், "வரலாறு மிளிர்ந்தது; நன்றி உணர்வு வெளிப்பட்டது; காயிதே மில்லத்துக்குப் புகழாரங்கள் சூட்டப்பட்டன. இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு விழிப்புணர்வு தந்தது; பொதுவாழ்வில் இது வித்தியாசமான நிகழ்ச்சி" என்றார். "இதை தனக்குக் கிடைத்த விருதாகக் கருதவில்லை; தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த விருதாகக் கருதுகிறேன்" என்றார்.
தொடக்கக் காலத்தில் பெரியார்மீது கல் வீசி யதையும், கையில் கிடைத்த பொருள்களை யெல்லாம் எடுத்து வீசியதையும், 1944 ஆம் ஆண்டு கடலூர் கூட்டத்தை முடித்து ரிக்ஷாவில் திரும்பும் போது செருப்பு வீசப்பட்டதையும் எடுத்துரைத்து, "எங்கள் பயணம் எதிர்ப்புகளுக் கிடையேயான பயணம். இந்த விருது வழங்கும் விழா பாலைவனப் பயணத்தின்போது தென்படு கின்ற நீர்ச்சுனைப் போன்றது" என்ற அருமையான உவமையின் மூலம் விளக்கினார்.
"எங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார்.
அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த காயிதே மில்லத் தமிழ்மொழிக்காகக் குரல் எழுப்பியதை விரிவாகக் கூறினார்.
காயிதே மில்லத் மறைந்தபோது, தந்தை பெரியாருடன் வந்து மலர் வளையம் வைத்த செய்தியைப் பகிர்ந்தபோது நெஞ்சம் கனத்துப் போனது. அன்றைக்குக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் 15 நிமிடங்கள் காயிதே மில்லத் அவர்களின் அருங்குணங்களைப் பட்டியலிட்டதையும், 'விடுதலை' இதழில் தாம் எழுதிய தலையங்கத்தைக் குறிப்பிட்ட போதும் கூட்டம் உணர்ச்சிமயமாய் காணப்பட்டது. இன் றைக்கு எல்லோராலும் போற்றப்படுகின்ற "திராவிட மாடல்'க்கு - திருப்பத்திற்கு அடித்தளமிட்டவர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர் என்றார்.
காயிதே மில்லத் கல்லூரியில் சமூகநீதி நிலவுவதை புள்ளி விவரம் மூலம் எடுத்துரைத்தார். இஸ்லாமியர்களால் நடத்தப்படுகின்ற கல்லூரியே தவிர, இஸ்லாமியர்களுக்காக மட்டும் நடத்தப்படும் கல்லூரி அல்ல என்பதற்கு மாணவர்களின் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டினார்.
எம்.ஜி.ஆர். தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது ளிசி என்பதற்கு ளிஜீமீஸீ சிஷீனீஜீவீtவீtவீஷீஸீ என்பதற்குப் பதிலாக ளிtலீமீக்ஷீ சிஷீனீனீuஸீவீtஹ் என்று குறிப்பிட்டபோது, வழக்கு தொடர்ந்ததையும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசியதையும் குறிப்பிட்டு, நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதுடன் ரூபாய் இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரம் தொகை வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் அவர்கள் வழக்கப்படி தொகையினை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போவதில்லை. பெரியார் உலகத் திற்கு அளிக்கிறேன் என்று விழா மேடையில் அறிவித்தார்.
தமிழர் தலைவருக்கு இவ்விருது புள்ளிமான் உடலில் மற்றுமொரு புள்ளி ஆகும்.
No comments:
Post a Comment