விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை
‘‘பெரியார் உலகத்திற்கு’’ அளிக்கிறேன்!
எதைக் கொடுத்தாலும் - அதை எங்களுடைய வீட்டிற்கோ,
குடும்பத்திற்கோ எடுத்துச் செல்லும் பழக்கம் கிடையாது!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரை
சென்னை, பிப்.1 நீங்கள் இரண்டரை லட்ச ரூபாய் வரைவோலையை விருதுத் தொகையாகக் கொடுத் திருக்கிறீர்கள்; எதைக் கொடுத்தாலும், அதை எங்களு டைய வீட்டிற்கோ அல்லது குடும்பத்திற்கோ எடுத்துச் செல்லுகின்ற பழக்கம் என்றைக்கும் கிடையாது எங் களுக்கு; இந்தத் தொகையினை திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் ‘‘பெரியார் உலகத்திற்கு’’ அளிக்கி றேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அரசியல் மற்றும்
பொது வாழ்வில் நேர்மைக்கான
காயிதே மில்லத் விருது வழங்கும் விழா
நேற்று (31.1.2023) முற்பகல் சென்னை மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியில் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக் கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
எப்பொழுதும் சாதிக்க அஞ்சாத சாதிக்
நிலைத்த துணைவேந்தர் என்கிற பெருமையை நிகழ்த்தியிருக்கிற எப்பொழுதும் சாதிக்க அஞ்சாத சாதிக் அவர்களே,
அதுபோலவே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய அருமை ஜனாப் மகம்மது இஸ்மாயில் அவர்களே,
அதுபோலவே, உறுதிமொழி ஏற்கக் கூடிய ஜனாப் எம்.எச்.பி.காதுலின் அவர்களே,
மற்றும் இந்த அரங்கத்தில் நம் அனைவரையும் வரவேற்ற இயக்குநர் டாக்டர் ஏ.ரஃபி அவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய பொதுவாழ்க்கையில்
சற்று வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், நான் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு நின்றாலும்கூட, இது என்னு டைய பொதுவாழ்க்கையில் சற்று வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாகும்.
ஏனென்றால், எத்தனையோ விழாக்கள் - எத்த னையோ நிகழ்வுகளில் இதுவரை கலந்துகொண்டிருந் தாலும்கூட, எங்களைப் போன்ற பெரியார் தொண் டர்களைப் பாராட்டுகின்ற நிகழ்ச்சியாக - வாழ்த்துகின்ற நிகழ்ச்சியாக இது உள்ளது.
நண்பர்களே, இதுவரையில் விருதுகள் என்று சொன்னால், அவை எங்களை நோக்கி வருவதில்லை. காரணம், விழுந்தவைகள் விருதுகளாக இல்லை; விழுந்தவை கற்களாக இருந்திருக்கின்றன.
‘‘பெரியாரின் மாணவர்’’ என்ற தகுதியால் நீங்கள் என்னை அடையாளம் கண்டிருக்கிறீர்கள்
இன்னுங்கேட்டால், எனக்கு இந்தத் தகுதி இருக்கிறது என்று நினைக்கவில்லை. ‘‘பெரியாரின் மாணவர்’’ என்ற தகுதியால் நீங்கள் என்னை அடையாளம் கண்டிருக்கிறீர்கள்; எனவே, இந்தப் பெருமையெல்லாம் என்னுடைய அறிவாசான் தந்தை பெரியாரை சார்ந்ததாகும்.
காரணம், பெரியாருக்கே மலர் மாலைகள் விழுந் ததைவிட, அதிகமாக மலைப் பிஞ்சுகள்தான் விழுந் திருக்கின்றன; கற்கள்தான் விழுந்திருக்கின்றன. இன் னுங்கேட்டால், எதை எதையெல்லாம் தொடக்கூடாதோ, அதையெல்லாம் எடுத்து தந்தை பெரியார்மீது வீசியிருக்கிறபொழுதுகூட, அவர் தன்னுடைய பேச்சை நிறுத்தவில்லை - மூச்சை நிறுத்துகின்ற வரையில்.
அப்படி தந்தை பெரியார் அவர்கள் பேசிக்கொண்டே போனார்கள்.
எங்கள் ஊர் கடலூர். அங்கே 1946 ஆம் ஆண்டு பெரியாரை ஊர்வலமாக அழைத்து வருகிறோம். அவர்மீது செருப்பைத் தூக்கிப் போடுகிறார்கள்; அந்தச் செருப்பு அவர்மீது வந்து விழுகிறது; அது எங்களுக்குத் தெரியவில்லை; காரணம், இருட்டாக இருந்த தெருவில் ரிக்ஷாவில் அவர் அழைத்து வரப்படுகிறார். ஏனென் றால், மழை பெய்து, மின்சாரம் இல்லை அப்பொழுது. இருட்டில் அவர் வந்தபொழுது, அவர்மீது ஒரு செருப்பு விழுந்தவுடன், கொஞ்சதூரம் வந்ததும், ரிக்ஷாவை திருப்பச் சொல்லி, மறுபடியும் அங்கே வந்தார். பிறகுதான் அதனுடைய காரணத்தைச் சொன்னார்.
‘‘ஒரு செருப்பை வீசியவர் கையில் இன்னொரு செருப்பை வைத்துக்கொண்டு அவதிப்படக் கூடாது என்பதற்காகத்தான், திரும்பிப் போனேன்; நான் நினைத்த மாதிரியே அந்த செருப்பையும் வீசினார்கள். இப்போது இரண்டு செருப்பும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது'' என்று சொன்னார்கள்.
எங்களைத் தட்டிக் கொடுப்பதற்காக
விருது அளித்திருக்கிறீர்கள்!
அப்படிப்பட்ட எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்துக் கொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரு பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கின்றபொழுது, அங்கே ஒரு நீர்ச் சுனையைக் காட்டுவதுபோன்று, எங்களைத் தட்டிக் கொடுப்பதற்கு, நம்முடைய தாவூத் மியாகான் சாயப் அவர்களுடைய தலைமையில், நம்முடைய அருமை நிர்வாகத்தினர் அத்துணை பேரும் இந்தக் கல்லூரியின் சார்பாக விருது அளித்திருக்கிறீர்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும், எங்களுடைய நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் எந்த நம்பிக்கையை வைத்திருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கையை நியாயப்படுத்துவோம் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் அவர்களும், காயிதே மில்லத் அவர்களும் எப்பேர்ப்பட்ட உணர்வுபடைத்தவர்கள் என்ற ஒரு செய்தியை இந்த நேரத்தில் சொல்லவேண்டும்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு தடம் பதித்தவர்!
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பெயராலே எனக்கு விருது என்பது இருக்கிறதே - அதை ஒரு சாதாரணமான செய்தியாக நான் கருதவில்லை.
விருதுகள் எத்தனையோ வரலாம்; ஆனால், கண் ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்றால், இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு தடம் பதித்தவர்.
அதற்கு ஆதாரம், இந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்படுவதற்கு முன்னால், அரசியல் நிர்ணய சபை யில் அவர்கள் இருந்த சமயத்தில், இந்தியாவினுடைய ஆட்சி மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் என இந்தப் பிரச்சினைகள் வந்த நேரத்தில், இந்தியாவில் இப் பொழுது எட்டாவது அட்டவணையில் முன்பு 14 மொழி கள் இருந்தன; இப்பொழுது 22 மொழிகள் உள்ளன.
இவையெல்லாம் இருந்தாலும்கூட, அன்றைய கால கட்டத்தில் ஹிந்தியைத் திணிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
இப்பொழுதும்கூட அதிலே இருக்கக்கூடிய ஒரு சொல்லில் பார்த்தீர்களேயானால், வித்தியாசமான ஒரு சொல்லைத்தான் அரசமைப்புச் சட்டத்தில் வைத் திருக்கிறார்கள்.
Hindi is an Official Language என்று இருக்கிறது.
அதனுடைய அதிகாரப்பூர்வமான ஆட்சி மொழி - தமிழ் விரும்புகிற வரையில் இருக்கலாம் என்று சொன்னாலும்கூட, அப்பொழுது விவாதம் செய்து எதிர்ப்புக் காட்டினர் நம்முடைய மாணவச் செல்வங்கள்.
கண்ணியத்திற்குரிய
பெரிய மாமனிதருடைய சொற்கள்!
ஏனென்றால், மொழிப் பிரச்சினை இன்னமும் தீராப் பிரச்சினையாக, போராட்டக் களத்திற்குரிய பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், முன் உணர்வோடு, காயிதே மில்லத் அவர்கள், இஸ்மாயில் சாகேப் அவர்கள் கண்ணியத்திற்குரிய முறை யில், அந்த விவாதத்தை அறிவுப்பூர்வமாக நடத்திய நேரத்தில், அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் -
‘‘நீங்கள் சிறந்த மொழியைத்தான் ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்றால், வளம் மிகுந்த மொழியைத் தான் நீங்கள் ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்றால், என்னுடைய தாய்மொழி தமிழ் மொழி இருக் கிறதே, அந்தத் தமிழை ஆக்குங்கள்’’ என்று இப்பொழுது அல்ல நண்பர்களே, இந்த அரசமைப்புச் சட்டம் உரு வாவதற்கு முன்பாக சொன்ன பெருமை - இந்தியா விலேயே யாருக்காவது உண்டு என்றால், இந்த நிறுவனம் யார் பெயரில் இருக்கிறதோ, அந்தக் கண்ணியத்திற்குரிய பெரிய மாமனிதருக்கு உரியதாகும்.
அவருடைய சிறப்பு - அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், அவரோடு நான் அருகில் இருந் தவன், அதன்படி சில செய்திகள் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டும்.
காயிதே மில்லத் அவர்கள் மறைந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு துடித்தார்கள் என்பது எங்களுக்கெல்லாம் தெரியும்.
கண்ணீரோடு தந்தை பெரியார் சொன்னார்
திரு.ஜே.எம்.ஷாலி அவர்கள் ‘‘காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு'' என்ற தலைப்பில் எழுதிய புத்தகத் தில் அதை பதிவு செய்திருக்கிறார்.
‘‘எங்களைப் போன்றவர்கள் வாழ்கிறோமே, காயிதே மில்லத் கண்ணியத்திற்குரியவர் மறைந்துவிட்டாரே'' என்று கண்ணீரோடு தந்தை பெரியார் சொன்னது, அருகில் இருந்த தொண்டன் என்ற முறையில் எனக்குத் தெரியும்.
அன்றைக்கு மாலை, இதே சென்னை கடற்கரையில், ஒரு பெரிய முக்கியப் பிரச்சினைக்காக, ஒரு போராட்டத்திற்கு முழு வடிவமாக பெரியார் பேசுவார் என்று விளம்பரப்படுத்தி, மக்கள் எல்லாம் தயாராக இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில்தான் இஸ்மாயில் சாகேப் அவர்கள் மறைந்தார். அவர்கள் தங்கியிருந்த குரோம்பேட்டை பகுதியில் அவருடைய உடலை வைத்திருந்தார்கள்.
எங்கே இருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டு, அவருக்கு இறுதி வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, நாங்கள் வேனில் திரும்பிக் கொண்டிருந்தோம்.
வேனில், தந்தை பெரியார் மிகவும் அமைதியாக இருந்தார். சரி, யாராவது ஒருவர் பேசவேண்டும் என்பதற்காக, பெரியாரிடம், ‘‘அய்யா, இவ்வளவு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்; அந்தக் கூட் டத்தை ஒத்தி வைத்துவிடலாமா?'' என்றேன்.
‘‘இரங்கல் நிகழ்ச்சியாக 'புகழஞ்சலி' செலுத்தவேண்டும்’’ என்றார்
கொஞ்சநேரம் அமைதியாக இருந்துவிட்டு, தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார், ‘‘ஒத்தி வைக்க வேண்டாம்; நடத்துவோம்; காரணம் என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், காயிதே மில்லத் அவர்களுடைய சிறப்பு என்னவென்பதை இது முதல் நிகழ்ச்சியாக இரங்கல் நிகழ்ச்சியாக ‘புகழஞ்சலி’ செலுத்தவேண்டும்’’ என்று சொன்னார்.
அதுபோலவே, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, 15 நிமிடம் தந்தை பெரியார் அவர்கள் பேசினார்.
அதுபோலவே நண்பர்களே, அந்தப் புத்தகத்தில் இன்னொன்றையும் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமானால், காயிதே மில்லத் மறைந்த நேரத்தில், எந்தெந்த ஏடுகள், என்னென்ன எழுதின என்பதை தெளிவாக அந்நூல் எடுத்துச் சொல்லியிருக்கிறது.
‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், காயிதே மில்லத் என்று பெரும் மதிப்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படுபவரும், தந்தை பெரியார் அவர்களிடத் தில் மிகுந்த மதிப்பும், மரியாதை கொண்டவரும், முஸ்லிம் இன மக்களின் தனிப்பெரும் தலைவருமான ஜனாப் இஸ்மாயில் சாகேப் அவர்கள் காலமான செய்தி அறிய, மிகவும் வேதனையும், தாங்கொணாத வருத்தமும், அதிர்ச்சியும் அடைகிறோம்.
பண்பட்ட தலைவர் காயிதே மில்லத்
காயிதே மில்லத் அவர்கள் அடக்கமும், எளிமையும் நிறைந்த ஒரு சீரிய தலைவர் ஆவார். பொதுவாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு உள்ள தலைவராக இருந்தபோதிலும், எவரையும் மதித்துப் பழகுபவராகவும், கொண்ட கொள்கை யில் உறுதியுடனும், நிதானத்துடனும், நீதிப் போக்குடனும், எதனையும் முடிவு செய்யும் பண்பட்ட தலைவராகவும் இருந்தார்.
காங்கிரஸ் என்ற அவர் இருந்த அமைப்பு எப்படி இருந்தாலும், அவர் பேரறிஞர் அண்ணாவோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி, அதில் வெற்றி பெற்றது ஒரு வரலாற்று சிறப்புக்குரிய சாதனையாகும்.
பண்புமிக்க ஒரு நல்ல
அரசியல் தலைவரை நாடு இழந்தது
அவருடைய இழப்பு என்று சொல்வது, ஈடு செய்ய முடியாத இழப்பு. முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதற்கும், ஏன் இந்தியா முழுவதற்கு மானது. தி.மு.க.வுடன் முஸ்லிம் லீக் உறவு முறியுமோ என்று அச்சம் நிலவிய நேரத்திலும், அவர் காட்டிய பக்குவப் போக்கு, அந்தப் பாலத்தை பலமுள்ளதாக ஆக்கியது. பண்புமிக்க ஒரு நல்ல அரசியல் தலைவரை நாடு இழந்தது’’ என்று சொன்னோம்.
இது ‘விடுதலை'யில் வெளிவந்தது. ஒவ்வொரு ஏட்டி லும் வந்ததை தொகுத்து நூலாக திரு.ஜே.எம்.ஷாலி எழுதியிருக்கிறார்.
அதை எழுதியவனுக்குத்தான், அவர் பெயரால் இன்றைக்கு விருது கிடைத்திருக்கிறது என்பது - இப்படி 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், வரலாற்றின் விசித்திரங்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும் என்பதால்தான் இதைக் குறிப்பிட்டேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு திருப்பத்திற்கு அடித்தளமிட்டவர் காயிதே மில்லத்
இன்றைக்குத் ‘திராவிட மாடல்’, ‘திராவிட மாடல்’ என்று நம் ஆட்சியை சொல்வதில் ஒரு திருப்பம் ஏற்பட்டது அல்லவா! 50 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தத் திருப்பத்திற்கு ஒரு அடித்தளமிட்டவர் காயிதே மில்லத் அவர்கள் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அவ்வளவு பெரிய வரலாற்றை உள்ளடக்கியவர்.
அருமையான குழுவினர்
அவருக்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள்
அருமை நண்பர்களே, அடுத்தபடியாக, சமூக நீதியைப்பற்றி சொன்னார்கள்.
சமூகநீதி என்று சொல்லும்பொழுது, இந்த அறக்கட்ட ளையின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய தாவூத் மியாகான் அவர்கள் மூன்றாவது தலைமுறை. அவர் எப்படியெல்லாம் இந்த அறக்கட்டளையை சிறப்பாக நடத்துகிறார்கள்; ஓர் அருமையான குழுவினர் அவ ருக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அய்யா காஜி போன்றவர்கள்; தமிழ்நாட்டின் தலைமைக் காஜியார் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
சமூகநீதிக்கு இது ஓர்
எடுத்துக்காட்டான கல்லூரி
இப்படி எல்லா நிலையிலும் ஒரு நல்லிணக்கத் தோடு இருக்கக் கூடிய இந்தக் கல்லூரி நடக்கிறது என்று சொன்னால், சமூகநீதிக்கு இது ஓர் எடுத்துக்காட்டான கல்லூரி என்பதை முதலில் நான் மகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இங்கே எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு வருகின்றபொழுது, மாணவர்கள் எண்ணிக்கையைவிட, மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது என்பதைப் பார்க்கின்றபொழுது, அதுவே சமூகநீதி யினுடைய வெற்றி அதிலேயே புரிந்துவிட்டது.
நீங்கள் சமூகநீதிக்காக மட்டும் பாடுபடவில்லை; பாலியல் கலந்த சமூகநீதி என்பதுதான் மிகவும் முக்கிய மானது.
அதை ஆழமாக எடுத்துச் சொன்னீர்கள்.
இன்னமும் பார்த்தீர்களேயானால், இங்கே படிக்கின்ற மாணவர்களிடம் கேட்டேன், மாணவிகளுடைய எண் ணிக்கை 60 சதவிகிதத்திற்குமேல். மாணவர்கள் இங்கே மைனாரிட்டி.
காயிதே மில்லத் கல்லூரிக்கு
ஒரு தனிச்சிறப்பு உண்டு
இந்தக் கல்லூரிக்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், எல்லா இடங்களிலும் ஆணாதிக்கம் இருக்கும்; ஆதிக்க மற்ற ஒரு சமுதாயத்திற்கு, சமுகநீதிக்கு சாட்சியாக - இங்கே வருகிறபொழுது மாணவிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு வாங்குவதற்கே 10 பிரதமர்கள் மாறிவிட்டார்கள்; இன்னமும் அந்த சட்டம் ஊறுகாய் ஜாடியிலேயே ஊறிக் கொண்டிருக்கிறது. வரவே இல்லை.
வெறும் இஸ்லாமியர்களுக்காக நடத்தப்படுகின்ற கல்லூரியாக நீங்கள் நடத்தவில்லை
அதுமட்டுமல்ல நண்பர்களே, 35 சதவிகிதம் மாண வர்கள். அதில் இஸ்லாமியர்கள் எத்தனை பேர் இருக் கிறார்கள் என்றால், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இது இஸ்லாமிய அமைப்பால் நடத்தப்படுகிற கல்லூரியே தவிர, வெறும் இஸ்லாமியர் களுக்காக நடத்தப்படுகின்ற கல்லூரியாக நீங்கள் நடத்தவில்லை என்பது இருக்கிறதே, இதுதான் ஓர் எடுத்துக்காட்டு.
வேறு சில கல்லூரிகளும் இருக்கின்றன. அந்தக் கல்லூரிகளில், அவர்களைத் தவிர வேறு எவரையும் உள்ளே விடமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உண்டு. அந்தக் கதவு தட்டித் திறக்கப்படவேண்டும்.
69 சதவிகிதத்தைப்பற்றியெல்லாம் சொன்னார்கள். அதற்கு இன்னமும்கூட ஆட்சேபணையாக சொன்ன பொழுது என்ன சொல்கிறார்கள்; இங்கே எங்களை உற்சாகப்படுத்துவதற்காகச் சொன்னீர்கள்; அய்யா பாலச்சந்திரன் அவர்களும் சொன்னார்கள்; நம்முடைய தலைவர் ஜஸ்டீஸ் அரிபரந்தாமன் அவர்களும் சொன்னார்கள்.
69 சதவிகித இட ஒதுக்கீடு வரக்கூடாது என்றனர் - ஏனென்றால், தகுதி போய்விடும்; திறமை போய்விடும் என்றார்கள்.
இங்கே பார்த்தீர்களேயானால், Merit and Efficiency -யை அவர்கள் ஒன்றும் தியாகம் செய்துவிட்டு கூப்பிடவில்லை.
அதுபோன்றே நம்முடைய நண்பர் சாதிக் அவர்கள் ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள்.
B.C. என்றால் Backward Class
S.C., S.T., என்று சொன்னால், Scheduled Caste, Scheduled Tribes என்பதுதான்.
O.C. . என்றால் Open competition என்பதுதான்.
ஆனால், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, ஓர் அமைச்சர், பல்கலைக் கழகத்திற்காக விளம்பரம் கொடுத்தபொழுது, O.C. என்றால் Other Communities என்று கொடுத்தார்.
Other Communities என்றால், இவர்களைத் தவிர மொத்தமும் முழுவதும் மற்றவர்களுக்குத்தான் வரும் என்று அர்த்தம்.
Open Competition என்பது மெரிட் அடிப்படையில் எல்லோரும் கலந்துகொள்ளலாம்; எந்த ஜாதியாராக இருந்தாலும், ஜாதி வேறுபாடில்லாமல் கலந்துகொள் ளலாம், திறமையின் அடிப்படையில் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்தவுடன், உயர்நீதிமன்றத்தில் போராடியது மட்டுமல்ல - உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குப் போட்டவுடன், அன்றைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், தொலைப்பேசியில் என்னை அழைத்துப் பேசினார்.
‘‘அரசாங்கத்தின்மீது வழக்குப் போட்டிருக்கிறீர்களே, என்ன விவரம்?’’ என்று கேட்டார்.
அதற்கான விளக்கத்தை நான் சொன்னவுடன்,
‘‘ஓகோ, அப்படியா! நான் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஹண்டே அவர்களிடம் கேட்கிறேன்’’ என்று சொன்னார்.
தவறு நடந்துவிட்டது - அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
அவரிடம் விளக்கம் கேட்டுவிட்டு, மறுபடியும் தொலைப்பேசியில் அழைத்து, ‘‘தவறு நடந்து விட்டது; நீங்கள் அந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள்; உடனே நான் திருத்திவிடுகிறேன்; அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்'' என்று சொன்னார்.
சிலர் அதை டைபோகிராஃபிக்கல் எரர் என்று சொன்னார்கள்.
டைப் செய்யும்பொழுது O.C என்பதை Other Communities என்று தவறாக டைப் செய்துவிட்டார் களாம். எங்கேயாவது ஓரிடத்தில் மாறினால், அது டைபோகிராஃபிக்கல் எரர் என்று சொல்லலாம்.
சமூகநீதியைக் காப்பதற்காக எப்பொழுதும் விழிப்போடு இருக்கவேண்டும்!
ஆக, இப்படி வாழ்நாள் முழுவதும் எதிர்த்துக் கொண்டே இருக்கக் கூடிய அளவிற்கு உள்ளதை காப்பாற்றுவதற்கு விழிப்போடு இருப்பது என்பதுதான் Eternal Vigilance is the price for our Liberty என்பது. சமூகநீதியைக் காப்பதற்காக எப்பொழுதும் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.
சமூகநீதி என்கிற தத்துவத்திற்கு உண்மையான பொருள் என்னவென்று சொன்னால், எல்லோரும் படிக்கவேண்டும்; படித்தவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும்.
இந்த அரங்கத்தை நான் நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். யாருமே நிற்கவில்லை; ஆட்கள் வரவர நாற்காலிகளைப் போட்டுக் கொண்டே இருந் தார்கள். எல்லோருக்கும் நாற்காலி என்று சொல்லும் பொழுது, யாருக்குமே பிரச்சினை இல்லை.
ஆனால், இருப்பது குறைவாகத்தான் இருக்கிறது; அதை எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால், சமைத்தது குறைவு; வந்த விருந்தினர்கள் அதிகம் என்று சொன்னால், என்ன செய்வோம்?
கவுரவமானவர்களை முன்னால் அமர வைப்பது என்பது ஒரு மரபு. அதைவிட்டுவிடுங்கள்.
பசியேப்பக்காரர்களை முன்னால்
உட்கார வைத்து; புளியேப்பக்காரர்கள் பின்னால் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்!
குறைவாக இடம் இருக்கின்றது; தேவை அதிகமாக இருக்கிறது. யாருக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சொன்னால், பசியேப்பக்காரர்களை முன்னால் உட்கார வைத்து; புளியேப்பக்காரர்கள் பின்னால் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்; உடலுக்கும் நல்லது, அஜீரணமாகாமல் இருக்கும்.
ஆனால், நம்முடைய நாட்டில் இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால், பசியேப்பக்காரர்கள் வெளியே நின்றவர்கள், நின்று கொண்டே இருக்கிறார்கள். புளியேப்பக்காரர்கள், வேகமாக இடித்துத் தள்ளிவிட்டு, உள்ளே உட்கார்ந்திருக்கிறார்கள்.
சமூகநீதிப் போராட்டம் என்பது
தேவைப்படக் கூடிய ஒன்று
எனவேதான், இன்னமும் சமூகநீதிப் போராட் டம் என்பது தேவைப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அதற்கு நீங்கள் தந்திருக்கின்ற உற்சாகம்; நீங்கள் காட்டிய அன்பு; நீங்கள் காட்டிய பரிவு இவை அத்தனையும் நிச்சயமாகப் பயன் படுத்தப்படும். எல்லா வகையிலும், காயிதே மில்லத் அவர்களுடைய புகழைப் பரப்பவும், அவருடைய மனிதநேயத்தை, மாண்பை பொது வாக வளர்க்கவேண்டியது அவசியமாகும்.
இந்த விருது, எனக்கும், நம்முடைய சித்தார்த் வரதராசன் அவர்களுக்கும்.
வரதராஜன் சித்தார்த் என்பவராக மட்டுமே இருந்தால், வயர்மேலே படையெடுப்புகள் நடக்காது; வழக்குகள் எல்லாம் வயர் மேலே பாயாது; அடக்கு முறைகள் எல்லாம் பாயாது.
வரதராஜன் சித்தார்த், கொஞ்சம் புத்தராக மாறினார். புத்தியைப் பயன்படுத்தி, உண்மையைத் தெரிந்து கொள் ளுங்கள் என்று எழுதினார்; உண்மை வெளிச்சத்திற்கு வரக்கூடாது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் இந்த ஆயுதத்தை எடுக்கிறார்கள். அவர் களுக்குச் சொல்கிறோம், எங்கோ டில்லியில் இருந்து கொண்டு, வயர் எழுதுகிறார்; எனவே, அவரை மிரட்டலாம்; அவர்மீது அடக்குமுறையை ஏவலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஜனநாயக சக்திகள் ஒன்று திரளும்;
அதற்குத் தமிழ்நாடும் துணையாக இருக்கும்
இந்தியா முழுவதும் அவர் பின்னால் இருக்கக் கூடிய அளவிற்கு ஜனநாயக சக்திகள் ஒன்று திரளும். அதற்குத் தமிழ்நாடும் துணையாக இருக் கும் என்பதை, தமிழ்நாட்டுப் போராளிகள் சார்பாக சொல்கிறோம்; நாமெல்லாம் சக போராளிகள், ஆகவேதான், உங்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
எனவேதான், உங்களுடைய பணியையும் தொட ருங்கள்; அதற்குத்தான் நம்மை அடையாளப்படுத்தி, ஊக்கப்படுத்துவதற்காக அருமையான பத்திரிகை உலகத்தைப் புதுமைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற இவர்கள் நமக்குப் பெருமை செய்திருக்கின்றார்கள்.
நீங்கள் இரண்டரை லட்ச ரூபாய் வரைவோலையைக் கொடுத்திருக்கிறீர்கள்; எப்பொழுதும் எதைக் கொடுத் தாலும், அதை எங்களுடைய வீட்டிற்கோ அல்லது குடும்பத்திற்கோ எடுத்துச் செல்லுகின்ற பழக்கம் என்றைக்கும் கிடையாது எங்களுக்கு.
விருதுத் தொகையை
‘‘பெரியார் உலகத்திற்கு’’ அளிக்கிறேன்
அந்தத் தொகை, ‘‘பெரியார் உலகம்'' என்று திருச்சிக்கும் - சென்னைக்கும் இடையில் இருக்கக் கூடிய சிறுகனூரில் அமைத்துக் கொண்டிருக் கின்றோம். டிஸ்ட்னி வேல்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதில் ஆய்வகம், நூலகம், தந்தை பெரியார் அவர் களுடைய வயதைக் குறிக்கக் கூடிய 95 அடி உயர சிலையும், 45 அடி உயர பீடமும் அமைக்கவிருக்கிறோம்.
தமிழ்நாட்டு, திராவிட நாட்டு அரசியல் மற்றும் சமூக நிலைகளை விளக்கக் கூடிய வகையில், 10, 15 ஆண்டுகளில் அந்தத் திட்டத்தை முடிக்க விருக்கின்றோம். சில கோடி ரூபாய்களை செல வழித்து செய்யக்கூடிய அந்தப் பணிக்காக மக்கள் நன்கொடைகளை வழங்கிக் கொண்டிருக் கிறார்கள்.
நீங்கள் எனக்கு அளித்த தொகையை, உங்கள் அனுமதியோடு அந்தத் தொகையை 'பெரியார் உலகத்திற்கு' அளிக்கிறேன்.
இது சாதாரணமானதல்ல; இதில் இரண்டு வகையான பெருமை இருக்கிறது. காயிதே மில்லத் பங்களிப்பு இருக்கிறது.
இன்றைக்கும் பெரியாரும், காயிதே மில்லத் அவர் களும் மறையவில்லை; வாழ்கிறார்கள்; வாழ்வார்கள்; வரலாறாக இருப்பார்கள் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வளர்க காயிதே மில்லத் புகழ்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment