10 வயதிலே ‘தமிழன் முன்னேற்றம்’ என்ற தலைப்பிலே பேசினார்;
11 வயதிலே ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பிலே பேசினார்;
இன்று 90 வயதிலும் “தமிழனை முன்னேற்றுவதற்காக” போர்க்களத்திலே நிற்கின்ற தலைவர்
நம்முடைய ஆசிரியரைப் போன்று
உலகத்திலே எவரையும் பார்க்க முடியாது!
திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு. செந்திலதிபன்
திருப்பத்தூர், ஜன.1 பத்து வயதிலே ‘தமிழன் முன் னேற்றம்’ என்ற தலைப்பிலே பேசினார்; 11 வயதிலே ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பிலே பேசினார். இன்று 90 வயதிலும் “தமிழனை முன்னேற்றுவதற்காக” போர்க் களத்திலே நிற்கின்ற தலைவர் நம்முடைய ஆசிரியரைப் போன்று உலகத்திலே எவரையும் பார்க்க முடியாது. அந்த வீர வரலாற்றை ஆசிரியர் அவர்கள் படைத்து இருக்கிறார்கள் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு. செந்திலதிபன் அவர்கள்.
கடந்த 17.12.2022 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர்
மு. செந்திலதிபன் ஆற்றிய உரை வருமாறு:
சுயமரியாதைச் சுடரொளியாகத் திகழ்ந்த திருப் பத்தூர் ஏ.டி.ஜி. அவர்களின் நூற்றாண்டு விழாவும், நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள் விழாவையும், ‘விடுதலை’ நாளேட்டின் விழாவையும் சேர்த்து முப்பெரும் விழா வாக திருப்பத்தூரில் கொண்டாடிக் கொண்டு இருக் கிறோம்.
எந்தெந்த நூற்றாண்டு விழாக்களிலே பங்கேற்றார்கள்
இந்த நேரத்தில் இந்த ஆண்டு 2022 இல் ஜனவரி தொடங்கி டிசம்பர் 17 வரையிலே நம்முடைய ஆசிரியர் அவர்கள் எந்தெந்த நூற்றாண்டு விழாக்களிலே பங் கேற்றார்கள் என்பதை நான் ‘விடுதலை’யின் பதிவுகளை எடுத்துப் பார்க்கிறபோது, இந்த ஆண்டு
ஜூலை 3 ஆம் தேதி பொத்தனூரில் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் இங்கே வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்ட அய்யா பொத்தனூர் சண்முகம் அவர் களுடைய நூற்றாண்டு விழாவில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் பங்கேற்றார்கள்.
ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஆத்தூரிலே மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேலனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண் டார்கள்.
ஆகஸ்டு 20 ஆம் தேதி குத்தாலத்திலே, நூற்றாண்டு காண இருக்கும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவிலே பங்கேற்றார்கள். இன்றைக்கு திருப்பத்தூரிலே ஏ.டி.ஜி. அவர்களின் நூற்றாண்டு விழாவிலே கலந்து கொண் டிருக்கிறார்கள்.
உலக வரலாற்றில் 80 ஆண்டு காலப் பொது வாழ்வைப் பெற்றிருக்கக் கூடிய ஓர் அரசியல் தலைவரை உலகத்திலேயே பார்க்க முடியாது
நான்கூட எண்ணிப் பார்த்தேன். சுயமரியாதை இயக் கத்திலே, தலைவர் தந்தை பெரியார் அவர்களோடு திராவிட இயக்கத்தோடு நீண்ட காலம் பயணித்த வர்கள், நூறு ஆண்டுகளைக் கடந்த பெரியோர்கள் இங்கு இருக்கிறார்கள். ஏ.டி.ஜி. அவர்களைப் போல நினைவில் வாழக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய நூற்றாண்டு விழாக்களுக்கு எல்லாம் ஆசிரியர் ஏன் போகிறார்? என்று நான் எண்ணிப் பார்க்கிறபோது, நூற்றாண்டைக் கடந்து இருக்கின்ற இந்த திராவிட இயக்கம், எப்படிப்பட்ட பாதையிலே நடந்து வந்தது என்கிற வரலாற்றை நம்முடைய இளைஞர்கள் உள் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த நூற்றாண்டு விழாக்களை நம்முடைய ஆசிரியர் அவர்கள் கொண் டாடிக் கொண்டு இருக்கிறார்கள். தொண்ணூறு வயது நம்முடைய ஆசிரியருக்கு; திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் அய்யா கவிஞர் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல உலக வரலாற்றில் 80 ஆண்டு காலப் பொது வாழ்வைப் பெற்றிருக்கக் கூடிய ஓர் அரசியல் தலைவரை உலகத்திலேயே பார்க்க முடியாது; நம்முடைய ஆசிரியரைத் தவிர வேறு எவரையும் காண முடியாது.
‘தமிழன் முன்னேற்றம்’ என்னும்
தலைப்பில் முழங்கினார்
மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பத்து வயதுப் பாலகனாக 1944, மே மாதம் 12 ஆம் தேதி, எங்கள் கடலூர் பழையப் பட்டினம் செட்டிக்கோவில் திடலில் நடைபெற்ற திராவிட மாணவர் சுற்றுப்பயணக் கூட்டத் தில் ஆசிரியர் அவர்கள் அந்த மேடையிலே முழங் கினார்கள். அவருக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டது; ‘தமிழன் முன்னேற்றம்’ என்னும் தலைப்பில் முழங்கினார்.
பதினொரு வயதில் 1945, மே ஒன்றாம் தேதி திரு வாரூரிலே தலைவர் கலைஞர் அன்றைக்கு மாணவராக இருந்து, தென் மண்டலத் திராவிடர் மாணவர் மாநாட்டை நடத்தினார்கள்; அந்த மாநாட்டுக்குச் சென்ற வர் ஆசிரியர் அய்யா அவர்கள். அந்த மாநாட்டில் ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
“தமிழனை முன்னேற்றுவதற்காக” போர்க்களத்திலே நிற்கின்ற தலைவர்
10 வயதிலே ‘தமிழன் முன்னேற்றம்’ என்ற தலைப் பிலே பேசினார்; 11 வயதிலே ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பிலே பேசினார். இன்று 90 வயதிலும் “தமிழனை முன்னேற்றுவதற்காக” போர்க்களத்திலே நிற்கின்ற தலைவர் நம்முடைய ஆசிரியர். உலகத்திலே எவரையும் பார்க்க முடியாது. அந்த வீர வரலாற்றை ஆசிரியர் அவர்கள் படைத்து இருக்கிறார்கள்.
இதே திருப்பத்தூரில் 17 வயதிலே 1950, மே 27 ஆம் தேதி ஆசிரியர் அவர்கள் பொதுக் கூட்டத்திலே பேசிய வரலாற்றுச் செய்தியை நான் படித்தேன்.
பெரியாரின் வாரிசாக விளங்குகிறார்
தலைவர் கலைஞர் அவர்கள் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவாரூரில் நடைபெற்ற ஒரு கூட் டத்தில் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு பேசுகிறபோது சொன் னார்: “தந்தை பெரியார் சிவகங்கையில் 1965, ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது சொன்னார்கள். ‘எனக்குப் பிறகு எனது புத்தகங்கள்தான் வாரிசு’ என்று சொல்லிவிட்டு ‘அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யாராக இருந்தாலும் இந்த இடத்துக்கு வரலாம்’ என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப் பிட்டார்கள். இன்றைக்கு என்னுடைய அன்பு இளவல் கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அன்று கூறிய படியே, அவர் எண்ணிய அந்த அறிவையும், உணர்ச் சியையும், துணிவையும் கொண்டவராக பெரியாரின் வாரிசாக விளங்குகிறார்,” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டினார்.
உலக வரலாற்றிலே மிகப்பெரிய தலைவர்; 27 வயதிலே திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்; 1960 மே 15 ஆம் தேதி திருச்சியில் நடந்த திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியரைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்து அறிவித்தார்கள்.
60 ஆண்டுகள் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிறார்
ஆசிரியரின் 29 வயதில் தந்தை பெரியார் அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை 1962, ஆகஸ்டு 10 ஆம் தேதி அவரிடம் ஒப்படைத்தார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால் 60 ஆண்டுகள் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிறார்.
அயர்வும், சலிப்புமின்றி ஓயாத கடல் அலைகள்போல உழைத்துக் கொண்டிருக்கிறார்
திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இந்தத் தாய் இயக்கத்தை 45 ஆண்டுகளாக வலிமை குன்றாமல் அயர்வும், சலிப்பும் இன்றி ஓயாத கடல் அலைகள்போல உழைத்துக் கொண்டு இந்த இனத் துக்குத் தலைமை தாங்குகின்ற மகத்தான தலைவராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
வாழ்நாள் எல்லாம் சமூக நீதிக்காகப் போராடிய தலைவர் அவர்; இந்திய உபகண்டத்துச் சரித்திரத்தை எழுதுகின்ற போது, திராவிட இயக்கத்தை மறுதலித்து விட்டு எவரும் சரித்திரத்தை எழுதி விட முடியாது. சமூக நீதித் தத்துவத்தை எழுது கின்றபோது தலைவர் தந்தை பெரியாரின் பங்களிப்பை, டாக்டர் அம்பேத்கரின் பங் களிப்பைப் புறந்தள்ளிவிட்டு வரலாறு எழுத முடியாது.
இட ஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வர போராடியவர் தந்தை பெரியார்
1951 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டம் முதன்முதலில் திருத்தம் செய்யப்பட்டது. இட ஒதுக் கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வர அன்றைக்குப் போராடியவர் தந்தை பெரியார் அவர்கள்.
1994 ஆம் ஆண்டு இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர காரணமாக இருந்தவர் ஆசிரியர் அவர்கள்.
நாடாளுமன்றத்திலே நிறைவேற்றச் செய்து, 76 ஆவது சட்டத் திருத்தமாகக் கொண்டு வரச் செய்து, 69 சதவீத இட ஒதுக்கீட்டை 9 ஆவது அட்டவணையில் சேர்த்து, 31 சி பிரிவின் கீழ் கொண்டு வந்து பாதுகாத்த வரலாறு நம் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் களுக்குத்தான் உண்டு.
இன்றைக்கு ஒரு சட்டத் திருத்தம் வந்து இருக்கிறது. 2019 இல் அது உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் ஆகும்.
அருமைத் தோழர்களே! 1951 லே தந்தை பெரியார் அவர்களால் சமூக நீதிக்கான முதல் சட்டத் திருத்தம் வந்தது. 1994-லே நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட 76 ஆவது சட்டத் திருத்தம் வந்தது.
வரலாறு படைக்கப் போவதும்
தமிழர் தலைவர் ஆசிரியர்தான்
பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 103 ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார் களே, இந்த சட்டத் திருத்தத்தையும் நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டு வரலாறு படைக்கப் போவதும் தமிழர் தலைவர் ஆசிரியர்தான் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்தக் காலம் வந்தே தீரும்.
இன்றைக்கு மிகப்பெரிய எதிரிகளை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம் தோழர்களே! அவர்கள் நினைத் ததைச் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
1951-ஆம் ஆண்டு, இட ஒதுக்கீட்டிற்கு முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்த போது, நாடாளுமன்றத்திலே பண்டித ஜவகர்லால் நேருவும், டாக்டர் அம்பேத்கரும், திருத்தத்தைக் கொண்டு வந்தபோது கல்வி ரீதியாக, சமூக ரீதியாகப் பின்தங்கி இருக்கிறவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டப் பிரிவு 15 இல் (4) என்ற உட்பிரிவு சேர்க்கப்பட்டது.
அப்போது நாடாளுமன்றத்தில் ஜனசங்கத்தை உருவாக்கிய சியாம் பிரசாத் முகர்ஜி, இந்த சட்டத் திருத்தத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர் என்பதையும் சேர்க்கவேண்டும் என்று ஒரு திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதனை பிரதமர் நேருவும் சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் பட்டது. சியாம பிரசாத் முகர்ஜி கொடுத்த திருத்தத்திற்கு ஆதரவாக 5 பேர்தான் வாக்களித்தனர். 243 பேர் எதிர்த்து வாக்களித்தனர். பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்பது அன்றைக்கு 1951-இல் நாடாளுமன்றத் திலே தோற்கடிக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் 68 ஆண்டுகள் காத்து இருந் தார்கள்; அரசாட்சி ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கையிலே வந்ததற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு அந்தப் பொரு ளாதார இடஒதுக்கீடு என்பதைச் சட்டமாக்கி விட்டார்கள். அவர்கள் அந்தக் கொள்கையை அடை காத்துக் கொண்டு இருந்த கூட்டம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
காஷ்மீர் மாநிலத்திற்கு 370 சட்டப் பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கி சட்டப் பாது காப்பை நேரு கொண்டு வந்தபோது, 1952 இல் ஆர்.எஸ்.எஸ்., அதை எதிர்த்து தீர்மானம் போட்டது. காஷ்மீருக்கு அந்த சிறப்புத் தகுதி கூடாது என்று கூப்பாடு போட்டார்கள்.
66 ஆண்டுகள் கழித்து அந்த காஷ்மீரத்தைத் தாங்கள் நினைத்தவாறு பந்தாடினார்கள்; காஷ்மீர் சிதைக்கப்பட்டது. இதை மறந்து விடக் கூடாது.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்குத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்!
பொது சிவில் சட்டம் அவர்களுடைய செயல் திட்டத்தில் இருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங் களவையில் ராஜஸ்தானை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி. கிரோடிலால் மீனா என்பவர் பொது சிவில் சட்டத்திற்குத் தனி நபர் மசோதா கொண்டு வந்தார். அதை எதிர்த்து திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்கள் கடுமையாகக் குரல் கொடுத்தார். விவாதத்திற்கே அந்த தனிநபர் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று முழங் கினார். ஆனால், அவர்கள் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்குத் துடித்துக் கொண்டு இருக் கிறார்கள்.
தோழர்களே! நாம் பேசிய சமூகநீதி; திராவிட இயக்கம் முழக்கமிட்ட மாநில உரிமை; கல்வி உரிமை; பெண் உரிமை; நம்முடைய மொழி உரிமை; ஹிந்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த மண்ணில் போராடிய தீரர் களின் தியாகம் இவையெல்லாம் வீணாகி விடக் கூடாது. அவற்றையெல்லாம் இந்த மண்ணிலே நிலை நிறுத்துவதற்கு, நம்மை வழிநடத்துவதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். அவரது வழிகாட்டுதலோடு எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர் பின்னால் அணி திரண்டு செல்வோம்.
யார் எங்கே நிற்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை நாட்டு மக்களிடம் எழுப்புவோம்
இங்கு இருப்பது இரண்டே அணிகள்தான். பாசிச ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. எதிர்ப்பு அணி ஒன்று; இன் னொன்று பா.ஜ.க. ஆதரவு அணி. வேறு எதற்கும் இங்கு இடம் இல்லை. யார் எங்கே நிற்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை நாட்டு மக்களிடம் எழுப்பு வோம்.
திராவிட இயக்கமும்,
தமிழ் நாடும் பயனுற வேண்டும்
அய்யா ஆசிரியர் அவர்களே! எங்கள் தலைவர் வைகோ அவர்கள் பெரியார் திடலிலே சொன்னதைப் போல நீங்கள் நூறு ஆண்டைக் கடந்து 120 ஆண்டுகள் வாழவேண்டும். அதனால் திராவிட இயக்கமும், தமிழ் நாடும் பயனுற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
மூச்சை எடுத்தெறி தமிழா!
முழங்கு; மேகமாகிக் கிளம்பு;
சீச்சீ அடிமையாய் வாழ்ந்தோம்;
செந்தமிழ்த் தாய் இதற்கோடா பெற்றாள்?
கூனி வளையவா மேனி?
கும்பிட்டு கால்பிடிக்கவா கைகள்?
தீனி மகிழவா வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!
நாங்கள் கவரிமான் ஜாதி;
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!
தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்; செருக்களம் வாடா!
ஓங்கி முழங்குகத் தானை;
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!
தூங்கி வழிந்தது போதும்;
துள்ளி எழுத் தமிழ்த் திருநாடே!
என்று அழைத்து வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்தில திபன் உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment