எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம்

தனது அன்றாடவேலைகள், தொடர் சுற்றுப்பயணங்களுக்கிடையேயும் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரம் ஒதுக்கித் தந்த 30.01.2023 (திங்கட்கிழமை) அன்று திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடல், எம்.ஆர்.ராதா மன்றத்தில் காலை 11.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. 

கலந்துரையாடலில் வட சென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மரகதமணி கடவுள் மறுப்பு கூறினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழகத் தீர்மானங்கள் பின் நாட்களில் சட்டமாக வரக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளன. அதற்கான வரலாறுகளும் உண்டு. அந்த வகையில் அய்ந்து தீர்மானங்கள் இக்கூட்டத்தில் மகளிர் தோழர்கள் கலைமணி (வேலூர்), மணிமேகலை (சிவகங்கை), இறைவி (சென்னை), சாந்தி (திருச்சி) மற்றும் ரூபியா (திருச்சி) ஆகியோரால் முன்மொழியப்பட்டன. அத் தீர்மானங்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. திராவிடர் கழக மாநில மகளிர் அணி- திராவிட மகளிர் பாசறையின் 2023ஆம் ஆண்டுக்கான வேலை திட்டங்களை திராவிட மகளிர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி வாசித்தார்.

திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர்  பாசறையின் செயல்பாட்டு அறிக்கை (சென்ற கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்ற 12.06.2022 முதல்) மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களால் பதிவு செய்யப்பட்டது. 

திராவிட மகளிர் பாசறை தோழர்கள் பொன்னேரி செல்வி, சென்னை சசிமேகலா, சென்னை அருணா, தருமபுரி கோகிலா ஆகியோர் தாங்கள் இயக்கத்திற்கு வந்த பாதையையும், தந்தை பெரியார், ஆசிரியர் அவர்களால் பெற்ற பயனையும், தொடர்ந்து இயக்கத்தில் எப்படி செயல்படுவது ஆகியவை குறித்தும் சிறப்பாகப் பதிவு செய்தனர். 

திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்திய "கற்போம் பெரியாரியம்",  "ஆசிரியரை அறிவோம்" ஆகிய காணொலி வகுப்பு களில் பங்கேற்று அதில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு களில் வெற்றி பெற்ற கீழ்க்கண்ட மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி, பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டினார்.

கற்போம் பெரியாரியம்:

முதல் பரிசு - ரூ.2000/- 1) டி.மரகதமணி, 2) ஜி.சிவராம கிருஷ்ணன், இரண்டாம் பரிசு - ரூ.1500 - எஸ்.சுப்ரிஜா, மூன்றாம் பரிசு - ரூ.1000 - எஸ்.சிறீதர்.

ஆசிரியரை அறிவோம்:

முதல் பரிசு - ரூ.2000/- 1) ஜெ.மேகலா, 2) கே.செல்வராணி, இரண்டாம் பரிசு - ரூ.1500 - திவ்யா வாசுகி, மூன்றாம் பரிசு - ரூ.1000  - எஸ்.சுஷ்மிதா.

(நேரில் வர இயலாத சிலருக்குப் பரிசுத்தொகை இணையம் வழியாக வழங்கப்படுகிறது)

தொடர்ந்து திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன்  கருத்துரை வழங்கினார். அவரது கருத்துரை யில் மகளிர் எப்படி செயல்பட வேண்டும் தந்தை பெரியாரால் பெண்களுக்குக் கிடைத்த உரிமைகள் எவ்வளவு பெரியது என்பதைப் பதிவு செய்தார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தனது கருத்துரையில் திராவிடர் கழகத்தின் தீர்மானங்கள் பின் நாளில் எப்படி பெண்ணிய சட்டங்களாக வந்தது என்பதையும் பெண்களின் கல்வி உரிமை, சொத்துரிமை ஆகியவை பற்றி பெரியார் அளவிற்கு யாரும் பேசவில்லை என்பதையும் தொடர்ந்து தனது வாழ்நாள் முழுவதும் பெண்ணுரிமைக்காகப் பெரியார் போராடிய களங்களையும் விளக்கி, திராவிடர் கழகத்தில் மகளிர் அணி எவ்வளவு வலுவாகப் பயணித்தது, சுற்றுப்பயணம் மேற்கொண்டது என்பதையெல்லாம் கழக முன்னோடி களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து அந்தப் பாதையில் இந்தத் தலைமுறையும் பயணிக்க வேண்டும் என்றார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது தலைமை உரையில்  மனுதர்மம் எந்த அளவிற்குப் பெண்களைக் கொச்சைப்படுத்தி உள்ளது என்பதையும், அந்த மனுதர்மத்தில் உள்ளச் செய்திகளைப் பெண்கள் படித்து அதனை மற்றவர்களுக்கு விளக்கி, அது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் பரப்ப வேண்டும் என்றார். பொதுக் கூட்டங்கள் எவ்வளவு நடை பெறுகிறதோ அதைவிட தெருமுனை, திண்ணைப் பிரச்சாரங்கள், வீட்டிற்கு வீடு பிரச்சாரங்கள் அதிகப் படுத்தப்பட வேண்டும் என்றார். ஒரு இயக்கம் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பது அதில் இருக்கக்கூடிய மகளிரைப் பொறுத்து அமையும், எனவே, மகளிர் தோழர்கள் சுற்றுப்பயணங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், சுற்றுப்பயணத்தில் அனைத்து மகளிரையும் இணைத்து, அவர்களைப் பயிற்சி படுத்த வேண்டும், மேலும் பெண்களுக்கு உள்ள மனத் தடைகளை போக்க அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், உடற்பயிற்சி செய்ய வேண்டியதின் அவசியத்தையும், பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதின் அவசியத்தையும் விளக்கினார். பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு மகளிர் அணி மகளிர் பாசறை இன்னும் வேகமாகச்  செயல்படுவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் வழக்குரைஞர் வெற்றிச்செல்வன் தொடர்ந்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும் அதை கையாள்வதற்கான நெறிமுறைகள் குறித்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார். அவருக்குக் கழகத்  துணைத் தலைவர் கவிஞர்  கலி.பூங்குன்றன்  பயணாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

கழகத் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோருக்கு மகளிர் தோழர்களும்,  மகளிர் தோழர்கள் மருத்துவர் மீனாம்பாள், வெற்றிச்செல்வி, கலைமணி, விஜயலட்சுமி, வழக் குரைஞர் வீரமர்த்தினி, கழகப் பொறுப்பாளர்கள் பன்னீர்செல் வம், தே செ கோபால், திருவாரூர் மோகன் ஆகியோருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் பயணாடை அணிவித்துச் சிறப்பு செய்தனர். 

மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மோழி   அனைவருக் கும் நன்றி தெரிவித்தார். வழக்குரைஞர்கள் பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி ஆகியோர் நிகழ்ச்சிக்கு இணைப்புரை வழங்கினர்.

திராவிடர் கழக மகளிர் சார்பில் 25 பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தாக்களை (ரூ.15,000) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.



No comments:

Post a Comment