நாடாளுமன்ற செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

நாடாளுமன்ற செய்திகள்

தமிழ்நாட்டைப் போல சமூக நீதியை அனைவரும் பின்பற்ற வேண்டும்!

மக்களவையில் டாக்டர் செந்தில்குமார் பேச்சு!

புதுடில்லி, டிச.23- தமிழ்நாட்டைப் போல் சமூக நீதியைப் பின்பற்றி அனைவரும் ஜாதி அடையாளங் களை நீக்க வேண்டும் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள அரசியல் அமைப்பு மசோதா தொடர்பாக பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என். வி.செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளதாவது:-

இந்த மசோதாவில் நரிக்குறவர் மற்றும் குருவிக் காரர்கள் என்ற வகுப்பை சார்ந்தவர்களையும் இணைத் ததற்கு நன்றி. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தங்களது இட ஒதுக்கீடுகளுக்காக போராடி வருகின்றனர். இது தொடர்பாக லோக்கூர் கமிட்டி அமைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக அதாவது இரண்டு தலைமுறைகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். மேலும் இந்த சமூகத்தில் படித்த இளைஞர்கள் இட ஒதுக்கீடு கிடைக்காத காரணத்தினால் கோயில்கள் மற்றும் சாலைகளில் ஆபரணங்களை விற்று வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது இவர்களது தொழிலான வேட்டை யாடுவதையும் தடை செய்து விட்டதால் காடுகளில் பீடி தொழிலுக்கு பயன்படும் டெண்டர் இலைகளை சேக ரித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின் றனர். ஆனால் இந்த ஒன்றிய அரசு அதற்கும் 18 சத வீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதற்கு மாறாக பீடி தொழில் செய்யும் தொழில் அதிபர்களுக்கு இந்த வரியை விதிக்க வேண்டும்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதிப் பெயர் இருக்காது. இதனால் நாங்கள் மேல் தட்டு மக்களா, அடித்தட்டு மக்களா என யாராலும் அடையாளம் காண முடியாத அளவிற்கு சமூக நீதி பரவியுள்ளது.

மாறாக பிரதமர் உட்பட அனைவரின் பெயருக்குப் பின்னாலும் ஜாதி அடையாளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்தச் சமூகத்தை சார்ந்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று அறிந்தவுடன் அடுத்த நாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது இல்லம் சென்று அவர்களுடன் பகல் உணவு எடுத்துக் கொண்டார். எனவே, சட்டங்கள் இயற்றுவது எவ்வளவு முக் கியமோ அது போல் சமூக நீதியையும் அனைவரும் பின்பற்ற வேண்டும். -இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் பேசினார்.

5ஜி சேவையை வழங்க 14 மாநிலங்களில் 20,980 அலைபேசி கோபுரங்கள்! 

ஒன்றிய அரசு தகவல்

 இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க 14 மாநிலங்களில் 20,980 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. 5ஜிக்காக 20,980 அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, வாரத்திற்கு சுமார் 2,500 அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஒன்றிய அமைச்சர் தேவுசிங் சவுகான்  மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது.  தற்போது தமிழ்நாடு உள்பட  14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில்  விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் நிலையில் அதில் 33 நகரங்கள் குஜராத்தில் மட்டுமே இருக்கிறது. அதன் பிறகு ஒன்றிய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் தலா 2 நகரங்களும், மகாராட்டிராவில் 3 நகரங்களிலும் 5ஜி சேவை இருக்கிறது.  இதனையடுத்து டில்லி, கருநாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், அரியானா, அசாம், கேரளா, பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன் றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் தேவுசிங் சவுகான்,  14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக 20,980 செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிப்படை நிலை யங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அதிக பட்சமாக டில்லியில் 5,829 செல்போன் கோபுரங்களும், மகாராட்டிராவில் 4,051 செல்பேசி கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு சராசரியாக 2500 செல்பேசி கோபுரங்கள் அமைக்கப் பட்டு வருகிறது என்றும், வாரத்திற்கு 2500 கோபுரங்கள் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய 

அரசுப் பணிக்கு 3.77 லட்சம் பேர் தேர்வு

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்

 கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசுப் பணிக்கு 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:- 

கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பணியாளர் தேர் வாணையம், SSS ரயில்வே தேர்வு வாரியம் ஆகியவை மூலம் ஒன்றிய அரசு பணிக்கு 3 லட்சத்து 77 ஆயிரத்து 802 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலியிடங்களை உரிய நேரத்தில் நிரப்புமாறு அனைத்து அமைச்சகங் களுக்கும் கூறியுள்ளோம். ஒன்றிய அரசு நடத்தும் 'வேலைவாய்ப்பு திருவிழா', வேலைவாய்ப்பை பெருக்க பயன்படுகிறது என்று அவர் கூறினார்.  

ஊழல் புகார் குறித்த கேள்விக்கு  ஜிதேந்திர சிங் கூறியதாவது:- ஊழல் அதிகாரிகளை தண்டிப்பதில், ஒன்றிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுரைப்படி, கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 724 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 55 புகார்களில், ஆணையத்தின் அறிவுரை பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜிதேந்திர சிங், ''கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிகமான குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் 4 ஆயிரத்து 798 பேர் ஒன்றிய அரசுப் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்'' என்று கூறினார்.


No comments:

Post a Comment