நிலவுக்கு பயணமாகும் கலைஞர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

நிலவுக்கு பயணமாகும் கலைஞர்கள்

தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகி வரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய பெரும் பணக்காரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் யுசாகு மெசாவா, படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார்.

அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும் சோய் சூங்-ஹ்யூன் ஆகியோர் அதிலுள்ள முதன்மையான தேர்வுகளாக அறியப்படுகின்றனர்.

அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்ட நிலவுக்குச் செல்லும் விமானம், 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களின் முதல் நிலவுப் பயணமாக இருக்கலாம்

முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஒரு விண்கலம் நிலவை வட்டமிடுவதோடு, அதன் மேற்பரப்பிலிருந்து 200 கிமீ தொலைவு வரை நெருங்கிச் செல்லும். அந்தப் பயணம் தொடங்கியதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புவர்.

இருப்பினும், இந்தக் குழு பயணிக்க வேண்டிய ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்த விண்வெளி விமானம் பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு சுற்று பயணிப்பதற்குக் கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மே 2021இல் சோதனை ஏவுதலை முடித்த பிறகு, கடந்த 18 மாதங்களாக டெக்சாஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், யுசாகு மெசாவா தனது டியர் மூன் என்ற அழைக்கப்படும் குழுவில் இருப்பவர்களை அறிவிக்கும் காட்சிப் பதிவில் இந்தத் தாமதம் குறித்துக் குறிப்பிடவில்லை.அந்தக் காணொளியின் தொடக்கக் காட்சி, ஜப்பானிய தோட்டம் ஒன்றில் மெசாவா நிலவை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதன்பிறகு குழுவின் முதல் உறுப்பினரான டிஜே ஆக்கியை அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.

“இந்த வாய்ப்பை என்னால் நழுவவிட முடியாது. இதற்காக என் மனம் ஏங்குகிறது,” என்று பில்போர்ட்-சார்ட்டிங் கலைஞர் அந்தக் காட்சிப் பதிவில் கூறுகிறார்.

அடுத்ததாக அறிவிக்கப்பட்ட பயணி, தினசரி விண்வெளி வீரர் என்றறியப்படும் யூட்யூபர் டிம் டாட். விண்வெளி பயணம், வானியற்பியல் தொடர்பான கல்வி காணொலிகளுக்காக 14 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட அவரது சொந்த காணொலியில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். “ஸ்பேஸ் எக்ஸ் 2017ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒருவரை அனுப்புவதாக அறிவித்தது தான் நான் உண்மையில் யூட்யூப்பில் காணொலிகளை உருவாக்கி வெளியிட வைத்தது,” என்றும் அவர் கூறுகிறார்.அறிவிக்கப்பட்ட டியர்மூன் குழுவின் மற்ற உறுப்பினர்கள்

தென் கொரியாவை சேர்ந்த கொரிய ராப் பாடகரும் பாய்பேண்ட் பிக் பேங் குழுவின் மேனாள் முன்னணி பாடகர் டாப் என்றறியப்படும் சோய் சூங்-ஹ்யூன்

செக் குடியரசை சேர்ந்த நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான யெமி ஏ.டி.

அயர்லாந்தை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ரியானன் ஆடம்.

பிரிட்டனை சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கரீம் இலியா.

அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரெண்டன் ஹால்.

இந்தியாவைச் சேர்ந்த நடிகர் தேவ் ஜோ “பூமியை விட்டு வெளி யேறுவது, நிலவுக்குப் பயணிப்பது போன்றவற்றில் இருக்கும் பொறுப்புகளை ஒவ்வொருவரும் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் நிறைய பெறுவார்கள். அவர்கள் அதை பூமிக்கும் மனித குலத்திற்கும் பங்களிக்கப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்,” என்று மெசாவா கூறினார்.

‘ஆன்லைன் ஃபேஷன்’ சில்லறை விற்பனையாளரான ஜோசோவில் தனது செல்வத்தை ஈட்டிய மெசாவா, வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு 12 நாட்கள் பயணம் சென்றார்.

2018ஆம் ஆண்டில், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவைச் சுற்றிப் பறக்கும் முதல் தனியார் பயணியாக அவர் பெயரிடப்பட்டார். மேலும், விண்வெளி விமானத்திலுள்ள மற்ற எட்டுப் பயணிகளின் செலவை தானே ஸ்பான்சர் செய்வதாகக் கூறினார்.

“மெசாவா தனது விண்வெளி பயணச் சீட்டுக்கு செலுத்த ஒப்புக்கொண்ட விலை வெளியிடப்படவில்லை. ஆனால், ஈலோன் மஸ்க்கின் கூற்றுப்படி அது “நிறைய பணம்.”

2020ஆம் ஆண்டில், தனது நிலவுப் பயணத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ள புதிய காதலிக்கான தேடலையும் தொடங்கினார். பிறகு “கலவையான உணர்வுகள்” காரணமாக அந்த முயற்சியை நிறுத்தினார்.

No comments:

Post a Comment