இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக
உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது
திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு திருப்புமுனை!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, டிச.16 விளையாட்டு ஒன்றுதான் ஜாதி, மதம் என்ற பேதமில்லாதது! இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு திருப்புமுனை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
14.12.2022 அன்று முற்பகல் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். அந்நிகழ்விற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு திருப்புமுனை
செய்தியாளர்: உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்று இருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: திராவிட இயக்கத்தின் வரலாற்றில் ஒரு நல்ல எழுச்சிமிகு திருப்புமுனையாகும்.
காரணம், 5 ஆவது தலைமுறை தொடர்ச்சி என்பது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றதாகும். எப்படி திருப்பம் என்று சொன்னால், திராவிட இயக்கம் என்பது நூறாண்டு காலத்திற்கு மேற்பட்ட ஓர் இயக்கம்.
ஒரு காலகட்டத்தில் அதனுடைய அரசியல் எதிரி கள், இந்த இயக்கம் தேர்தலில் சில தோல்விகளைச் சந்தித்தவுடன், குழிதோண்டிப் புதைத்துவிட்டோம் என்று சொன்னார்கள்.
ஆனால், அண்ணா அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தவுடன், ''நீங்கள் 10 ஆண்டு களிலேயே ஆட்சியைப் பிடித்துவிட்டீர்களே?'' என்று அவரிடம் கேட்டபொழுது, அவர் சொன்னார், ''இல்லை, இல்லை; உங்களுடைய கருத்து தவறு; நாங்கள் நீதிக்கட்சியினுடைய பேரன். நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சிதான் எங்களுடைய ஆட்சி'' என்று சொன் னார்.
அதை இன்றைய முதலமைச்சர் நம்முடைய ஆற்றல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், ''இது 'திராவிட மாடல்' ஆட்சி'' என்று சொன்னார்கள். அந்தத் திராவிட மாடல் ஆயிரங்காலத்துப் பயிர்; நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி.
எந்த இன்னல்களும், எவ்வளவு இடையூறுகளும், எவ்வளவு துரோகங்களும், எவ்வளவு சூழ்ச்சிகள் இருந்தாலும், 'திராவிட மாடல்' ஆட்சி அவற்றை யெல்லாம் வென்று, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகும் ஆற்றல் வாய்ந்தது.
'5-ஜி' என்று அவருக்குப் பெயரிட்டேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்களை இரண்டாம் முறை நியமித்தபொழுதே சொன்னேன்; ''5ஜி'' என்று அவருக்குப் பெயரிட்டேன்.
5 ஆவது தலைமுறை மட்டுமல்ல, அவர்; அய்ந் தாவது தொடர்ச்சி மட்டுமல்ல, அவர். அதையும் தாண்டி, 5-ஜி எவ்வளவு வேக வேகமாக செயல்படுகிறதோ, அதுபோல அவருடைய பணிகள் இருக்கின்றன.
இளைஞர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அந்த இளைஞர்களை கொள்கையாளர்களாக - பாசறைக் கூட்டங்களின்மூலமாக பயிற்றுவித்து, பக்குவப்படுத்தி, திராவிட நாற்றாங்காலாக இருக்கவேண்டும் என்று சொல்லி, அதற்கான பணிகளை மேற்கொண்டார். தேர்தல் களத்தில், அவர் சிறந்த முறையில் பிரச்சாரம் செய்த பணியும் சரி, தன்னுடைய தொகுதி மக்களின் அன்பை வென்றிருக்கக்கூடிய நிலையிலும் சரி, அவர் எல்லா துறையிலும் தன்னுடைய ஆற்றலை புலப்படுத்தியிருக்கிறார்.
திராவிடர் கழகமான தாய்க்கழகம் பெருமைப்படுகிறது, பூரிப்படைகிறது
அதை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, அவரிடம் வேலை வாங்குவதற்காக, அவரைப் பயன்படுத்திக் கொள்வதற்காக - திராவிட இயக்கம் இளைஞர்களைக் கொண்ட இயக்கம் - இளைஞர் பாசறை என்பதைக் காட்டுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ, அதேபோல, அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றதைக் கண்டு - திராவிடர் கழகமான தாய்க்கழகம் பெருமைப் படுகிறது, பூரிப்படைகிறது.
அவர் அமைச்சர் பொறுப்பேற்றவுடன், ''பதவியாக இதை நான் நினைக்கவில்லை; பொறுப்பாக, கடமை யாகக் கருதி, மக்களுக்குத் தொண்டாற்ற வந்திருக் கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
அரசியல் களத்தில் இது அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனை என்பது மட்டுமல்ல - சிறந்த மைல்கல் - அதில் நிச்சயம் முத்திரைப் பதிப்பார்.
விளையாட்டு ஒன்றுதான், ஜாதி, மதம் என்ற பேதமில்லாதது!
செய்தியாளர்: விளையாட்டுத் துறையை அவருக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்; இந்தத் துறை எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மாறப் போகிறது?
தமிழர் தலைவர்: இளைஞர்களைப் பொறுத்தவரை யில், விளையாட்டு என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.
விளையாட்டு ஒன்றுதான், ஜாதி, மதம் என்ற பேதமில்லாமல் - மாநிலம், நாடு என்று எல்லாவற்றையும் தாண்டி, மனிதநேயத்தோடு பார்க்கக்கூடிய ஒரு சிறப்பான உணர்வை உருவாக்குவது.
திராவிட இயக்கத்தினுடைய அடித்தளமும் மனிதநேயம்தான்
விளையாட்டுக் களத்தில் இருப்பவர்களுக்கு, எந்த நாடு? எந்த மதம்? எந்த ஜாதி? என்பதைப்பற்றிக் கவலை கிடையாது. அதன்படி மனிதர்களிடையே மனித நேயத்தை வளர்ப்பது விளையாட்டாகும். அதுபோன்ற ஒரு சிறப்பான உணர்வை உருவாக்குவது. திராவிட இயக்கத்தினுடைய அடித்தளமும் மனிதநேயம்தான்.
திராவிடத் தத்துவத்திற்கும் - புது கோட்பாட்டிற்கும் தனி உருவமாகும்!
எனவே, அவருடைய பொதுவாழ்க்கையில், அரசியல் வாழ்க்கை மற்றொரு அங்கமாக வருகிற பொழுது, இந்தத் துறையில் பொறுப்பேற்பதன்மூலமாக நாட்டையும், இளைஞர்களையும் பக்குவப்படுத்துவது மட்டுமல்ல; இந்தத் தத்துவத்திற்கும் புது கோட் பாட்டிற்கும் தனி உருவமாகும்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment