ஹிந்துக்களிடையே அன்றிலிருந்து இன்றுவரை மடங்களின் பெயரால் குறிப்பிட்ட நபர்கள் பெரும் சொத்துக்களை அனுபவித்து சுகபோகமாக வாழ்ந்தனர். அந்த மடங்கள் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறி உள்ளன. தற்போது கார்ப்பரேட் சாமியார்கள் அனைவருமே அதானி, அம்பானிக்கு ஈடாக பெரும் பணக்காரர்களாக உள்ளனர். அப்படி இருந்தும் அவர்கள் கரோனா காலத்தில் கூட ஏழை மக்களுக்கு உணவுக்குக் கூட உதவவில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்கள் கரோனாவால் மரணமடைந்த ஹிந்துக்களை உறவினர்களே நெருங்க பயந்த நேரத்தில் பல ஆயிரம் பேரை இலவசமாக தூக்கிச் சென்று ஹிந்து முறைப்படி அடக்கம் செய்தார்கள்.
ஹிந்து அறநிலையத்துறை கோவில் பொறுப்புகளை தனியார் இடம் தரவேண்டும் என்று சொல்கிறார்கள். சரி, அப்படி என்றால் தமிழ்நாட்டில் உள்ள இந்த மண்ணின் மக்கள் சம்மதம் என்று சொல்லட்டும் பார்ப்போம். ஹிந்து கோவில்கள் புதிதாக உருவாகிற எல்லாம் தனியார் கையில் தான் உள்ளது.
ஈசா, புட்டபர்த்தி, சீரடி, முர்டீஸ்வரர் ஆலயம், வேலூர் தங்கக்கோவில் மற்றும் பாபா ராம்தேவ், வாழும் கலை ரவிசங்கர், சிவ்சங்கர் பாபா, மாதா அமிர்தனந்த மயி, நித்யானந்தா, பிரக்சியாதாகூர், இன்னும் ஏராளமான தனியார் மற்றும் அரசிடம் இலவசமாக அல்லது குறைந்த விலையில் அல்லது ஆக்கிரமிப்பு செய்து பல ஆயிரம் கோடி ரூபாய்களில் கோவிலைக் கட்டி இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன்?
அமிர்தானந்தமயி, புட்டபர்த்தி போன்றவர்கள், நித்யானந்தா, பாபாராம்தேவ், ஈசாவின் சத்குரு போன்றவர்கள் பல ஆயிரம் கோடிகளை உள்நாட்டில் - வெளிநாட்டில் பதுக்கி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிக்கும் டிரெஸ்ட்டை உருவாக்கி வைத்துக் கொள்கிறார்கள். கரோனா காலத்தில் கூட மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கவில்லை.
திருப்பதி கோவிலில் சொத்துக்களுக்கு குறைவு இல்லை. ஆனால், கரோனா காலத்தில் கோவிலில் பணி புரிந்த தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் தர மறுத்து விட்டது. அரசியல்வாதிகள் உள்ளடக்கிய கோவில் நிர்வாகக் கமிட்டி ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கூட கொடுக்கவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவில் முழுக்க முழுக்க தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் தான் - ஜெயலலிதா காலத்தில் திட்டமிட்டு உச்ச நீதிமன்ற அய்ந்து நீதிபதி கொண்ட அமர்வில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று நடத்தி வருகிறது. இந்த கோவில் மாத வருமானம் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கு சொல்கிறார்கள்.
அறநிலையத்துறை வரவு செலவு கணக்கு கேட்டால் தர மறுத்து கோவிலுக்குள் விட மறுக்கிறார்கள். மீறி சென்று கோவில் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கணக்குகளை மட்டும் சொல்லுங்கள் என்றால் நீதி மன்றம் செல்கிறார்கள். கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளைத் திருடி அதற்கு பதிலான போலி சிலைகளை மாற்றி வைத்தது எல்லாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல கோடிக்கணக்கான ரூபாய் கொண்ட சிலை திருட்டு மோசடிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கோவில் கருவறைகளில் பூஜை செய்யும் பார்ப்பனர்களால் மட்டுமே முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எல்லாம் கோவில் அர்ச்சகர்கள் செயல்களே - காஞ்சியில் நூறு பவுன் தங்க நகையை மாற்றி அங்கு போலி நகையை வைத்துள்ளனர். இந்த திருட்டு வழக்கில் வயதான அர்ச்சகர் ஒருவர் மட்டுமே பலிகடா ஆக்கப்பட்டார். பல ஆயிரம் சிலைகள் வெளிநாடுகளில் எங்கெங்கு யாரிடம் எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தமிழ்நாடு சிலைத் தடுப்புப் பிரிவினரிடம் பெரிய பட்டியலே உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போதே மதுரை கள்ளழகர் கோவிலுக்குச் சொந்தமான இடம் பல நூறு ஏக்கரை தனியாருக்கு பல கோடி ரூபாய் பேசி எழுபது லட்சம் முன்பணம் வாங்கிய கொடைக்கானல் பாஜக நகர தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சி மடம், மதுரை மடம், குன்னத்தூர் மடம், திருவாவடுதுறை மடம் எல்லாம் எத்தனை மருத்துவமனை, பள்ளிகள் அல்லது புதிய கோவில்கள் எத்தனை கட்டினார்கள். இவர்களிடம் உள்ள சொத்துகள் எத்தனை ஆயிரம் கோடிகள். இந்து அறநிலையத் துறைக்கு அப்பாற்பட்டது. சங்கராச்சாரியாரின் பாலியல் சீண்டலை பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் புட்டுப்புட்டு வைத்துள்ளாரே!
பாலியல் வழக்கு, கொலைவழக்கு போன்றவற்றிலும் சிக்கி சிறை சென்ற சங்கராச்சாரியாரின் முன்னிலையில் நடிகர் எஸ்.வி.சேகர், எச்.ராசா போன்ற பூணூல்கள் சமமாக இருக்கை போட்டு அமர்கின்றனர். ஆனால், ஆளுநர் ஆனாலும் ஒன்றிய அமைச்சர்கள் ஆனாலும் அவாள் காலடியில் தரையில் தான் அமரவேண்டும்.
பொன்னார் அமைச்சராக இருந்தபோது தரையில் அமர்த்தப்பட்டார். தமிழிசை கையில் கொடுக்காமல் அவருக்கு சால்வை தூக்கிப் போடப்பட்டது. சிதம்பரம் கோவில் வளாகத்தில் அமர்ந்த அவரை விரட்டிவிட்டார்கள்.
தனியார் கட்டுப்பாட்டில் என்றால் அனைத்து ஜாதியினர் கட்டுப்பாட்டில் கொடுக்க சம்மதிப்பார்களா பார்ப்பனர்கள். கோவில்கள் எங்கள் தனிச்சொத்து என்கிறார்கள். அப்படித்தான் சிதம்பரம் கோவில் வழக்கில் சொல்லப்பட்டது. அரசுத் தரப்பு அதாவது ஜெயலலிதா வழக்கில் எதிர் வாதம் செய்யாமல் அவர்கள் கையில் போய்விட்டது. கடவுளுக்கு எதிரில் கர்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் உள்ள சிதம்பர மேடையில் ‘அவாள் தவிர வேறு யாரும் ஏறக்கூடாது’ என்று இன்றளவும் தமிழில் தேவாரம் பாடி கடவுளை வழிபட அனுமதி இல்லை.
நந்தனார் கடவுளைக் காண கோவிலுக்குள் சென்றதால் அவாளால் தீவைத்து கொல்லபட்டதாக வரலாறு. அவர் நுழைந்த வாயில் கதவு இன்றுவரை மூடப்பட்டுள்ளது. அந்தந்த கோவிலை அந்தந்தப் பகுதிகளில் பல்வேறு ஜாதிகள் அடங்கிய கல்விமான்கள் பக்தியில் சிறந்தவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஊடகவியலாளர்கள் ஊர் பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஜாதிப் பாகுபாடு இன்றி நியமித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகட்டும் மற்றவர்கள் போல் பார்ப்பனர்களும் நடந்து கொள்ளட்டும் - வரவேற்போம்.
இராமேஸ்வரத்தில் ஒரு பசு மாட்டைக் காட்டி புரோக்கர்கள் மூலம் வட இந்தியாவில் இருந்து வந்த பலரிடம் பசுதானம் என்ற பெயரில் மாறி மாறி விற்று காசு பார்த்த பார்ப்பனப் புரோக்கர்களின் கதை நாளிதழ்களில் சிரிப்பாய் சிரிக்கிறது
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலை எங்களிடம் கொடு என்று கேட்பது, சாதாரண ஹிந்துக்கள் இல்லை; பார்ப்பனர் மட்டுமே. இவர்களுக்கு ஆதரவுக் குரல் தருவது பாஜகவில் பதவி சுகம் அனுபவிப்பவர்கள்.
ஏற்கெனவே வர்ணக் கோட்பாடு படிதானே கோவிலுக்குள் அனுமதி தந்தார்கள். கோவிலுக்குள் நுழைய இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டம் எல்லாம் இவர்கள் கட்டுப்பாட்டில் கோவில் இருந்ததால்தான் நடந்தது.
திமுக ஆட்சி வருவதற்கு முன் அவாள் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டுக் கோவில்கள் இருந்தபோது எத்தனை புதிய கோவில்கள் கட்டப்பட்டன. திருவாரூர் தேர் கூட முப்பது வருடங்களாக ஓடாமல் இருந்த தேரை கலைஞர் வந்துதானே சீரமைக்கப்பட்டு ஓட வைத்தார். அது மட்டும் இல்லை நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்கள் ஓடவைக்கப்பட்டது.
பல்வேறு கோவில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு, குடமுழுக்கு, கோவில் மராமத்து என்று திராவிட ஆட்சியில் தான் நடந்தது . தற்போது கூட பெரிய கோவில்களின் அருகில் எல்லாம் கோவில் சார்ந்த மருத்துவமனைகளை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்டியல் பணங்களைக் கொண்டு தான் அந்த கோவில்கள் மட்டும் இல்லாமல் வருவாய் இல்லாத பல்வேறு கோவில்கள் குறிப்பாக கிராமப்புற கோவில்கள் பராமரிக்கப்படுகிறது.
அறநிலையத்துறை சார்பில் இலவச உணவு வழங்கியது திராவிடம் தான். நிதி இல்லாத கோவில்களுக்கு இருக்கும் கோவிலில் இருந்து தரப்படுகிறது. இக்கட்டான நேரங்களில் பேரிடர் சமயங்களில் அறநிலையத்துறை சார்பாக உணவு, மருத்துவ முகாம்கள் போன்ற ஏற்பாடுகள். இதெல்லாம் காவிகள் ஆளும் மாநிலத்தில் நடக்குமா? மதத்தை வைத்து அரசியல் செய்ய ராமர், கிருஷ்ணர் கோவில் கட்டும் நாடகம் - அதுவும் வசூல் வேட்டை நடத்தி செய்கிறார்கள். இங்கு மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி. ஆனால், திராவிட ஆட்சியில் இரண்டுமே சீராக செல்கிறது.
No comments:
Post a Comment