பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

பதிலடிப் பக்கம்

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களைக் கொண்ட அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-ஆம் மாநாடு சென்னை கிறித்தவக் கல்லூரியில் கடந்த டிச. 27 அன்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், “ வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மை யான வகையில் அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. 

இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்.  கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 

1994-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். ‘மதச்சார்பின்மை என்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது.

பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலை களைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்' - என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 

"நாங்கள் பழைமைவாதிகள் அல்ல"

இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள்.

இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மய்யப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக் கொண்டவர்கள்தான். ஆனால் பழைமைவாதிகள் அல்ல!  அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்” என்று முதலமைச்சர் தாம்பரத்தில் ஆற்றிய நெருப்பு உரை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி வரை பற்றி எரிகிறது.

மதச்சார்பற்ற சமத்துவ சமூகமாக இருந்த இந்த நாட்டில் ஒரு சிலரால் வேற்றுமைகள் உருவாக்கப் பட்டன என்று அவர் பேசியது யாரைப் பற்றி என்று எல்லோருக்கும் தெரியுமல்லவா? எப்போதும் எல்லாவற்றிற்கும் தாண்டிக் குதிக்கும் பா.ஜ.க.வின் பார்ப்பனச் சிண்டுகள், இதில் தாங்கள் தலையிட்டால், ‘எங்க தோப்பனார் பூஜை ரூமில் இல்லை’ என்கிற கதையாக மாட்டிக் கொள்வோமே என்று யோசித்து, எச்சரிக்கையாக ஒரு சூத்திர அம்பினை எய்திருக் கிறார்கள்.

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டி ருக்கிறார், அதில், வழக்கமான ஆர்.எஸ்.எஸ்.சின் புரட்டுகளையே மீண்டும் உருட்டியிருக்கிறார்.

திராவிடம் என்பது கட்டுக்கதையாம்! ஆங்கிலே யர்கள் கட்டிவிட்டதாம்! இனவாதமாம்! சொல்கிறார் வானதி சீனிவாசன்!

திராவிடம் என்பது இனவாதமல்ல; இழிவுகள், ஒடுக்குமுறைகள் கொடுமைகளிலிருந்து காத்துநிற்கும் இன விழிப்புணர்வு! ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பரந்த நோக்கம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மாந்தநேயம்.

ஹிந்துத்துவா என்பது தான் மதவாதம் - மதவெறி! பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சனாதனத்தைப் பாதுகாக்க முன்னிறுத்தப்படும் ஏவல் விலங்கு!

வெள்ளைக்காரனா காரணம்

திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார். 

மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)

திராவிடர்

திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம். 

‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!

18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!

8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!

12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?

தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!

வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? 

ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே! 

பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள  திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க! 

திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?

திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?

இன்னொன்று. 

தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றத்தின் விருது வழங்கப்படவில்லை என்ற வடிகட்டிய பொய்யை வாரிக் கொட்டியிருக்கிறார் அம்மையார்.

யுனெஸ்கோ விருது

1970-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்த கல்வி ஆண்டில்,  சென்னையில் யுனெஸ்கோ மன்றம் (Unesco Mandram) தந்தை பெரியார் உள்ளிட்ட பலரையும் அழைத்துப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்ததே! அந்த அமைப்பு யுனெஸ்கோவால் உல கெங்கும் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ மன்றங்களுள் ஒன்றல்லவா? அந்த விழாவில் பங்கேற்று விருது வழங்கியவர் அன்றைய ஒன்றிய அமைச் சரும், கல்வியாளரும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் திரிகுணசென் அல்லவா? உடன் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் பேராசிரியர் ஷேர் சிங் யார்? இவர்கள் திராவிட இயக்கத்தவரா? 

அன்றைய முதலமைச்சர் கலைஞர், சட்டப் பேரவைத் தலைவர் சி.பி.சிற்றரசு ஆகியோரைக் கூட, அவர்கள் அந்தப் பொறுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங் கேற்றிருந்தாலும் திராவிட இயக்கத் தவர் என்று சொல்லி விடலாம். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் பங்கேற் றிருக்கிறாரே! அரசு விழா அல்லாத ஒன்றிலா ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்? யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? உலகம் முழுவதும் யுனெஸ்கோ கிளப் என்று உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறதே யுனெஸ்கோ நிறுவனம், அதை மறுக்கப் போகிறார்களா?

பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது, விருது வழங்கிய ஒளிப்படம், பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக இருக்கின்றன. அவ் வளவு ஏன்? விருது வழங்கப்பட்டபோது உடனிருந்த பலரும் கூட உயிருடன் இருக்கும் இந்த நிலையிலேயே 50 ஆண்டுகளுக்கு முன், இதே சென்னையில் நடந்த வரலாற்றையே மறுத்துப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டம், திராவிட இயக்கத்தைப் பார்த்து கட்டுக்கதை என்று கூறுவதா?

விருதுகளால் அளக்கப்பட முடிந்த ஆளுமையா தந்தை பெரியார்?

சிந்திக்கட்டும்

திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்வதன் மூலம் அது உண்மையாகாவிட்டாலும், மக்கள் மனதில் ஒரு சந்தேகத்தையாவது விதைத்துவிடுங்கள் என்று விவாதக் களத்திற்குச் செல்கையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையை இங்கேயும் பின்பற்றிப் பார்க்கலாம் என்று நினைக் கிறாரா அம்மையார் வானதி?

கொஞ்சமேனும் கூர்மையாகப் பேசுவார் என்று பார்த்தால், அழி வழக்குகளைத் தூக்கி வந்து கொண்டிருக் கிறார் வழக்குரைஞர், பாவம்! 

பெண்களையும், சூத்திரர்களையும் இழிவாகப் பேசும் பகவத் கீதை, பெண்களைக் கல்வி கற்கக் கூடாது என்று தடுத்த ஹிந்து மதம், பிரதிலோமம்-அநுலோமம் என்று ஜாதி மறுப்புத் திருமணத்தை இழிவுபடுத்தும் மநுதர்மம் இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு. வழக்குரைஞ ராகவும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவராகவும், தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் அம்மையார் வானதி சீனிவாசன் அவர்கள், மிச்சமிருக்கும் ஹிந்து மதக் குப்பை களையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டுச் சிந்திக்கட்டும்!

திருத்தப்பட்ட இந்திய வரலாறு கற்பிக்கப்படுமாம் - ஒன்றிய கல்வி அமைச்சர்

"‘கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் - அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அதனை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதா யம் அதை ஏற்றுக் கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்.’ என்ற முதலமைச்சரின் இந்த வரிகளோடு, அப்படியே நான் உடன்படுகி றேன்” என்கிறார்  வானதி சீனிவாசன். உடன்பட்டுத் தானே ஆக வேண்டும். வரலாற்றுத் திரிபு செய்வ தென்று தீர்மானித்துத் தானே இந்துத்துவவாதிகள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

நம் முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைநகரில் உரையாற்றிய அதே நாளில் (டிசம்பர் 27) பீகார் மாநிலம் சசாரா மாவட்டம் ஜமுஹார் நகரில் உள்ள கோபால் நாராயணன் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் அங்கமாக ஆக்கப்பட்டுவிட்ட ஒன்றிய அரசின் நிறுவனமான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR), ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரிஜினல் அங்கமான அகில பாரதிய இதிகாஸ் சங்கலன் யோஜனாவுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன பேசியிருக்கிறார்?

“Students across the country will be taught the "corrected" version of Indian history under the National Education Policy (NEP) from Vasant Panchami on January 26” 

“தேசிய கல்விக் கொள்கையின் கீழ் “திருத்தப்பட்ட” இந்திய வரலாறு நாடு முழுக்க உள்ள மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும்” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

(எப்போதிலிருந்தாம்? ஜனவரி 26 - வசந்த பஞ்சமி அன்றிலிருந்தாம்! வடநாட்டில் அன்று தான் சரஸ்வதி பூஜையாம்! ஜனவரி 26  என்றால் இந்தியக் குடியரசு நாளாயிற்றே, அதெல்லாம் நினைவிருக்குமா ஹிந்துத்துவக் கல்வி அமைச் சருக்கு? அட, 'பாவப்பட்ட' இந்தியக் குடியரசே!)

எதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார் என்பது அன்றைக்கே அம்பலமாகிவிட்டதா, இல்லையா? 

இன்று நேற்றா? இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இத்தகைய வரலாற்றுத் திரிபுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்களே! இதை எதிர்த்து நிற்கக் கூடிய அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவை யின் (Indian history Congress) மாநாட்டில் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினால், எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்களே என்று அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும்!

கண்ணாடியைப் பார்த்து முதலமைச்சர் பேசியிருப்பார் என்கிறார் வானதி அம்மையார்! டிரான்ஸ்பரண்ட் கண்ணாடிகளில் ஓடும் எழுத்துகளைப் பார்த்துப் பேசும் பிரதமர் மோடி என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

கண்ணாடி என்றதும் நினைவுக்கு வருகிறது. ‘கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்!’ என்பார்கள் வழக்கமாக! நீங்கள் பா.ஜ.க.வுக்குள் இருந்தபடியே இன்னும் கொஞ்சம் பெரிய கற்களைத் தூக்கி எறியுங்கள் - அப்போதுதான் சீக்கிரம் உடையும்! ம்ம்.. ஆகட்டும்!

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

                                                                     மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

No comments:

Post a Comment