முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
நேற்றைய தொடர்ச்சி...
உ.பி. முதலமைச்சர்
ஆனால் காவியில் திரியும் யோகி ஆதித்தனார் - தமிழும், சமஸ்கிருதமும் சிவன் வாயிலிருந்து வெளி வந்தது எனத் திருவாய் மலர்ந்தருளிய கேலிக் கூத்தையும் பார்த்தோம். அதை யார் பார்த்தது? அப்படியானால் ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பாங்குடன் தமிழுக்குக் குறைந்த தொகையும், செத்துவிட்ட மொழியான 120 கோடிப் பேரில் 20,000 பேருக்கு மட்டுமே தெரிந்த சமஸ்கிருத மொழிக்கு ரூ.650 கோடி அதாவது கோடி கோடியாக நிதி ஒதுக்கி உலகம் முழுவதும் 18 கோடித் தமிழறிந்த மக்களின் தமிழுக்கு ரூ.28 கோடி நிதி ஒதுக்கி விட்டு, செம்மொழித் தமிழ் மய்யத்தை வாட விட்டுக் - காசியில் காவிச் சங்கமம் நடத்தினால் - தமிழர்களை ஏமாற்றச் சங்கமம் நடத்தினால் தமிழர்கள் ஏமாறப் போவதில்லை.
நன்றி உணர்ச்சி
இளையராஜாவை வைத்து தமிழ்ப் பாட்டுப் பாடாமல், தமிழின் பெருமையைப் பாடாமல் - 'சமஸ்கிருத' ஜனனி ஜனனி "ஓம் சிவாய நமஓம்" என்று பஜனை பாடியுள்ளார் இளையராஜா. இசையில் சிறந்து விளங்கினார் எனக் கலைஞர் அவருக்கு பாராட்டு விழா நடத்தினார்.
அய்.அய்.டி. காசி பல்கலை.
தமிழோடு எந்தச் சங்காத்தமும் இல்லாத அய்.அய்.டி. எப்படிச் சங்கமம் ஏற்பாட்டாளர்? உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ச்சங்கம் முதலானவை கண்ணில் கருத்தில்படவில்லையா?
தமிழ் அறிஞர் இல்லை
தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், சில கவிஞர்களை கோவையில் அழைத்துச் செம்மொழி மாநாடு நடத்திய கலைஞர் எங்கே? தமிழ் அறிஞர், படைப்பாளிகள் தவிர்த்த காவிக் கூட்டம் எங்கே? பல கோடி மக்கள் பணத்தில் பி.ஜே.பி. பரப்புரையா? பகல் வேஷமா? தமிழ் சமயமொழி மட்டுமா? இல்லையே அது தமிழர்களின் உணர்ச்சி மொழி. உரிமைக் குரல் மொழி. பகுத்தறிவைப் பகலும் மொழி. தமிழ் எங்கள் உயிர்மூச்சு.
அவாள்கள்
முதலில் 2500 பேர் என்றனர். இப்போது 5000 பேராம். எதற்கு? ஒன்றிய அரசுப் பெயரில் ஹிந்துத்துவா பிரச்சாரம் செய்வதற்குத் தமிழ்ச் சங்கமம் என்று பெயர்!
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் தமிழர் - அவாள் ஒன்றிய அரசின் 'பாரதீய பாஷா சமிதி அமைப்பாளரான சாமு கிருஷ்ண சாஸ்திரி என்பதே போதும் இந்தக் காவி சங்கமம் எத்தகு யோக்கியதை என்பதை வெளிப்படுத்தி விடும். ஒருங்கிணைக்கத் திராவிடராய்க் கூட இருக்க வேண்டாம், நல்ல தமிழறிஞர் ஒருவரைக்கூட இவர்களால் நியமிக்க முடியவில்லை.
சர்வம் ஹிந்திமயம்
காசி தமிழ்ச் சங்கமம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள்கூட ஹிந்தியில் - தமிழ் சங்கமமாம் தூ! தூ!!
தமிழ் புழங்காத அய்.அய்.டிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? யாராவது பதில் சொல்லுங்களேன். நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்தைச் சேர்ப்பதற்கே அவர்கள் எவ்வளவு தயக்கம் காட்டியிருக்கிறார்கள் எனும் உண்மையை மறக்க முடியுமா? ஒழிக்க முடியுமா? அய்.அய்.டி.யில் தமிழ்த் தாய் வாழ்த்து உண்டா?
இது தந்தை பெரியார் மண்
காசிக்கும் தமிழ் மண்ணுக்கும் - தந்தை பெரியார் மண்ணுக்கும் இடையேயான உறவு என்பது ஆன்மிகம் தொடர்புடையது தானே அன்றி ஒரு துளியேனும் தமிழ் தொடர்பு உடையது இல்லை. பாரதி காசியில் சென்று கற்றுக்கொண்டதும் கூடச் சமஸ்கிருதம்தான்.
பாரதி, குமரகுருபரர்
குமரகுருபரர் சென்றதும், அங்கு நிறுவியதும்கூடப் புனித யாத்திரைக்குக் காசி வருவோர் தங்கி உணவு உண்ண, மடம் ஒன்றை நிறுவியதுதான். இதில் எங்கே தமிழ் இருக்கிறது?
எல்லாமே இலவசம் - போவது, வருவது, தங்குவது, உணவு உண்பது, சுற்றுலா என்று ஒருபுறம் போவது - பக்தி, கங்கையில் முழுக்கு. அரசியல் சுற்றுலா தவிர வேறு என்ன?
எல்லாம் பி.ஜே.பி.
அறிமுகமில்லாத தமிழ் அறிஞர்களோ, கலைஞர்களோ தேவையில்லை என அவர்கள் முடிவு செய்து, அவர்களே 9 மடத் தலைவர்களான காவிச் சாமியார்கள் உள்ளிட்டவர்களையும் சேர்த்து, எல்லாப் பதிவையும் செய்துமுடித்துவிட்டு (மேனாள் ஆர்.எஸ்.எஸ். ராமசுப்பிரமணியமே சொல்கிறார் 'என்னை அழைத்தார்கள். பலமுறை காசிக்குப் போய் வந்து விட்டேன். நான் 'வரவில்லை' என்று சொல்லி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். எனவே இப்படி ஒரு தகவலை 'இந்து' முதலிய ஏடுகளில் வெளியிட்டுத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறார்கள்.
விண்ணப்பிக்க வேண்டுமாம்
அறிஞர்கள், வல்லுநர்கள் ஏன் திருவள்ளுவர், இளங்கோ அடிகள் கூடப் பதிவு செய்தால்தான் அழைப்பீர்களா? என்று கேட்கிறார் திருமதி ஆண்டாள் பிரியதர்சினி, வானொலி நிலைய மேனாள் இயக்குநர், சிறுகதை எழுத்தாளர்.
காவிகள் சங்கமமே
இது ஒரு காவிகள் சங்கமாம், பா.ஜ.க. காசு கொடுத்து ஒன்றிய செலவில் கூட்டும் கூட்டம் என்பதற்குச் சான்று தமிழ்க் கூட்டம் தொடர்பான சிறப்பு மலர் வெளியீடு ஒன்றே போதும்.
வெளித் தோற்றத்திற்கு 216 பேரை உள்ளடக்கிய பன்னிரண்டு குழுக்கள் - இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், யோகா வல்லுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், (சித்த மருத்துவம் கிடையாது) இசைக் கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், வணிகர்கள் வலைப் பதிவாளர்கள் என ஏகப்பட்ட வகையினர்.
பா.ஜ.க. உறுப்பினரே
ஆனால் இதில் கலந்து கொள்வதற்கான முழு முதற் தகுதி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள். இரண்டாம் தகுதி பா.ஜ.க. உறுப்பினர். இது வெளியே சொல்லிடாமல் நடைமுறைப்படுத்திய தகுதி - இதை பா.ஜ.க.வினர் வெளியிட்ட விளம்பரங்களிலும் அய்.அய்.டி.யின் பின்புலத்தினாலும் அறியலாம்.
பிரதமர் தொகுதி
ஆகவே இது பா.ஜ.க. தலைமை அமைச்சர் மோடி கலந்துகொண்டு வாரணாசி எனும் காசியான அவர் தொகுதியில் நடைபெறும் தமிழ்நாட்டு பா.ஜ.க.வினரின் மாநாடு. காசி அனுமந்தகாட் எனும் பகுதியிலே முழுக்க முழுக்க யார் உள்ளனர் என்பதையும் உணர்த்தும்.
போட்டி வேறாம்
பா.ஜ.க.விற்குள் கடுமையான போட்டாப் போட்டி நிலவியது. அதிலும் கொஞ்சம் உள்குத்து, மல்யுத்தம் அண்ணாமலை கோஷ்டி, எச். ராஜா அவாள் கோஷ்டிக்கு, வானதி சீனிவாசன் கோஷ்டிக்கு என ஆளாளுக்குத் தங்கள் 'திருக் கோஷ்டி'களுக்குக் காசி செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளனர் என்பதையும் அறிகிறோம். எனவே தேர்ந்தெடுக்கப்படும் தகுதியும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சிந்தனைதான்.
பாரதிய பாஜா சமிதி
பாரதிய பாஷா சமிதி, பா.ஜ.க. அரசின், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை என்று கூறுவதை, ஒன்றிய அமைச்சர் கல்விக்குரியவர் 'தேசிய கல்விக் கொள்கை அடிப்படை' என்றே கூறியிருக்கிறார். நல்ல வேளை ஒரே மொழி - ஹிந்தி என்று சொல்லவில்லை. இன்னும் கொஞ்சக் காலம் ஆகலாம்.
தமிழ் முகமூடி
'தமிழ், தமிழ்' எனும் ஆயுதத்தைக் கையில் ஏந்தி நம்மை அழிக்கப் பார்ப்பதன் வெளிப்பாடுதான், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, 'திருக்குறள்' என்பது, தமிழன் போல் வேட்டி சட்டை அணிவது, 'தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசுவதெல்லாம் முகமூடிகள்.
தமிழ்நாடு முதலமைச்சர் இல்லையே
தமிழ்நாடு முதலமைச்சர் 8 கோடி மக்களின் முதல் திராவிட மாடல் தமிழரசு நடத்தும் தளபதி மு.க.ஸ்டாலினையும் உண்மையான தமிழ் அறிஞர்களையும் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டு, தமிழ்நாட்டிற்கு 1500 கி.மீ. தள்ளிக் காசியில் தமிழுக்கு விழா என்று யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்? எங்கள் தமிழன் வாக்குக்குப் புதிய அரிதாரம் பூசிய ஒத்திகையா? எவரும் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். இது தந்தை பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி நடக்கும் கலைஞரின் வாரிசு ஆட்சி நடத்தும் மண்.
அறிவியல் தமிழ் இல்லை
அறிவியல் தமிழைப் புறக்கணித்து, உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வுகளைப் புறக்கணித்து, ஆன்மீகம் மட்டுமே தமிழ் எனப் பஜனை பாடும் மாய்மால வேலை.
வரிப்பணம் வீண்
மக்கள் வரிப் பணத்தில் ஹிந்து மத சித்தாந்தத் தைப் பரப்பப் - பன்முகத் தன்மை உடைய நாட்டில் தமிழ் மொழியின் பெயரால் நடத்தப்படும். அரசியல் சித்து விளையாட்டே தவிர வேறு இல்லை - இந்தக் காவி சங்கமம்.
ஆன்மீகம்
தமிழனையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்று கூறித் தென்காசி, சிவகாசி என்று பேசி, குமரகுருபரரைப் பற்றிப் பேசும் விழாவில் தமிழ்நாடு சிவமயமானது, சக்திமயமானது எனில் வைணவர்கள் என்ன சொல்வார்கள்? திருமாலைப் பற்றிப் பேசவில்லை என்பர் வைணவர்.
ஊடக ஊது குழல்கள்
மொத்தத்தில் காசியில் நடத்தியது குடமுழுக்குப் போலத் தான் தோன்றியது. தமிழைக் காப்போம் என்று திராவிட இயக்கம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது என்று கூறும் பார்ப்பனர்கள் - ஆத்திலே மக்கள் தமிழில் பேசாமல் அத்திம்பேர் தமிழ், அம்மாமி தமிழ் பேசி விட்டுத் திராவிட இயக்கத்திற்கு எதிராக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்வ தையும் காண முடிகிறது. பார்ப்பனர்கள் பா.கி. சிறீராம் - வசந்த் - சிறீராம் ஆகியோர் வலதுசாரி, பத்திரிகையாளர் என்றபோர்வையில் வரும் பா.ஜ.க. முகமூடிகள்.
ஆதாரங்கள்
காசி காவி சங்கமம் என்பதற்கு இரண்டாவது ஆதாரமாக விளங்குவது, இரண்டாவது ரயிலைக் காவித்துண்டு போட்டு அனுப்பி வைத்தவர்கள் பா.ஜ.க.வினர். முதல் குழுவை அனுப்பி வைத் தவர் தமிழ்நாடு முதலமைச்சரோ, தமிழ்நாடு அமைச்சர் களோ அல்ல - சனாதனம் பேசும், திருக்குறளைத் திராவி டத்தை அவமதித்துப் பேசி வரும் ஆளுநர் ஆர்.என். ரவி.
நிகழ்ச்சி ஆரம்பம் முதல் சமஸ்கிருத கோஷம்!
ஹிந்திப் பேச்சு தமிழ்ச் சங்கமம் ருத்ரகோஷம்.
அதற்கு ஒத்து ஊதுவது போல் தமிழ்ப் பாட்டே இல்லாமல் இசை நிகழ்ச்சி நடத்திய இளையராஜா.
இப்படி எல்லாம் எங்கும் காவி, எதிலும் காவி - பாரதி பாடலைத் தவறாகப் பாடிய மேடை.
மொத்தத்தில் காசியில் பஜனை முழக்கம், கோஷ்டிகானம் கேட்டோம். காவி சங்கமம் பார்த்தோம். தமிழைப் புறந் தள்ளி தமிழ் மாநாடு என்று நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும் கேலிக் கூத்து இது!
No comments:
Post a Comment