பெரியார் 1000 பார்ப்பனர்களுக்கு உறுத்துகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

பெரியார் 1000 பார்ப்பனர்களுக்கு உறுத்துகிறது!

ஆர்.எஸ்.சின் வார ஏடான விஜயபாரதம் (9.1.2.2022) "மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் பெரியார் 1000 நிகழ்வைத் தடை செய்க!" என்ற தலைப்பில் எச்சரிக்கை! என்று குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்றதிலிருந்து திட்டமிட்டரீதியில் பள்ளிக் கல்வித் துறையைச் சீரழித்து வருகிறது. அதில் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்கள் விழிப்புடன் இருந்து எதிர்த்துப் போராடவில்லையென்றால் மாணவர்கள் எதிர்காலம் சீரழிந்து விடும் என்பதை உணர்ந்திட வேண்டும்" என்று எச்சரிக்கிறது பார்ப்பனீய விஜயபாரதம்.

ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தி தனிச் சொத்து என்று சொன்னவர் தந்தை பெரியார்.

ஆனால் காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து கடவுள் அருள் இல்லையானால் தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" (கல்கி 8.4.1958).

இந்த இரண்டையும் சலனமற்ற சபலமற்ற வகையில் சிந்திப்பவர்களுக்கு எது சரியானது என்பது விளங்காமற் போகாது. 

'தீண்டாமை க்ஷேமகரமானது' என்ற மனித குல விரோதி சங்கராச்சாரியார் பற்றி பள்ளியில் பாடத் திட்டத்தில் வைத்தால் 'பலே பலே' என்பார்கள்.

தீண்டாமையை மட்டுமல்ல - அதன் ஆணி வேரான ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற - பாடுபட்ட மனிதகுல மாண்பாளர் தந்தை பெரியார் பற்றி பள்ளிகளில் அறிவார்ந்த வகையில் போட்டிநடத்திப் பரிசு அளித்தால் பற்றிக் கொண்டு எரிகிறது 'விஜயபாரத' வில்லர்கள் கூட்டத்துக்கு. பிஜேபி ஆட்சி செய்யும் கருநாடக மாநிலத்தில் கல்வி திட்டம் எந்த யோக்கியதையில் உள்ளது?

கருநாடக கல்வித் துறையால் திருத்தப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கன்னட பாடப் புத்தகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ள பேச்சு "நிஜவதா ஆதர்ஷ புருஷா யாராகபேகு?" (ஒரு சிறந்த முன்மாதிரி யார்?) என்ற பாடத்தின்கீழ் வருகிறது.

ஹெட்கேவர் உரை பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத்சிங் குறித்த பகுதி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி இலக்கியவாதிகளான ஏ.என்.மூர்த்தி ராவின் 'வியாக்ரகீதே', பி.லங்கேஷின் 'முருக மாட்டு சுந்தரி,' சாரா அபூபக்கரின் 'யுத்த' போன்ற நூல்களும் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற பாடப் புத்தகங்களில் வேதவாதியான மறைந்த பன்னஞ்சே கோவிந்தாச்சார்யா மற்றும் சதாவதானி ஆர்.கணேஷின் "சிரேஷ்ட பாரதிய சிந்தனைகள்" ஆகிய நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஹெட்கேவரின் உரையைச் சேர்ப்பதற்கு அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு (AIDSO) மற்றும் அகில இந்திய சேமிப்புக் கல்விக் குழு (AISEC) போன்ற அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை பாடப் புத்தகங்களில் திணிக்க மாநில பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது .

இப்படி மதவெறியை மாணவர்கள் உள்ளத்தில் விதைப்பது தானே நஞ்சு!

பெரியாரைப் பற்றி பள்ளிகளில் போட்டி நடத்தக் கூடாது என்று சொல்பவர்கள் யார்?

"ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியையொட்டி மயிலாப்பூரில் (14.1.2018) விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கியது.  சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 9-ஆவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2018 ஜனவரி 24-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 24 விவேகானந்தர் ரதங்கள் வடிவமைக்கப்பட்டு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்தானந்தஜி மகராஜ் பூஜை செய்து விவேகானந்தர் ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் ரதங்கள் கோவிலின் 4 மாட வீதிகளை வலம் வந்தன. ரதங்களில் விவேகானந்தரின் சிலைகளும், போதனைகளும் இடம் பெற்றன. இந்த ரதங்கள் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று விவேகானந்தரின் போதனைகளை பரப்பின. இதுகுறித்து ஹிந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை அறங்காவலர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாவது:-

இந்து ஆன்மிக கண்காட்சி குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரதங்கள் 17-ஆம் தேதி (ஜனவரி 2018) முதல் 25-ஆம் தேதி வரை 9 நாட்கள் 1,200 பள்ளிகளுக்கு சென்று 3 லட்சம் மாணவர்களை சந்திக்க வைக்கப்பட்டது. தனிமனிதன், சமுதாயம் மற்றும் நாட்டுநலன் கருதி ஒரு பேரியக்கமாக யாத்திரை நடத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடியும் என்ற ஆர்வத்தை அனைவரிடமும் வளர்க்க முடியும். 6 பண்புகளின் விளக்கங்களும் ரதத்தில் தெரிவித்து இருப்பதன் மூலம் பார்வையாளர்கள் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள இந்த யாத்திரை உதவும்" என்று தன் பார்ப்பனீய வேதப் புத்தியைத் திறந்து அவிழ்த்துக் கொட்டினார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

இப்படி பார்ப்பனீயத்தை, ஒழுக்கக் கேடான வேத, இதிகாச, புராணங்களை மாணவர்களிடம் திணித்தால் திரிநூலார் பார்வையில் குற்றமில்லை. பகுத்தறிவையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கொள்கையாகக் கொண்ட தந்தை பெரியாரைப் பள்ளிக்குக் கொண்டு சென்றால்  பதறுகிறதே பார்ப்பனீயம். காரணம் தங்களின் வஞ்சகமும், ஆதிக்கமும் அம்பலமாகி விடுமே என்ற அச்சம்தான்!

No comments:

Post a Comment