சென்னை,டிச.31- தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட தோடு, அதற்கான தேர்வையும் நடத்தி முடித்தது. அந்த வகையில் குரூப்-1, குரூப்-4 உள்பட பல்வேறு பதவிகளில் வரும் ஏராளமான பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டு இருந்த மாதங்களில் வெளியாகும் என்று தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை.
உதாரணமாக, 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவு, முதலில் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. பின்னர், டிசம்பர் மாதம் முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் தான் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற முழு விவரத்தை தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-
830 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவுக்கான தேர்வு முடிவு ஏற்கெனவே ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும்.
7,301 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு, அக்டோபரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும்.
1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஜனவரி மாதம் வெளியிடப்படப்படும்.
92 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட மேலும் 8 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சென்னையை தூய்மையான நகரமாக்க ஆலோசனை வரவேற்கப்படுகிறது
சென்னை,டிச.31- சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லாத நகரமாக்கவும் பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னைமாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளையும் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற மாநகரமாகவும், குப்பை இல்லாத மாநகரமாகவும் சான்று பெற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை இருந்தால், மாநகராட்சியின் solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை-600 003என்ற முகவரியில் கடிதம் மூலமும் தெரிவிக்கலாம்.
-இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment