முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
'இந்து', 'தினமலர்' ஏடுகளில் விளம்பரம் 'காசியில் தமிழ் சங்கமம்' 2500 பேர் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். 'போக்குவரத்து தங்குமிடம் சுற்றுலா இலவசம்' என்ற விளம்பரம் - நாக்கில் தேனைத் தடவியது அவ்விளம்பரம் - அப்போதே பலருக்கும் தெரியவில்லை; இது ஒன்றிய அரசுப் பணத்தில்காவிகளின் பஜனைமடம், தமிழுக்கும் இதற்கும் வடமொழியில் சொல்வார்களே 'ஸ்நானப் பிராப்தி' என்று - எவ்விதத் தொடர்பும் இல்லை என்பார்களே, அது போன்றதே!
தமிழ் அறிஞர்களாம்!!
தமிழ் நாட்டிலிருந்து முதலில் சென்ற அணியில் இருந்த தமிழ் அறிஞர்கள்!! பொன். ராதாகிருஷ்ணன், பழைய போலீஸ்காரர் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று செல்லமாக அரசியலில் அழைக்கப்படும் அண்ணாமலை.
தமிழ்நாடு ஆளுநர்
அதைவிடக் கொடுமை தமிழ் தெரியாத, சனாதனம் பேசும், திராவிடம் என்பது மண். திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளிக்கும் தத்தித் தத்தி நான்கே வார்த்தை தமிழ் பேசும் ஆளுநர் ஆர்.என். ரவி.
இவர்களெல்லாம் தமிழை வளர்க்கப் புறப்பட்ட புதிய புல்லுருவிக் கூட்டம்!
பொதிகையில்
காசிக்கும், தமிழ் நாட்டிற்கும் உள்ள தொடர்பைப் போதாத குறைக்குப் பொதிகைத் தொலைக்காட்சி 4 பேர் கூடி காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை சமயத் தொடர்பை, அகத்தியர், அதிவீர பாண்டியர், பாரதியார், திருமணத்தில் பார்ப்பனக் கூட்டம் நடத்தும் காசி யாத்திரை, குமரகுருபரர் காசிப் பயணம் என்று கதறினார்களே ஒழிய காசிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று கூறவில்லை.
எனவே 'காசி தமிழ் சங்கமம்' என்பது ஒன்றிய அரசின் காசில் காவிகளின் பஜனைக் கூட்டம், இந்துத்துவாக் கூட்டம் என்பது ஒவ்வொரு நிகழ்விலும் தெரிந்தது.
நிகழ்ச்சி அழைப்பாளர்கள்
இதில் வேடிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பாடி நிகழ்ச்சி நடத்தாத சென்னை அய்அய்.டி.யும், 'மண்ணுருண்டை மாளவியா' என்று பெரியார் அழைத்த மாளவியா தொடங்கிய, சுப.வீ. குறிப்பிட்டதைப் போல் மாளவியா 'இந்துப் பண்பாடு இந்துச் சமயம் பரப்புதலுக்கென்றே தோன்றிய காசி இந்துப் பல்கலைக் கழகம், காவி முதல்வர் ஆளும், தலைமை அமைச்சர் தொகுதியில் அமைந்த பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு தமிழுக்கே சிறிதும், அணுவும் தொடர்பில்லாத இரண்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து ஒன்றிய அரசின் காசில் நடத்தும் காவிகள் கூட்டம், மாநாடுகூட அல்ல.
காசி பல்கலைக் கழகம் எப்படிப்பட்டது? 1978 வாக்கில் காசி பல்கலைக் கழகத்தில் கல்வியாளர் சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைக்க பாபு ஜெகஜீவன் ராம், பட்டியலினத்தவர் - பெரும் செல்வந்தர் வந்தபோது மாணவர்கள் தகராறு செய்தனர். அதோடு நின்று விட்டால் பரவாயில்லை - பட்டியலினத்தவரை இழிவு செய்யும் வகையில் அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டது என்று கங்கை நீரை எடுத்து வந்து கழுவினார்கள்.
இந்தஉண்மையை பாபு ஜெகஜீவன் ராமின் மகள் மீரா அம்மையார் எடுத்துக் கூறினார். அதுமட்டுமில்லை - தான் அவமானப்பட்டதை சென்னையில் மயிலை மாங்கொல்லையில் பேசிய ஜெகஜீவன் ராம் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கூறித் தந்தை பெரியார் மண்ணில் இதைக் கூறாமல் வேறு எங்குப் போய்க் கூறுவது என்று கேட்டார். கல்வி நிறுவனம் அதற்கு இன்று வரை வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை.
அய்.அய்.டி. தலைவரோ காமகோடி. ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பதவிகளை உயர் ஜாதியினரைக் கொண்டு நிரப்பும் தலைவர் கொண்ட அமைப்பு. காசிப் பல்கலைக் கழகத்தில் 'பாரதி இருக்கை' என்று தொடங்கிச் செயல்படாத பல்கலைக் கழகம் வாரணாசி பல்கலைக் கழகம்.
பா.ஜ.க. கூட்டம்
பா.ஜ.க. நடத்தும் கூட்டம் என்றால் அவர்கள் என்ன கூத்தடித்தாலும் நாம் கவலைப்படவோ, கருத்துச் செலுத்தவோ போவதில்லை. ஒன்றிய அரசுப் பணத்தில் பா.ஜ.க. கூட்டம் எனும் போதுதான் கவலைப்படுகிறோம். கடுமையான கருத்துச் சொல்கிறோம்.
காசி தமிழ்ச் சங்கம் புதியதல்ல. இது 1813ஆம் ஆண்டுக்கும் முற்பட்டது.
மோடி வேடம்
தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்துகொண்ட 'காசிதமிழ்ச் சங்கமம்' எனும் 'காசி காவிச் சங்கமம்' எனும் நிகழ்வு நடை பெற்றுள்ளது. அதில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்து உண்மை. தமிழ்நாட்டு வேட்டி, சட்டை, துண்டு போட்ட வேடம் கூடுதல். கொடுமையிலும் கொடுமை, தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கருத்தியலார் இல்லாத மேடை இதில் எந்த அடிப்படையில் மேடையில் அண்ணாமலை?
வரவேற்பாளர்கள்
இதன் ஆரம்பமே சறுக்கல்
'காசி தமிழ் சங்கமம்' 'தமிழகத்தின் முதல் குழுவை பிரதமர் மோடி வரவேற்பார்' அண்ணாமலை தகவல் 'பொன் ராதாகிருஷ்ணன் அருகிலிருக்க, காசியில் பிரதமர் வரவேற்பார்' என்று அறிவிக்க இவர் யார்? இவர் என்ன அய்.அய்.டி. துணைவேந்தரா அல்லது காசிப் பல்கலைக் கழகத் துணைவேந்தரா?
கோயில் குட முழுக்கு
காசியில் நடைபெற்றது காசி தமிழ் சங்கமம் அல்ல, ஏதோ கோயில் குடமுழுக்குப் போல உள்ளது என்று பா.ஜ.க.வின் மேனாள் விசுவாசி, மேனாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் ராமசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார் என்றாலே காசி சங்கத்தின் லட்சணம் புரிகிறது.
மானங் கெட்ட மடாதிபதி சூரியனார் ஆதீனம்
அண்ணாமலையை, எச். ராஜாவை புகழ்ந்தது மட்டுமல்லாது, பாரத்மாதாகி ஜே என்று கூறி "இந்தியத் தலைமை அமைச்சர் எட்டு ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினார். இனியும் அவருடைய ஆட்சி தொடர வேண்டும்" எனும் அவலம் தமிழாக ஒலித்தது. இதுதான் ஆதீனம் செய்த தமிழ்த் தொண்டு.
எல்லாமே வாக்குச் சீட்டிற்குத்தான்
எப்படியாவது தமிழர்களின் வாக்குகளைக் கைப்பற்றி விடலாம் என அவர்கள் மொழியிலே சொன்னால் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார்கள். அண்ணாமலை சொல்கிறார் தமிழ் மக்கள் கைக் குழந்தையோடு கொட்டும் மழையில் வரவேற்றார்கள் என்று.
வஞ்சனை புரிவோர் வாய்ச் சொல் வீரர்
தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்கிற, தமிழுக்கு என்று துரும்பைக்கூட எடுத்துப் போடாத பிரதமர் திருக்குறளில் ஒன்றிரண்டையும் சொல்வதால், தமிழர் உடையில் வேட்டிச் சட்டையில் வந்தால் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.
ஊது குழல்கள்
பிஜேபி ஊது குழல் இந்துத்துவா நடிகை கஸ்தூரி, தன்னை அழைக்கவில்லை என்று பொருமுகிற நேரத்தில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்வு 100 விழுக்காடு அரசியல் நிகழ்ச்சி தான் என்று தந்தி உரையாடலில் கட்டியம் வாசிக்கிறார். பாவம் இந்த ஊது குழல் எப்போது கட்சியிலிருந்து ஆறு மாதம் பதவி நீக்கமோ?
அரசுப் பணத்தில் ஆட்டம், பாட்டம்
ஆகவே இவர்கள் அரசுப் பணத்தில் அடிக்கும் கொட்டம். நமசிவாயா எனும் முழக்கம், 2024 தேர்தலில் தமிழ் மண்ணில் எப்படியாவது காலூன்றி விடுவதற்காகவே.
திராவிடா! விழி! எழு! நட!
இவர்களின் கூத்தை, அரிதாரங்கள் பூசி வரும் நாடகத்தை "ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும் விழித்து விட்ட தமிழனை வீழ்த்திட முடியாது" என்று கூறிய பதிலே அவர்களுக்குப் புரிய வைக்கும் 'திராவிடா' விழி! எடு! நட! அதுதான் தமிழ் மக்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தரும் முழக்கம்.
கோவை பி.ஜே.பி.
கோவையிலிருந்து 83 பேரை அனுப்புகிறார்கள். யாரை? கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், இசைக் கலைஞர்கள். எனவே அங்கே ஒரு கண்காட்சியை நடத்தப் போகிறார்கள் போலும். இவர்களை வழியனுப்பியது கோவை மாநகர பா.ஜ.க.வினர், சங்கிகள், காவிக் கட்சியினரே.
இளையராஜா
'காசி தமிழ் சங்கம விழா' என்று பெயர். இதில் தொடக்க நாள் இசை யார் தெரியுமா? மோடிக்கு ஜே போடும் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் பாடிய தமிழ்ப் பாட்டு எனும் வடமொழிப் பாட்டு, சமஸ்கிருதப் பாட்டு, 'ஜனனி, ஜனனி' 'ஜன்ம வாகினி' 'ஓம் சிவோகம்'. இவர் இசையமைத்த சிம்போனியில் வெள்ளைக்காரன் பாடுவது போல் பாடியுள்ளார்.
பேசிய பேச்சு
பிரதமர் மோடி தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததற்கு "பெருமை மிகு இந்த காசி நகரில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை நினைத்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்" என்று உருகிக் கூவினார்.
முத்துச்சாமி தீட்சதர் காசியில் கங்கையில் மூழ்கினாராம். நம்புங்கள் அவர் கையில் வீணையைக் கொடுத்தாராம். கதை அளக்கிறார். நம் கேள்வி? கங்கையில் மூழ்கினால்தான் சரசுவதி வருவாளா?
காவேரி, வைகை, தாமிரபரணியில் மூழ்கினால் சூத்திரர் நிறைந்தபூமி என்பதால் வர மாட்டாளா?
முத்துச்சாமி தீட்சதரைப் பேசும் இளையராஜாவுக்கு தமிழிசை மூவர் முத்துத்தாண்டவர், மாரிமுத்து, அருணாசலக் கவி ஆகிய சூத்திரர்கள் நினைவுக்கு வரவில்லையே. அவர்கள் பாடல்கள் அனைத்தும் இசைப் பாடல்கள்தானே.
இளையராஜாவிற்குத் தமிழிசை மூவரையோ, அருணாசலக் கவிராயரின் நாடகமோ தெரியாதா? திருவையாற்றில் தமிழ்ப் பாட்டுப் பாடியதால் 'தீட்டாயிற்று' என்ற அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் நினைவிலிருக்கட்டும்.
தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் இல்லையென்றால் இளையராஜா உள்ளிட்ட தமிழின இசைக் கலைஞர்களின் நிலை என்ன? தமிழன்தான் கொண் டாடினான். திருவரங்கம் கோயிலுக்குக் கொட்டிக் கொடுத்த போதும் ஜீயர் தொட்டு விட மாட்டார்.
காவித்துண்டு
காசிக்குச் செல்வோருக்குக் காவித்துண்டு போர்த்தி அனுப்பினார்கள் என்றால் காவி, தமிழர் அடையாளமா? என்று கேட்கிறார் நாஞ்சில் சம்பத்.
தமிழும் சமஸ்கிருதமும்
தமிழை சமஸ்கிருதத்தோடு ஒப்பிட்டுப் பேசியதோடு தமிழைக் காக்கத் தவறினால் நாட் டுக்கே நட்டம் என்று திருவாய் மொழிந்தருளுகிறார். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகச் செய்யும் பிரதமர் என்பதை மறந்து பேசுகிறார். ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்க ஏதேனும் ஏற்படுத்தினாரா? திமுக பங்கேற்ற காங்கிரஸ் அரசில் 8 பல்கலைக் கழகங்களில் தமிழ் உண்டு. இவர்கள் நடத்தும் கேந்திரியப் பள்ளிகளில் தமிழ் கிடையாது. இந்திக் காதலர்கள் 2024 தேர்தலுக்குச் செய்யும் ஜெகஜாலப் புரட்டு காசி சங்கமம்.
(தொடரும்)
No comments:
Post a Comment