தாராபுரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா - பெரியார் நேசன் இணையர்களின் இல்லத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்.
யாழ் பெரியார் இல்லத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். யாழ் பெரியார் இல்லம் கல்வெட்டை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். யாழ் மதிவதனியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் இனிப்பை வழங்கினார். அப்போது வெளிச்சம் தொலைக்காட்சியில் பணிபுரியும் தோழியர் தனது மகளுக்கு பெயர் வைக்கும்படி தமிழர் தலைவரை கேட்டுக் கொண்டார். அமைச்சர் அந்தக் குழந்தையை ஆசையுடன் வாங்கி வைத்துக் கொண்டார். ஆசிரியர் அவர்கள் குழந்தைக்கு "அறிவுச்செல்வி" என்று பெயர் சூட்டினார். பெயரைக் கேட்டதும் அங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓடி, 'அறிவுச்செல்வி', 'அறிவுச்செல்வி' என்று எல்லோரும் அந்த பெயரை உச்சரித்தனர். இறுதியாக யாழ்மதிவதனி, தமிழர் தலைவருக்கும் அமைச்சருக்கும் ஒலிபெருக்கியில் நன்றி கூறினார்.
மாவட்ட பொறுப்பாளர்கள், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், மாவட்ட தலைவர் கணியூர் கிருட்டிணன் மற்றும் பல்வேறு தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
14 ஆண்டுகள் கழித்து தமிழர் தலைவர் அங்கே வருகை புரிந்ததால், பொதுமக்கள் அவரைக் காண ஆவலுடன் காத்திருந்து கண்டு மகிழ்ந்தனர். சிலர் அவரைப் பார்த்த பிறகு 30 ஆண்டுக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இப்பவும் இருக்காரு என்று ஆசையும் வியப்பும் கலந்து தங்களை மறந்து பேசினர். அதை எடுத்துக்காட்ட தானோ என்னவோ தமிழர் தலைவர் வேகமான நடையில் நடக்க, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் அவர் பின்னே ஓட வேண்டி இருந்தது.
No comments:
Post a Comment