10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசின் 103ஆம் சட்டத் திருத்தம் சமூக நீதியின் தத்துவத்தையே ஆயிரம் அடிகளின் கீழ் குழி தோண்டிப் புதைப்பதாகும்.
தொடக்க முதலே திராவிடர் கழகம் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது.
இப்பொழுது மட்டுமல்ல, 1979இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு - ஆண்டு வருமானம் ரூ.9000த்தின் கீழ் உள்ளவர் களுக்குத் தான் என்று ஆணை பிறப்பித்த அந்தத் தருணத் திலேயே, கொஞ்ச நேரத்தைக்கூட மிச்சம் வைக்காமல் அனைத்துக் கட்சி முன்னணியினரையும் கூட்டி களம் கண்டவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
அந்த ஆணையையே எரித்து கோட்டைக்குச் சாம்பல் அனுப்பி வைக்கும் போராட்டத்தையும் நடத்தியதுடன் நாடெங்கும் மாநாடுகளைக் கூட்டி, பேரணிகளை நடத்தி உடன்பாடுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தோழர்களையும் அம்மாநாடுகளில் பேரணிகளில் பங்கு கொள்ள வைத்தது திராவிடர் கழகம்.
தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய காரணத்தால் - தேர்தலில் தோல்வியை கண்டறியாத எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தோல்வியைச் சந்தித்தது; இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றது.
பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பொருளாதார அளவுகோல் என்ற சமூக அநீதிக் கோடாரியின் மூலம் வெட்டிப் பிளந்ததை தந்தை பெரியாரால் சமூகநீதி உணர்வூட்டப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் ஏற்காமல் அ.இ.அ.தி.மு.க.வைப் படுதோல்வி அடையச் செய்தனர்.
இதனால் பெரும்பாடம் கற்ற எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 31 விழுக்காட்டை 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.
42 ஆண்டுகளுக்குப்பின், எம்.ஜி.ஆர். செய்த அதே தவறினை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்திருப்பதன் மூலம், பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் பட்டியலினம், சிறுபான்மையின மக்களிடமும் 2024இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மரண அடியை வாங்கப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
இதில் வருத்தப்பட வேண்டியதும், கண்டிக்கத்தக்கதும் என்ன? 103ஆம் சட்டத் திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துச் சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்தில் (12.11.2022) அஇஅதிமுக கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததுதான்!
இந்தப் பிரச்சினையில் கருத்து மாறுபாடோ அல்லது வழிகாட்டும் நல்ல தன்மையோ அ.இ.அ.தி.மு.க.வுக்கு இருந் திருக்குமேயானால், அதனை அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அல்லவா அடித்துக் கூறி இருக்க வேண்டும். அதுதானே எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. செய்திருக்க வேண்டிய ஜனநாயகக் கடமை! மாறாகப் புறக்கணித்திருப்பது என்பது, மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தை ஆதரிப்ப தாகத்தான் பொருள்படும். எதிலும் அரசியல் என்பது ஆபத்தான அணுகுமுறையாகும்.
பிஜேபியின் கட்டுப்பாட்டில்தான் அ.இ.அ.தி.மு.க. (எந்தப் பிரிவாக இருந்தாலும்) இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே பரவலாக, வெகு மக்கள் மத்தியில் இருந்து வருவதை அ.இ.அ.தி.மு.க.வின் இத்தகைய அணுகுமுறை மேலும் வலிமையாக உறுதிப்படுத்திக் கொண்டு விட்டது. இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால் தனக்குத்தானே குழி பறித்துக் கொண்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் உறுதியாக முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் கட்சிகள், குறிப்பாக தமிழ்நாட்டு மண்ணின் மனோபாவம் அறிந்து - சமூகநீதிப் பயிருக்கு உரமாகவும், நீராகவும், காவலாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த நொடியிலேயே அதன்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட சட்டரீதியான கருத்து - அறிக்கை தமிழ்நாடு அரசு கூட்டிய சட்டமன்றக் கட்சிகள் கூட்டத்தின் தீர்மானத்திலேயும் எதிரொலித்திருப்பது - சிறப்பானதாகும்.
சமூகநீதிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு எப்பொழுதுமே முன் வரிசையில் நின்று வழிகாட்டும் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையிலும் உறுதியான வழிகாட்டும் கடமையைச் செய்யும்.
நாளை (15.11.2022) திராவிடர் கழகம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டமும் இதற்குக் கட்டியம் கூறும்.
வெல்லட்டும் சமூகநீதி!
வீழட்டும் சமூக அநீதி!!
No comments:
Post a Comment